Wednesday, February 14, 2018

இயங்கியலைக் கொண்டு விஞ்ஞானத்தை வரையறுத்தல்

இற்றைத் தேதியில் விஞ்ஞான முறையை ஆளுகிற தத்துவம் கார்ல் பொப்பரின் (Karl Popper) செயலறிவினூடு பொய்ப்பிக்கப்படத்தக்கதாயிருத்தல் (Empirical Falsification). விஞ்ஞானம் எதையும் நிறுவுவதில்லை. அதன் இயக்கம் முன்னைய முடிவுகளைப் பொய்யாக்குவதாகவே இருக்கிறது. இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது விஞ்ஞானம் - என்பதுதான் இத் தத்துவம். கணிதத்தில் (தர்க்கத்தில்) தொகுத்தாய்வு முறை என்றொன்று உண்டு (Induction Method). ஒவ்வொரு தரவும் 'உண்மையை' உறுதிப்படுத்துவதாகக் கொள்ளுகிற இயக்கம் அது. நாம் காகமெல்லாம் கறுப்பு என்பதை உண்மையாக எடுத்தோமெனின், நாம் காண்கிற ஒவ்வொரு கறுப்புக் காகமும் அந்த 'உண்மையை' அதிகமதிகம் நிறுவுவதாகக் கொள்ளத் தலைப்படுகிறோம். இது மேற்படி தத்துவத்தால் நிராகரிக்கப்படுகிறது. இந்த இயக்கம் விஞ்ஞானமல்ல. இந்த புதிய அறிவுடன் இந்தப் பத்தியை மீள வாசிக்கிற பொழுது ஒவ்வொரு வாக்கியமும் மேலும் தெளிவடைய வேண்டும். உதாரணத்துக்கு முதலாவது வாக்கியம் - 'இற்றை மனித அறிவுக்கு எட்டியவரை விஞ்ஞான முறையைத் திருத்தமாக வரையறுக்கிற தத்துவம்' என்பதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். விமர்சன முறையிலான வாசிப்பின் அடிப்படை இதுதான். மொழி மிக மட்டானது. இயக்கநிலைச் சிந்தனையை மட்டுப்படுத்தவும் வல்லது. வெற்று வாக்கியங்களாகப் புரிந்து கொள்ளாமல் இயக்கமாகப் பார்க்கவும் தெரிய வேண்டும். இது தேவைப்படுகிற பொழுது மட்டுந்தான், எல்லாவற்றையும் இயக்கமாகப் பார்க்கிறேன் என்று தலையை நோகடித்துக் கொள்வதல்ல நான் சொல்லுவது. இன்றைய சிலருக்கு, எதிர்கால மனிதர்களுக்கு இது 'இயல்பாக' வரலாம். எனக்கு அப்படியல்ல. எனது மூளை மிக மட்டு. எனக்கு வரலாற்றுத் தகவல்கள் எல்லாமுமே கிசுகிசுதான். அவை புரட்சிகர அரசியல் உரையாடலுக்கு உதவாதவை. கீழ்வருவது சுவாரசியத்துக்கான கொசுறே தவிர, இந்த மீச்சிறு விசயங்கள் நமது முடிவுகளைப் பாதிக்க முடியாது. முறை திருத்தமாக இருக்கிற பொழுது இந்த இழிநிலை நேராது. கார்ல் பொப்பர் மிக இளம் பருவத்தில் மார்க்சியத்தில் ஈர்ப்புக் கொண்டு ஆஸ்திரிய இடதுசாரிக் கட்சி ஒன்றில் (Social Democratic Workers' Party of Austria) இணைந்து செயற்பட்டார். ஆயுதமேந்தாத தனது எட்டுத் தோழர்களை ஒடுக்குமுறைக் காவலாளர்கள் சுட்டுக் கொன்றதை ஒட்டி, மார்க்சின் 'போலி விஞ்ஞான' வரலாற்றுப் பொருள்முதல்வாத மயக்கத்திலிருந்து விடுபட்டார் என வாசித்தேன். மறுபடி அழுத்துகிறேன். வரலாற்றுத் தகவல்களை வைத்துக் கொண்டு முடிவுகளை எடுக்க நான் தேசியவாதியோ, மனப்பாட மார்க்சியவாதியோ அல்லன். தகவல்களைக் காட்டிலும் அவற்றைப் பிறப்பித்த இயக்கங்களும் அவற்றின் பண்புகளுமே இயங்கியலாளனான எனக்கு முக்கியம். ************************* நேற்றைய பதிவில், இயற்கை --- மனித உறவு எவ்விதம் 'பிழைப்புவாதங்' குறைந்திருக்கிறது என்பதையும், அதனால் அது மனித--மனித உறவை விடவும் இயக்கவேகம் அதிகம் கொண்டிருப்பதையும் பற்றி எழுதியிருந்தேன். மனிதர்களின் இயற்கை ஆராய்ச்சிக் கருவி விஞ்ஞானம். மனித ---> விஞ்ஞானம் ---> இயற்கை. கருவி தான் அளப்பதை காட்டிலும் துல்லியமாக இருந்தாக வேண்டும். எப்படி ஒரு அளவீடற்ற கோலைக் கொண்டு முடியின் பருமனைத் துல்லியமாகத் துணிய முடியாதோ, குவாண்டத் தளத்தில் ஒளியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கிற மீச்சிறு துணிக்கைகளின் இருப்பிடத்தையும் வேகத்தையும் எவ்விதம் ஒளியைக் கொண்டு ஒருங்கே துல்லியமாகத் துணிந்து விட முடியாதோ, அதே எண்ணக்கருதான் இதுவும். இயற்கை பிழைப்புவாதமற்றது. அதை 'ஆய்கிற' கருவியும் அவ்விதமே இருந்தாக வேண்டும். விஞ்ஞானத்துக்கு இயற்கையை 'அளவிடுகிற' செயற்கை நோக்கு ஊட்டப்படுகிறது. செயற்கை நோக்கின் பிழைப்புவாதத்தைக் களையவேண்டிய கட்டாயம் உள்ளார்ந்து ஏற்படுகிறது. இந்தக் கட்டாயம் மனித வரலாற்றின் முதல் சுய விமர்சன முறைமையை உருவாக்குகிறது - விஞ்ஞானம். தன்னுடைய முடிவுகளைத் தன்னைக் கொண்டே திருத்தி அமைக்கிற (புதுப்பிக்கிற), முடிவுகளை உருவாக்குகிற முறையே அதைத் திருத்தவும் செய்கிற சுயவிமர்சன இயக்கமாக விஞ்ஞான முறை உருவாகிறது. [செயற்கை நுண்ணறிவுக்கும் சுயவிமர்சனம் இருக்கிறது. ஆனால் அதற்குப் புகடப்படுகிற தரவுகள் பக்கச் சார்பானவை. ஒடுக்குமுறையாளர்களின் பார்வையில் தரவுகள் இருக்கும் (உ+ம் இவர்கள் தீவிரவாதிகள், இத்தனை பேரைக் கொன்றிருக்கிறார்கள் இத்யாதி). இயற்கையின் இயக்கம் பக்கச்சார்பானதல்ல. அதனால் விஞ்ஞானம் அதனளவில் 'நேர்மையாக' இருக்கிறது. அந்தக் கருவியைக் கொண்டு செயலாற்றுகிறவர்களுக்கு அது நேர்மையாக இருக்கிறது. ] ************* விஞ்ஞானத்தைத் திருத்தமாக ஆளுகிற தத்துவம் எது? கார்ல் பொப்பரினுடைய (பெயர்கள், ஆட்கள் முக்கியமில்லை, மார்க்ஸ், லெனின் போன்றவர்கள் எனக்கு முக்கியமில்லை, ஒரு அடையாளத்துக்காக் குறிக்கிறேன்) பொய்பிக்கும் எதார்த்த இயக்கந்தான் விஞ்ஞானம் என்பதா? எனின் இந்த இடத்தில் இயங்கியல் தோற்றுவிட்டதா? ஏற்கனவே எழுதியிருந்தது போல, எல்லாத் துறைகளிலும், எல்லாவித தத்துவங்களிலிருந்தும் பிறக்கிற (அது பக்தி மார்க்கமாக, கருத்துமுதல்வாதமாக இருந்தாலும்) எல்லா விதக் கருத்துக்களையும் இயங்கியலைக் கொண்டு சரிபார்க்க, புதுப்பிக்க முடிய வேண்டும். அல்லது இயங்கியல் முன்வைக்கிற 'இயக்கவெளி எல்லைக்குள்ளான அனைத்தையும் ஆளுகிற' அடிக்கோள் தோற்கும். நாம் மேலான தத்துவங்களுக்கு மாற வேண்டிய நேரம் அது. எல்லாவித கருத்துக்களும் இயக்கம் பிரசவித்தவையே. இக் குழந்தைகளை இயங்கியல் கொல்லாது. குறித்த குழந்தைக்குப் பொருத்தமான இடத்துக்கு/தளத்துக்கு/வெளிக்கு அந்தக் குழந்தையை தூக்கி வைக்கும். அவ்வளவுதான். விஞ்ஞான/விமர்சன சிந்தனையில் இயங்கியலின் தோல்வியைத் தேடுவதுதான் இயங்கியல் பயிலுகிற எனது முதன்மை நோக்கே. அப்படி இல்லாவிட்டால் நான் மாறியாக வேண்டும். மாறி விட்டேன். நான் ஒரு இயங்கியலாளன். இயங்கியலின் பார்வையில் முரண் ஒரு 'மோசமான' விசயமல்ல. இயக்கத்தின் அடிப்படையே முரண்தான். 'எதிர்மறை'யே முன்னேற்றத்தில் அடிப்படை. உருவாகிக் கொண்டு, அதே சமயத்தில் அழிந்து கொண்டும் இருப்பவையே எல்லாமும். நாம் வாழ்கிற திசையில் செத்துக் கொண்டும் இருக்கிறோமே அதைப் போல. எதுவும் இன்னொன்றுக்கு சமமல்ல. எதுவும் தனக்கும் சமமல்ல. (இந்த இடத்தில் அ=அ என்று போதிக்கிற வழமையான தர்க்கம் அடிபட்டுப் போகிறது - அதாவது அதன் வெளி இயங்கியல் தர்க்கத்தால் மட்டுப்படுத்தப்படுகிறது). இந்த 'எதிர்மறை' இயக்கம், புதிய நிலைகளை எடுத்துக் கொண்டே அதை மறுத்துக் கொண்டும் இருக்கிறது. நிலைமறுப்பின் நிலைமறுப்பாக இருப்பவையே எல்லாமும். விஞ்ஞான முறையும் விதிவிலக்கல்ல. அதுவும் நிலைமறுப்பின் நிலைமறுப்பாகவே இயங்குகிறது. பொய்ப்பிக்கப்படுகிற எதார்த்த இயக்கம் என்பது இயற்கையின், சிந்தனையின், வரலாற்றின், அனைத்தினதும் பொதுநிலைதான். விஞ்ஞானத்தின் அவ்வித இயக்கம் நமக்குப் புலப்படுகிறது. ஆழமாகச் சொன்னால், நடைமுறைவாத சிந்தனைக்கும் (அந்த மட்டுப்பட்ட வெளிக்கும்) நிலைமறுப்பின் நிலைமறுப்பு புலப்படத்தக்க வகையில் விஞ்ஞானமாக இருக்கிறது. முக்கிய குறிப்பு: நான் சொல்லி வருகையில் இயங்கியலின் ஒரு முரணை அவதானித்திருக்க வேண்டும். அனைத்துமே உருவாகி அழிந்து கொண்டிருப்பவை எனின் 'இயக்கம்' அதற்கெப்படி விதிவிலக்காகிறது? இயக்கத்துக்கு வெளியில் என்ன இருக்கிறது? இயங்கியலின் அடிப்படை முரண்களில் இதுவும் ஒன்று. [மூன்றை இனங் கண்டிருக்கிறேன். வரிப்படங்களாகப் போடுகிற நோக்கு இருக்கிறது] இயங்கியலின் மூன்று அடிப்படை முரண்களையும் பொய்ப்பிக்க விஞ்ஞான முறையை நாம் கையில் வைத்திருந்தே ஆக வேண்டும். விஞ்ஞான முறையைக் கொண்டே இயங்கியல் தன்னை விஞ்ஞானமாக்கிக் கொள்ளுகிறது. "நாம் காணுகிற எல்லாவகையான ஒழுங்குகளும் (இயங்கியல் விதிகள் அடங்கலாக) கருத்தாக இருந்து அந்தக் கருத்து இயங்கியல் விதிகளுக்கமைவாக இயங்க ஆரம்பித்து, இன்று என்னுடைய சிந்தனையினூடாகத் தன்னை மறுபடி இனங்கண்டு முழு வட்டத்தைப் பூர்த்தி செய்து கொண்டது" என்று ஹெகல் எழுதிவருகிற பொழுது எப்படி ஒரு கருத்துமுதல்வாதிக்கு மெய்சிலிர்க்குமோ, அதை விட அதிகமாக இயங்கியலை ஆழமாழம் புரிந்து கொள்கிற பொழுது எனக்கும் கிடைக்கிறது. ஆன்மீகம் உருவாக்கத்தக்க, கருத்துமுதல்வாதம் உருவாக்கத்தக்க அத்தனை கருத்தியலை இயங்கியல் பொருள்முதல்வாதமும் உருவாக்கும். வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும். புதுப்பித்து, திருத்தியமைத்து வெளிமாற்றும். *********************** இயங்கியல் முரணை 'மறுப்பதில்லை, ஆராதிக்கிறது' எனின் எவ்விதம் அது முரண்பாடுகளைத் தீர்க்கிறது? மனித விடுதலைக்கான இயக்கம், எல்லாவித முரண்களையும் சிந்தனை வெளிக்குள் தீர்த்துக் கொள்ள முடிவதற்கானது (இந்தத் திசையில் தொடர்ந்து இயங்குவது). அவ்விதம் முரண்களை மேவுகிற சிந்தனையை உருவாக்கிக் கொண்டிருப்பவையும் முரண்களே. நேற்றைய பதிவிலான மனித-இயற்கை, மனித-மனித, மனித-- செயற்கை நோக்கு... இன்னும் எத்தனை முரணியக்கங்கள் வரவிருக்கின்றனவோ? மனித விடுதலைக்கான இயக்கத்தை எத்துணை கோணத்தில், விதம் விதமாக விளக்கினாலும் எனக்குத் திருப்தி வருவதில்லை.

-Nila

1 Comments:

At March 4, 2018 at 10:04 AM , Blogger Nila Loganathan said...

This comment has been removed by the author.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home