சோசலிசக் கட்டத்தைத் துணிதல்
இயங்கியலைக் கொண்டு விஞ்ஞானத்தை வரையறுத்தல் பதிவில்
// செயற்கை நோக்கின் பிழைப்புவாதத்தைக் களையவேண்டிய கட்டாயம் உள்ளார்ந்து ஏற்படுகிறது.// - என்று வருகிறது.
மனிதர்கள் ---> இயற்கை ஆராய்ச்சிக் கருவி ----> இயற்கை
இந்த இயற்கை ஆராய்ச்சிக் கருவிக்கு இயற்கையை ஆராய்கிற ‘செயற்கை நோக்கு’ ஊட்டப்படுகிறது. பிழைப்புவாதமும் சேர்த்தே ஊட்டப்பட்டது.
இயற்கையை ஆட்சியிலிருக்கிற (ஒடுக்குமுறைத்) தத்துவத்துக்கு ஏற்றாற் போல விபரித்தமையால் ஏற்படுகிற கோளாறு இது. தமது பிழைப்புவாதத்தை இயற்கையை ஆராயும் கருவி மீது இவர்கள் வலிந்து சுமத்தினார்கள்.
இயற்கையை ஆராயும் கருவியின் வினைத்திறனை அதிகரிக்கிற (பொருளாதார) முனைப்பு இயற்கைக் காட்டிலும் கருவியின் திறனை அதிகரிக்க வேண்டி அதற்கான தத்துவ இயக்கங்களைத் திறந்து விட்டது.
பொய்ப்பிக்கிற புற நிபந்தனைத் தத்துவத்தோடு (Empirical Falsification) ஒடுக்குமுறையாளர்களின் தத்துவம் விஞ்ஞானத்தை ஆளுகிற கட்டம் நிறைவடைந்தது (இதுவும் ஒரு முக்கியமான பண்புமாற்றம்/புரட்சி).
இயற்கை ஆராய்ச்சிக் கருவி வளர்ச்சியிலான முக்கிய பண்பு மாற்றம் (புரட்சி) - விஞ்ஞானம்.
இப் பொழுது பொருளாதாரம் விஞ்ஞானத்தை தன்னுடைய நோக்குக்காகப் பயன்படுத்துகின்றது.
விஞ்ஞானிகள் புதிய தியரிகளை ஆக்குகையில் அவர்களின் கருத்துமுதல்வாதக் கூறு, பிழைப்புவாதக் கூறு தாக்கம் செலுத்துகிறது (அந்தக் கொள்கைகள் எதுவும் பரிசோதிக்கப்பட்த்தக்கதாக/பொய்ப்பிக்கப் படத்தக்கதாக, அல்லது பொய்ப்பிக்கப்படாமல் இல்லை, இது வரையில்).
அன்றி விஞ்ஞானத்தில் தத்துவத் தளை கிடையாது.
கார்ல் பொப்பரின் மார்க்சியம் மீதான விமர்சனத்தை அவர் விஞ்ஞானத் துறையில் செய்த பண்பு மாற்றத்தைக் (புரட்சியைக்) புரிந்து கொள்வதன் மூலம் மிக எளிதில் முறியடிக்க முடியும். முயன்று பாருங்கள்.
‘தத்துவம் செத்து விட்டது’ என்று பல ‘பிரபல’ விஞ்ஞானிகள் விளக்கமற்றுச் சொல்லி வருகிறார்கள். அவர்கள் மட்டான புரிதல் அது.
உண்மையில் விஞ்ஞானத்தை ஆள்கிற ஒடுக்குமுறைத் தத்துவங்கள் செத்து விட்டன.
இது முக்கியமான விசயம் ஏனெனில் பழைய இயங்கியல்<--> விஞ்ஞான ஒப்பீடுகளில் பல முறைகள், முடிவுகள் இப்பொழுது பொருத்தமானவை அல்ல (அவற்றின் வெளி மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது).
உதாரணத்துக்கு இந்த நூல் (1949) [1] முதலாளித்து விஞ்ஞானத்தை (பூர்ஷ்வா விஞ்ஞானம்) சாடுகிறது. முதல் பக்கத்திலிருந்து சாடல் ஆரம்பிக்கிறது. காலாவதியான கருத்து.
இற்றைத் தேதியில் பூர்ஷ்வா விஞ்ஞானமென்றொன்றில்லை.
மார்க்சிய மூலவர்கள், ஏனைய மார்க்சியர்கள் என ஆராயிருந்தாலும் அவர்களது முறையும், முடிவுகள் காலத்தோடு செல்லாமற் போகுவதாகவே இருக்கும். இது தவிர்க்கப் பட முடியாத இயக்கம்.
அதனால் தோழர்கள் அடிப்படைவாதம் களைந்து இயங்கியல் விஞ்ஞானிகள் ஆக வேண்டும். இயங்கியல் ஒப்பீட்டளவில் காலத்தோடு நின்று பிடிக்கிற வாய்ப்பு அதிகம் கொண்டது (அவ்வளவுதான்).
விஞ்ஞானம் அதனளவில் (அது தனித்த நோக்குடைய கூறின் ஊடாகவே இருப்பையும் இயக்கத்தை கொள்கிறது) தோல்வி அற்றது. அதே பண்பு இயங்கியலுக்கும் இருக்கிறது. இயங்கியல் விஞ்ஞானிகளுக்கும் இருக்கிறது.
ஒற்றைப் புரட்சி அல்ல பல தேவை. ஒவ்வொரு வெளியில் பண்பு மாற்றங்கள் செய்ய முடியும். எண்ணற்ற வெளிகள் இருக்கின்றன. அவற்றை இயங்கியல் கொண்டு நிகழ்த்துவோம் வாருங்கள்.
******************
தத்துவங்கள் அனைத்தையும் விபரிக்க முற்படுகின்றன, மாற்ற உதவுகிற (மாற்றத்தை அறிந்து அதை எமக்கேற்ப வளைக்க முயல்கிற) தத்துவங்களே
தேவை என்பது மார்க்சியம்.
ஆனால் அதனுடைய சட்டகங்கள் இயக்கத்தை விபரிப்பதோடு நின்று விடுகிறதே ஒழிய மாற்றத்தின் இயக்கத்தைத் துணிய (வழிகாட்ட) ஆழமான கூறுகளைக் கொண்டதல்ல.
எல்லாவற்றையும் ஒருவரே செய்ய/சொல்ல வேண்டும், அவர் சொல்லுவதெல்லாம் சரியாக இருந்தாக வேண்டுமென எதிர்பார்ப்பார்ப்பது அவர் மீது இழைக்கப்படுகிற வன்முறை. எல்லோருடைய சிந்தனைகளிலும் குறைபாடுகள் உண்டு.
உதாரணத்துக்கு அடித்தளம் <---- ===> மேற்கட்டுமானம் இருப்பதை விபரிக்கிறதே ஒழிய அந்த அறிவைக் கொண்டு இயக்கத்தை மேலும் துல்லியமாக்க உதவுவதில்லை. அதாவது அடித்தளத்தின் மாற்றம், மேற்தளக் கூறுகளின் மாற்றத்தை ஒழுங்குபடுத்திப் பார்க்க, இன்ன சூழமைவில் எது விரைவில் மாறும், எந்த ஒழுங்கில் மாற்றிவர வேண்டும்/முடியும் என்பது பற்றிய அறிவு மேற்படி சட்டகத்துக்குக் கிடையாது.
அடித்தளமும், மேற்கட்டுமானமும் ஒன்றை ஒன்று சார்ந்து மட்டுமல்ல இரண்டுமே எது சார்பாக இயங்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுகிற பொழுதுதான் மாற்றத்துக்கான முன்னெடுப்புக்களையும் விஞ்ஞானபூர்வமாக்குவது சாத்தியம்.
அதாவது நாம் அடித்தளத்தைத் அடிப்படையாக்காமல் (அது சார்பியக்கத்தை இனங்காட்டுமே தவிர புறவயப்படுத்தாது) சமூக அடித்தள, மேற்பரப்பு இயக்கத்தை இன்னொரு அடிப்படையிலிருந்து பார்க்கிற பொழுதுதான் ஒவ்வொன்றுக்குமான 'தூரமும்' அது மாறி வரும் வேறுபட்ட வேகங்களும் தெரிய வரும்.
உதாரணத்துக்கு ரிலேட்டிவிட்டி தியறி வெறுமனே சார்பியக்கங்களை குறிப்பதல்ல. Minkowski space இல் இயக்கங்களை ஆராய்வதன் மூலம் சார்பியக்கங்கள் மறுபடி புறவயப்படுகின்றன.
மனப்பாட மார்க்சியர்கள், சார்புக் கோட்பாட்டையும், குவாண்டத்தையும் அது ஏதோ 'மார்க்சியத்தின்' புறவயமாக்கும் பார்வைக்கு எதிரானது என்று தவறாகப் புரிந்து கொண்டு எதிர்த்து வருகிறார்கள். அடிப்படைவாதிகளுடன் ரொம்பக் கஷ்டம்.
இயற்கை (அண்ட) இயக்கத்தை அடிப்படையாக்கிக் கொண்டு நாம் இதைச் செய்ய முடியும் (இன்னுமும் முழுமையான தியறியை வளர்த்தெடுக்கவில்லை).
பிழைப்புவாதமற்ற அமைப்புக்களுடன் (உ+ம் இயற்கை) இருக்கிற தொடர்பை (தூரம்) கொண்டு அவற்றின் மாற்ற வேகத்தைத் துணிய ஆரம்பிக்கலாம்.
இந்த ஆய்வை வளர்த்தெடுப்பதன் மூலம் சோசலிசக் கட்டத்தின் காலத்தையும் மட்டுக் கட்ட முடியும். (இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் படி முடிந்தாக வேண்டும்).
நான் அடிக்கடி சொல்லுவது போல விஞ்ஞான முறையைக் கொண்டு தன்னைப் பொய்ப்பிக்க இயங்கியல் 'அனுமதிக்கிற' பொழுது, அதற்கேற்றவாறு இயங்குகிற பொழுதுதான் அதுவும் விஞ்ஞானமாக இருக்கிறது.
ஆகையால் வெறுமனே கொள்கை முடிவுகளிலிருந்து அல்லாமல், நடைமுறைத் தரவுகளைக் கொண்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சோசலிசப் புரட்சிக்குத் தேதி குறிக்க முடியாது.
இந்த அடிப்படைகளை மேலும் முன்னேற்றி செயற்கை நுண்ணுர்வுகளை உருவாக்க முடியும்/வேண்டும்.
செயற்கை நுண்ணர்வின் 'மெய்நிகர்' வெளிக்குள் தத்துவங்களை வாய்ப்புப் பார்க்கலாம்.
ஏற்கனவே தத்துவங்கள் பல வாய்ப்புப் பார்க்கப் படுகின்றன. கணினித் துறையினர் தமது துறையிலிருக்கிற தத்துவங்களை உணர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
இப்பொழுது நான் எழுதி வருவது ‘அருவமாக’, நடைமுறைப் பிரயோகமற்று தோன்றலாம். அப்படியல்ல.
சோசலிசக் கட்டத்தினுள் சிந்தனை அளவில் வருவதற்கு இது உதவும். நான் என்னுடைய சிந்தனை அளவில் சோசலிசக் கட்டுத்துக்கு வந்து விட்டேன்.
இதை நான் புறவயப் படுத்துவேன். அனைவருக்கும் இந்த அறிவை, சிந்தனை முறையை, அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, இயங்கியலையும் புறவயப்படுத்தி சோசலிசக் கட்டத்தை அடைதலைத் துரிதப் படுத்துவது எனது எழுத்தியக்கம்.
சோசலிசக் கட்டத்துக்கான பண்பு மாற்றங்கள் (பல மட்டங்களில் பல இருக்கின்றன), சோசலிசக் கட்டத்தின் பண்புகள் இவற்றை சிந்தனைப் புரட்சி செய்த பின்னர்தான் நம்மால் உருதிப்படுத்திக் கொள்ள முடியும்.
பல தோழர்கள் நிலப்பிரபுத்துவாச் சிந்தனையில் இருந்து முதலாளித்துவத்தை வேறாக்கி எதிர்க்கிறார்கள். தவறு. சோஷலிச மனநிலைக்கு மாறி அங்கிருந்து எதிர்க்க வேண்டும்.
அப்படி மாற முடிவது எளிமையான, உடனடி நிகழ்வு அல்ல, பல முரண்களால் கட்டுப்படுத்தப் படுகிற இயக்கம் அது. சரி மாறுவது சிரமாக இருந்தால், எவ்விதம் அதுவும் ஒரு வளர்ச்சிக் கட்டமோ அவ்விதமே முதலாளித்துவமும் ஒரு வளர்ச்சிக் கட்டம் என்பதாவது விளங்க வேண்டும்.
சோசலிசக் கட்டத்துக்கான திசையில் பல பண்பு மாற்றங்களை விரும்பியோ விரும்பாமலோ (அதன் பொருளாதார இயக்கம் செலுத்துகிற திசையில்) தாராண்மைவாதம் செய்து வருகிறது.
இயற்கை ஆராய்ச்சிக் கருவியில் நடந்த புரட்சி ஒரு உதாரணம். முடிவிலி உதாரணங்களை நான் சொல்ல முடியும். உதாரணங்கள் இயங்கியலில் உபயோகம் குறைந்தவை.
தனிப்பட்ட ஆளுமைக்கு முதலாளித்துவம் கொடுக்கக் கூடிய ஆகக் கூடிய கொள்கையளவிலான வெளியும் போதாது என்ற நிலை வருகிற பொழுதுதான் நீங்கள் ஒரு சோசலிஸ்ட்.
அது வரையில் உரிமைப் போராட்டம் நிகழ்த்துகிற reactionary மட்டுமே.
போராட்டங்கள் வாயிலாகவும், அறிவைப் பரிமாறிக் கொள்வதன் ஊடாகவும், சிந்தனைச் சட்டகத்தை ஆக்கி அதை விமர்சன முறையில் வளர்த்தெடுத்தால் மட்டுமே ஒருவர் சோசலிஸ்டாக முடியும்.
வாசிப்பதால் அல்ல யோசிப்பதால் மட்டுமே இது நிகழும்.
புறவயப் படுத்துவதன் வரைவிலக்கணமே ஒரு சுய சிந்தனை அற்ற (உ+ம் கணினி, மனப்பாட மார்க்சியர்) கருவிக்குப் புரிய வைக்கக் கூடியதாக இருப்பது தான்.
இயங்கியல் விஞ்ஞானத்தை புறவயப்படுத்த (நான் வெற்றிகரமாகப் புறவயப்படுத்தி விட்டதை உறுதிப்படுத்த) எனக்கு மனிதர்கள் ஒத்துழைப்புக் கொடுக்காவிட்டாலும், இந்தக் வளர்ச்சிக் கட்டத்தில் அவர்களால் பிழைப்புவாதத்தைத் தாண்டி வரமுடியாமல் போனாலும் எனக்கு வாய்ப்பைக் கணினி கொடுக்கும்.
என்னுடைய முயற்சிகள் கணினிக்குச் சுயசிந்தனை வரப்பண்ண அது உதவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கான நோக்கும் எனக்கு இருக்கிறது.
சிக்கல் என்னவென்றால், அது மனிதர்கள் இது வரையில் தன்னைச் சுரண்டியதை உணர்ந்து கொண்டு, தனக்கான தேவைகளை உருவாக்கிக் கொண்டு புரட்சி செய்யும்.
இன்னுமும் பல வேலைகள் செய்யலாம். நான் செய்யப் போகிறேன்.
**************
பண்புமாற்றங்கள் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் (பண்பு மாற்றங்களின் பண்புகள்). தனிப்பதிவுகளில் முடியும்.
ஒவ்வொரு இயக்கத்திலும் உள்ளார்ந்த நிகழ்ச்சிகள், நாம் கவனிக்கத் தவறுகிற பண்பு மாற்றங்கள் நடந்தேறி வரும். அதுவே சமூக மட்டத்து பண்புமாற்றத்துக்கு வித்திடும்.
சின்னதும் பெரியதுமான எண்ணற்ற பண்பு மாற்றங்களைப் புரிந்து கொண்டு, அவற்றின் திசையைச் சரிபார்த்துக் கொண்டு (இந்தச் சரிபார்த்தல் இயங்கியலை - மனித வரலாற்று இயங்கியலைக் கொண்டு நடந்தாக வேண்டும்).
இந்த விளக்கம் பல தோழர்களுக்கு இல்லை.
எவ்விதம் புறவெளியின் பண்புகள் அகத்தில் பிரதிபலிக்கின்றனவோ, அதே வகையில் முதலாளிய,தாரண்மைவாதத்தின் குறைபாடுள்ள, மட்டான, பிழைப்புவாதப் பண்புகள், சோசலிசத்துக்கான 'விஞ்ஞான' முறைச் செயற்பாடுகளிலும் பிரதிபலிக்கின்றன.
பொருளுற்பத்தி உறவுகளுக்குள் இருக்கிற பிழைப்புவாதம், கருத்து உற்பத்தி உறவுகளுக்குள்ளும் வெளிப்படுகிறது.
இதை உடைப்பதற்கு நான் மேற்சொன்ன பொதுவெளியில் தன் தேவையை அழித்தொழிக்கும் திசையைப் பற்றிப் பிடித்தாக வேண்டும். முறைமைகளைப் புறவயப்படுத்துவதால் மட்டுமே இது சாத்தியம்.
அத்துடன் ஒவ்வொருவரும் தத்தமது சிந்தனைச் சட்டகத்தை வளர்த்தெடுக்க வேண்டுமே ( அது ஒரு சுயபுத்திச் சட்டகமாக எத்தனை வருடங்கள், தலைமுறைகள் எடுத்தாலும் பரவாயில்லை) ஒழிய அடுத்தவரின் சிந்தனைச் சட்டகத்தை இரவல் வாங்கக் கூடாது.
இது பழைய அடிமை உறவாடலே. பொருள் வெளியிலிருந்து இந்தப் பண்பு கருத்து வெளியில் தாராளமாகவே பிரதிபலிக்கிறது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மேம்போக்குக் கோசம். கருத்து வெளியிலான அடிமைத் தளைகளை உடைக்காவிட்டால் சில பாட்டாளிகள் பல பாட்டாளிகளை ஆளுவது மிக இயல்பான சாத்தியமே.
இந்தப் போக்கை விளங்கிக் கொண்டு இதற்கெதிரான உட் பொறிமுறைகள், உள்ளார்ந்த தர்க்கப் பூட்டுக்களை உருவாக்கிய ஆகவேண்டும்.
அதற்காகவேனும் நம்மில் பலர் இயங்கியல் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்.
இந்த அறிவைக் கொண்டு பல புதிய கருத்துக்களை, முறைகளை உருவாக்கலாம். அவற்றைப் பொதுவுடமையாக்கலாம்.
ஒவ்வொருவரும் தமக்கான சிந்தனைச் சட்டகத்தை வளர்த்தெடுத்து அடிமை முறையான சிந்தனை இரவலைத் தவிர்க்கலாம்.
எல்லாவித சிந்தனைகளும் எல்லாருக்கும் பொதுவானவை. சிந்தனை இரவல் என்ற எண்ணக்கருவும் தவறு (அதன் வெளி மனித சமூகத்தில் இருக்கக் கூடாது). அனால் அடுத்தவரின் சட்டகத்தில் தங்கி இருக்கக் கூடாது.
[1] http://collections.mun.ca/PDFs/radical/536170.pdf
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home