Thursday, February 22, 2018

சோசலிசம் பற்றிய லெனினின் பொய்களை உடைத்தல் -1

உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப் போக்கிலே , தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக்கொள்ளும் பேச்சுக்கிடமில்லை.

ஆதலால், ஒன்றுதான் தேர்ந்தெடுக்க உண்டு.

முதலாளித்துவ சித்தாந்தம் அல்லது சோஷலிச சித்தாந்தம். நடுவில் எதுவும் கிடையாது.

லெனின் (தோழர் Vladimir Ilyich Ulyanov alias Lenin)




முக்கிய குறிப்பு: இது மொழிபெயர்ப்புக்களில் நடந்த தவறா, லெனின் நோய்வாய்ப்பட்ட பொழுது தவறி எழுதியதா, லெனின் தானா? இதெல்லாம் எனக்கு முக்கியமற்றவை. பெயர்களைப் பிடித்துக் கொண்டு தொங்குகிற நிலப்பிரபுத்துவக் கட்டுப்பெட்டிச் சிந்தனை எனக்குக் கிடையாது. எனக்கு லெனின் அல்ல, மானுட விடுதலையே முக்கியம். அதை விரைவுபடுத்துவதே எனது பணி. மார்க்சிய மூலவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு அடிமைச் சேவகம் செய்து வருவதல்ல. இந்த உரையாடல் உண்மையில் லெனின் பற்றியதோ, லெனினைத் தூற்ற, காபாற்ற விழைவதோ, அதற்கான இடமோ அல்ல.  இது சோசலிச வரைவு சம்பந்தமாகவே நகர வேண்டும். 

//உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப் போக்கிலே , தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக்கொள்ளும் பேச்சுக்கிடமில்லை. ஆதலால், ஒன்றுதான் தேர்ந்தெடுக்க உண்டு. முதலாளித்துவ சித்தாந்தம் அல்லது சோஷலிச சித்தாந்தம். நடுவில் எதுவும் கிடையாது.// 

இந்த வாக்கியத்தை லெனின் எழுதியிருப்பதாக நீங்கள் சொல்லுகிறீர்கள் தோழர்.

ஆகவே லெனின் சிந்தனை மேம்போக்குத்தனமானது (விஞ்ஞான விரோதமானது அதனால் கட்டுப்பெட்டித்தனமானது) என்பது வெளிப்படையாகிறது. உங்களுக்கு அது வெளிப்படையாக விளங்காவிட்டால் அது உங்களது சிந்தனை முறையின் குறைபாடே. இந்த வாக்கியத்தை லெனின் எழுதியிருப்பதாக நீங்கள் சொல்லுகிறீர்கள் தோழர் என்னுடைய 'மேம்போக்கு, விஞ்ஞானவிரோத, கட்டுப்பெட்டிக் குற்றச்சாட்டை விளக்குகிறேன். 

மார்க்சியத்தின் சாராம்சம் பின்வருமாறு (குறிப்பு: மார்க்சியம் முழுமையாக வளர்த்தெடுக்கப்பட்டதல்ல, வளர்க்க நிறைய இடம் இருக்கிறது, அதற்கு இயங்கியலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும், நான் இயங்கியலைப் புறவயப்படுத்தி வருகிறேன்) அண்ட (இயற்கை) இயக்கத்திலிருந்து தன்னைத் தனித்து உணர்கிற கூறு (உ+ம் மனிதர்கள்) அதன் உற்பத்தி உறவுகளினூடு சமூக உறவுகளை மேம்படுத்துகிறது. உற்பத்தி உறவுகள் (இயற்கை --- மனிதம், உழைப்புப் பொதுவெளியிலான மனிதம்--மனிதம்) இயற்கையின் 'பிழைப்புவாதமற்ற' ஓட்டத்திலிருந்து பண்புகளைக் கற்றுக் கொண்டு வேகமாக வளர்வதால் அது சமூக உறவுகளிலும் பண்புமாற்றங்களை (புரட்சி) ஏற்படுத்தியே தீரும். அதாவது உற்பத்தி உறவுகள் சமூக உறவுகளை இழுத்தோடுகின்றன. சமூக உறவுகளும் உற்பத்தி உறவுகளில் தாக்கம் புரிந்தாலும் முதன்மை விசை மேற்சொன்னதே. அதனால்தான் இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானத்தை விடவும் வெகுவேகமாக வளர்கிறது. இன்னுமும் சுருக்கிச் சொன்னால், இயற்கை பற்றிய அறிவும், உழைப்பும் விஞ்ஞான தொழிநுட்பத்தினூடு வடிந்து சமூக ஒழுங்குக்கான கருத்தாங்களை முன்னகர்த்துகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கலான விஞ்ஞான தொழிநுட்பம் இருக்கிறதோ மெல்ல மெல்ல அந்தச் சிக்கல்தன்மையும் திறனும் தனிப்பட்ட, சமூக உறவுகளிலும், அவற்றிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பிரதிபலிக்கிறது. 

ஒரு கட்டத்தில் அண்டத்தை எதிர்ப்பதற்கான ஒட்டுமொத்த சமூகமாக (வர்க்க முரண்கள் அற்ற கூட்டமாக) அந்த இயற்கையிலிருந்து தனித்த கூட்டம் மாறுகிறது.

மார்க்சியம் என்பது விஞ்ஞானமல்ல. அது விஞ்ஞானபூர்வமான தத்துவம். நிகழ்வுப் போக்கை, அதாவது எந்தத் திசையில் வரலாறு நகரும் என்று சொல்ல முடியுமே தவிர, இப்படி நடக்கும் என்று அறுதியாகச் சொல்ல முடியாது. மனிதர்களுக்குத்தான் தத்துவத்தைத் தெரியுமே தவிர தத்துவத்துக்கு மனிதர்களைத் தெரியாது. பாட்டாளிகளுக்குத்தான் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் தெரியுமே ஒழிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்துக்குப் பாட்டாளிகளைத் தெரியாது. ஆகையால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் 'விஞ்ஞான' முடிவு என்பது ஒரு அரசியல் பொய். இயற்கையிலிருந்து தனித்த தன்னுணர்வின் சமூக (உற்பத்தி, சமூக) இயக்கத்தைத்தான் மார்க்சியம் பருமட்டாகத் திசைபிடிக்க முடியுமே ஒழிய 'இது நிச்சயம் நடக்கும்' என்று ஒன்றையும் எதிர்வு சொல்ல முடியாது.சோசலிசக் கட்டத்துக்கு முன்பாக மனித இனம் அழிந்து போவதும் ஒரு இயல்பான சாத்தியந்தான். இன்னொரு தன்னுணர்வுக் கூட்டம் அண்டத்தில் உருவாயின் அதுவும் இத்திசையிலேயே உந்தப் படும் என்பதுதான் எதிர்வு கூறலே தவிர பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒன்றும் இதன் முடிவல்ல. மறுபடி அழுத்துகிறேன். பாட்டாளிகளுக்குத் தத்துவம் தெரியலாம். தத்துவத்துக்குப் பாட்டாளிகளைப் பற்றித் தெரியாது. தெரியும் என்று நினைப்பதே கருத்து முதல்வாதந்தான்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் விஞ்ஞான முடிவு என்று அடிப்படைவாதிகள் உறுத்தல் இன்றிப் பொய் சொல்லி வருகிறார்கள். இவர்களுக்கு விஞ்ஞானமும் தெரியாது. சோசலிசமும் தெரியாது. ஆனால் விஞ்ஞான சோசலிசம் மட்டும் விளங்கி விட்டதாம். பாட்டாளிகள்தான் தத்துவத்தை இயக்க வேண்டும். அது பாட்டாளின் தொடர்ந்த உழைப்பில் திருத்தமடைவது. நிகழ்வுப் போக்கில் சோசலிசத் தத்துவம் (எல்லாத் தத்துவமும்) திருத்தமடையும். பல பண்பு மாற்றங்களையும் சந்திக்கும்.லெனின் சொல்லுவது இயங்கியல் விரோதம். மார்க்சிய விரோதம். பாட்டாளி விரோதம். மார்க்சியத்தின் படி முதலாளித்துவம் முதிர்ந்து மட்டுமே (அழுத்தி, உணர்ந்து வாசிக்குக) , மட்டுமே சோசலிசக் கட்டம் வர முடியும். சோசலிசத்துக்கான மிகச் சிக்கலான சிந்தனை முறை இயல்பாக, பெருமளவு வருகிற பொழுது மட்டுமே சோசலிசக் கட்டம் சாத்தியம்.அதை லெனின் திரித்து மழுப்பி பொய்களில் தன்னுடைய சோசலிசத்துக்கான கோட்பாடுகளைக் கட்டி எழுப்பியிருக்கிறார். 

மார்க்சியத்தைத் 'திருத்துகிறவர்களை' எதிர்க்க நினைக்கிறவர்கள் முதலில் லெனினைத் தான் எதிர்க்க வேண்டும். லெனினைக் கொண்டாடுவதற்கான முதன்மைக் காரணம் அவர் 'வெற்றி' (உண்மையில் அது சோசலிசப் புரட்சி அல்ல) பெற்றார் என்பதுதான். இது வெற்றி பெற்றவர்களுக்குப் பின்னால் குருட்டுத்தனமாக ஓடுகிற, கொப்பி (தமிழ்நாட்டு வழக்கில் 'காப்பி) அடிக்கிற மனிநிலைதான் இது. லெனினுடைய இந்தக் குறிப்பிட்ட கூற்று மார்க்சியத்தை விதிவசவாதமாக்கி, எல்லாமே நிர்ணயிக்கப்பட்டதான மயக்கத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் முதலாளியம் முதிர்ச்சி அடைகிற பொழுதான மிகச் சிக்கலான சிந்தனை முறையில் இருக்கிறவர்களே சோசலிசத்தை இன்னுமும் திருத்தமாகத் துணிவர்.

லெனின், மார்க்சைக் காட்டிலும் வீரியமான சிந்தனை முறையைக் கொண்டிருப்பர். அதற்காக சமகால  சோசலிஸ்டுகளான நாம் சும்மா இருக்க வேண்டியதில்லை. இந்த முதிர்ச்சியைப் பல வழிகளில் விரைவுபடுத்தலாம்.அடிப்படைவாதமும், தந்திரங்களும், பொய்களும் இதற்கு உதவாது. 


நமது முறைகள் பொருளின் அதிகாரத்தை மட்டுமல்ல, அறிவின் அதிகாரத்தை தகர்ப்பதாய் இருக்க வேண்டும். பொருளிலிருந்தான பண்புமாற்றங்களே அறிவாகவும் இருக்கிறது. பண்புமாற்றங்களின் போது பழைய பண்புகள் புதிய வடிவில் பிரதிபலிக்கும்/நின்றுபிடிக்கும். 

பொருள்வெளியில் பொருளைக் கொண்டு அதிகாரந் தேடுகிற அதே இழிபோக்கு அறிவு வெளியில் அறிவைக் கொண்டு அதிகாரம் தேடுகிற, பொதுவெளியில் தமது பிம்பத்தைக் கட்டமைக்கிற, உனக்கு இது போதும்  (மேற்படி லெனின் கூற்று இந்தக் கீழ்த்தர மனநிலைக்கு ஒரு உதாரணம்)  என்று வடித்துக் கொடுக்கிற, தமது அதிகாரத்தை, இருப்பைப் பேணுகிற பிழைப்புவாதிகளாகவே பெரும்பாலான போலி இடதுகள் இருக்கிறார்கள்.


இதையும் உடைக்க முடியும். இது பற்றி வேறு பதிவுகளில் பார்க்கலாம். 

சமகால சோசலிஸ்ட்டுக்கள் செய்யத்தக்க முதன்மை விசயங்கள், 


1. சமூகத்தில் பெரும் பண்புமாற்றத்தை (சோசலிச புரட்சி) ஏற்படுத்துவதற்கான முன்நிபந்தனைகளான சிறு பண்புமாற்றங்களை எண்ணற்ற வெளிகளில் ஏற்படுத்துதலாம். அவற்றை விரிவாக உரையாட இந்தப் பதிவு போதாது.


2. தனிப்பட்ட சிந்தனை வெளிகளை வாழ்நிலையிலிருந்து பெயர்த்து எடுப்பது. 

மார்க்சியத்தின் 'உலகை மாற்றும்' செயற்பாடு இவைதான். 




மார்க்சிய செயலும் மார்கசிய தியரியும் முரண்கள். எல்லாமே முரண்கள்தான். ஆனால் எது மானுட விடுதலையின் திசைப் பயணத்துக்கான முரண் என்பதை அடையாளம் காண்பதே தேவை. இயங்கியல் பயிற்ச்சி இல்லாமல் இந்த திசைப்படுத்தல் முடியாது. வாழ்நிலை சிந்தனையைத் தீர்மானிக்கும் என்பதை உடைக்கவே மார்க்சிய அறிவு. அதையே மனப்பாடம் பண்ணிச் சொல்லுகிற மனப்பாட மார்க்சியர்களை என்னவென்பது? இந்த அடிப்படைவாத சக்திகள் மிக ஆபத்தானவர்கள். 


உதாரணத்துக்கு நான் ஒரு மாசக் கூலி. என் மீது முதலாளியக் கட்டத்தின் அதியுயர் தத்துவம் பிரயோக்கிக்கப்படுகிறது. நான் ஒப்பந்த அடிப்படையிலான மொன்பொருள் தொழிலாளி.  அதாவது நான் என்னுடைய சேவையை விற்கிற 'முதலாளி'. நான் 'தொழிலாளி' அல்ல என்று நிறுவ, மயக்க முதலாளித்துவம் இந்தத் தத்துவத்தைப் பிரயோக்கிறது. மிகக் கடுமையாக நாளாந்தம் மூளையைக் கசக்கி விற்றுக் கொண்டிருக்க என்னை நிர்ப்பந்திக்கிறது. இந்த வாழ்நிலை என்னுடைய சிந்தனையை மழுங்கடிக்கவோ, தீர்மானிக்கவோ இல்லை. 


நான் முதலாளித்துவ தொழிநுட்ப, விஞ்ஞான, தர்க்க அறிவை சோசலிசச் சித்தாந்தங்களை கட்டி எழுப்புவதில் செலவளிக்கிறேன்.வாழ்நிலை சிந்தனையைத் தீர்மானிக்கும் என்பது தட்டையான சிந்தனை. என்னுடைய வாழ்நிலை என்னுடைய வர்க்க உணர்வை மழுங்கடிப்பதில்லை. மாறாக அதிகரிக்கிறது. நான் ஒரு 'முதலாளியாக' ஆனாலுங் கூட என்னுடைய வர்க்க உணர்வு மாறாதிருக்கும்.

அது எப்படி என்று வேறொரு பதிவில் விளக்கலாம். மேலோட்டமாச் சொன்னால், இயங்கியலில் இருந்து ஆரம்பிக்கிற திறனைப் பெற்றுக் கொள்ளுகிற பொழுது கருத்தியல் ரீதியாக எவராலும் ஏமாற்றப் பட முடியாத நிலை தோன்றுகிறது. 


மார்க்சு, லெனின், மாவோ போன்றவர்களின் சிந்தனைக் குறைபாடுகளையும் எளிதில் இனங்காண தொழிநுட்ப பயிற்சி உதவுகிறது (இதையேதான் மார்க்சியமும் சொல்லுகிறது). தொழிலாளர்கள் சிக்கல்தன்மையின் உச்சத்தில்தான் சோசலிச சிந்தனையைப் பெறுவார்கள் இதுவே மார்க்சியம்.


லெனின் அதைக் கபடமாக உடைக்கிறார். தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களை அடிப்படைவாதிகளாக்குகிற முன்மொழிவுதான் தோழர் பகிர்ந்திருக்கிற கூற்று.


தொழிலாளர்கள் தாமாகவே தமக்கென்ற சுய சிந்தனைச் சட்டகத்தை உருவாக்கி விடாதிருப்பதற்கான கபடத் தாக்குதல்தான் லெனின் செய்திருப்பது. தமெக்கென்ற சட்டகத்தைத் தொழிலாளர்கள் உருவாக்குகிற வரைக்கும் அவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். 


இது உடைய வேண்டுமென்பதற்காகவே நான் பொதுவெளியில் என்னைத் திணித்துக் கொள்கிறேன். அவரவருக்கான சுயசிந்தனையை உருவாக்குவதர்கான என்னுடைய முதல்முயற்சியாக இயங்கியலை வரிப்படங்களினூடு புறவயப்படுத்தியிருக்கிறேன் (இன்னுமும் பதிய நேரங்க் கிடைக்கவில்லை, எழுதுவது இலகு, வரைவது பொறுமையாக ஒரு நாள் இருந்து செய்யப்பட வேண்டியது). வரிப்படங்களினூடு விளக்குவது, அதைப் பொதுவில் வைப்பதுமே என் நோக்கு. அறிவினூடு வருகிற அதிகாரத்தை உடைக்கிற உள்ளகப் பொறிமுறையையும் அதில் விதைத்து வைக்க வேண்டும்.


மார்க்சு, லெனின், மாவோ என்றெல்லாம் பெயர்களை, உருவங்களை, பிம்பங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டிருப்பது இன்னுமும் முதலாளித்துவக் கட்டத்தின் சிக்கல்தன்மைக்குக் கூட வந்திருக்காத நிலப்பிரபுத்துவச் சிந்தனையின் வெளிப்பாடு. 



உருவ வழிப்பாடு, அருவ வாழிபாடு என்றெல்லாம் வரிசைப்படுத்துவார்கள். பல தோழர்கள் இன்னுமும் உருவ வழிபாட்டுக் கட்டத்தில் இருக்கிறார்கள். எனி அருவ வழிபாடு (தத்துவப் பயிற்சி). வாழிபாடே இல்லாத சுய அறிவுக் கட்டத்துக்கு வந்து... கொஞ்சம் நாளெடுக்கும். சுயவிமர்சனத்தினூடு நாம் விரைவு படுத்தலாம். வழிபாடே வேண்டாம். கருத்துக்களைக் கையாளப் பழக வேண்டுமே தவிர நமக்கு மார்க்சும் லெனினும் அவசியமல்ல. அது அடிமை மனக்கூறு.

இந்த அடிமைக் கூறைத் தோழர்கள் தூக்கிப் போட்டால்தான் சோசலிசக் கட்டம் சாத்தியமாகும். அது வரையில் அது வெறும் கற்பனாவாதமே. எவர் வேண்டுமானால் தான் ஒரு சோசலிஸ்ட், இதுவே சோசலிசம் என்று எதையாவது சொல்லலாம். ஆனால் அதைச் சரிப்பார்க்க நமக்க இயங்கியலும், விஞ்ஞானமும் இருக்கிறது.அதனால்தான் உங்கள் ஒவ்வொருவரையும் 'தோழரே உங்களது சோசலிசம் தொடர்பான புரிதலை முன்வையுங்கள்' என்கிறேன்.  நீங்கள் தயங்குகிறீர்கள். நடுங்குகிறீர்கள். முடிந்தளவுக்கு மடைமாற்றி, எதையாவது புத்திசாலித்தனமாகச் சொல்லித் திசைமாற்றுகிறீர்கள்.


என்னையும் தோழர் என்று அழைத்து விடாது மிகக் கவனமாக இருக்கிறீர்கள். உங்களது பயம் சிரிப்பைத் தருகிறது. 

மார்க்சு, லெனினைத் தாண்டி வர  உங்களுக்கு முடியவில்லை. நீங்கள் தாண்டி வருகிற பொழுது மட்டுந்தான் விஞ்ஞான சோசலிசம் சாத்தியம்.

மேற்படி கூற்றின் படி லெனின் சொல்லுகிற சோசலிசம் விஞ்ஞான பூர்வமானதோ, மார்க்சியத்துடன் இயைந்ததோ அல்ல. குறைந்த பட்சம் அதையாவது புரிந்து கொள்வது உங்களது சிந்தனையில் பாய்ச்சல் நிகழ்த்தும்.

சோசலிசத்துக்கான விஞ்ஞானப் பாதையை தொடர்ந்து துல்லியமாக்குவது நாம் கூட்டாக ஆற்ற வேண்டிய நெடிய பயணம்.அதற்கான சில வரைவுகளை எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆழம் போகலாம். என்னுடையது இயங்கில் பூர்வமானதெனக் குறிப்பிட்டிருந்தேன். அதனால் அது தொடர்ந்து மேம்படுவதாக இருக்கும். 

அதனால் அதனால் லெனினின் மேற்படி கூற்றுப் போன்ற கட்டுப்பெடித்தனமான வாக்கியங்களை எதிர்பார்க்க வேண்டாம். சோசலிசத்துக்கான இயக்கத்தைப் புரிந்து கொள்வதே தேவையானது.கீழுள்ள பதிவு அதன் இயக்கம் பற்றிப் பேசுகிறது. விஞ்ஞானத்தையும் இயங்கியலையும் இணைப்பது பற்றியும் எழுதியிருக்கிறேன். 



பாட்டாளிகள் மறுபடி மறுபடி ஏமாற்றப் படக் கூடாது. சுயபுத்திச் சட்டகத்தை ஒவ்வொருள்ளும் விதைக்காமல், அதற்காக ஊக்குவிக்காமல், எவருடைய தத்துவங்களை விற்றுக் கொண்டிருக்கக் கூடாது. அல்லாது விடின், சில பாட்டாளிகள் பல பாட்டாளிகளை அறிவைக் கொண்டு ஆளுவது இயங்கியல் போக்கில் எதிர்வு கூறப்படத்தக்கது. அது கண் முன்னே நடந்தேறியும் வருகிறது. 




பல தோழர்களின் கட்டுப்பெட்டிச் சிந்தனை எனக்கு மிகுந்த கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஆற்றாமையையும் தருகிறது. அந்த உணர்ச்சிகள் என்னுடைய எழுத்துக்களில் உண்டு.

எழுதுகிற முறை, உணர்ச்சிக் கொதிப்பு, எழுத்துப் பிழை இந்த மாதிரியான மேம்போக்கு விசயங்களைக் கொண்டு திசைதிருப்பாமல் உள்ளடக்கத்தை முதன்மைப் படுத்த தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 

வேறொரு இடத்தில் எழுதிய பொருத்தமான பகுதி:  



சோசலிசப் புரட்சி என்ற பெயரில் ஆராவது எதைவாது செய்யலாம். அது நின்று பிடிக்காது. அது எவரோ காட்டிக் கொடுத்து, துரோகம் செய்து, சதிப் புரட்சி செய்து உடைக்கப் படுவதில்லை. அப்படியெல்லாம் 'வாதிடுவது' வரலாற்றை மீச் சிறு நிகழ்ச்சிகளில் இருந்து அணுகுகிற மார்க்சிய விரோத சிந்தனை முறை.


மனிதர்களின் சிந்தனை சோஷலிச சித்தாந்தங்களை இயல்பாக விளங்கி ஏற்கிற மட்டத்துக்கு வரவில்லை என்றே அது காட்டுகிறது. நான் 'மக்கள்' என்ற சொல்லை முடிந்தவரை தவிர்க்கிறேன். மக்கள் என்பது ஒரு மந்தைப் பிம்பத்தே தோற்றுவிக்கிறது. மானிட விடுதலை, மனிதர்கள் என்றே பயன்படுத்துகிறேன்.

மக்கள் அரசியல் என்பதை விடவும் மானிட விடுதலைக்கான அரசியல் என்பதையே பயன்படுத்துகிறேன்.

தனது தனிப்பட்ட தேவைகளைத் தீர்க்கப் போராடி, தனக்கான அடையாளம், வெளியைத் தெரிந்து, இந்தப் போராட்டத்தில் சிந்தனை மட்டத்திலான விருத்தியையும் ஒருங்கே பெற்று, ஒரு கட்டத்தில் தனக்குக் கிடைக்கத்தக்க ஆகக் கூடிய வெளி சோசலிசக் கட்டத்தில் மட்டுமே சாத்தியம் என்பதைப் புரிந்து கொண்டு,  சுய நலத்தில் இருந்து புரிதலினூடு பொதுநல சித்தாந்தங்களைத் தெரிகிற மனிதர்கள்தான் பேண்தகு சோசலிசக் கட்டத்தைக் கொண்டு வரப் போகிறார்கள்.

தலைகீழாக விளங்கிக் கொள்ளக் கூடாது.

சுய புத்திச் சட்டகத்தை தெரிகிற மனிதர்கள் ஒட்டுமொத்த மனித வெளியை அதிகரிக்கிற வரலாற்றுக் கட்டமாக சோசலிசத்தை இனங் கண்டு தம்மை அதற்குத் தயார் படுத்துவதில்லை. தலைகீழே உண்மையானது. சுய புத்திச் சட்டக மனிதர்கள் ஒட்டுமொத்த மனித வெளியை அதிகரிக்கிற வகையில் சோசலிசக் கட்டத்தைத் தொடர்ந்து வடிவமைப்பார்கள், புதுப்பிப்பார்கள் என்பதே உண்மை.

ஒட்டு மொத்த மனிதர்களுக்குக் கிடைக்கத் தக்க அதி கூடிய வெளியைத் தேடுகிற பயணந்தான் சோசலிசத்தைக் கட்டமைக்கும். அது உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்ட நிகழ்வுப் போக்கில் கட்டமையும். தொடர்ந்து மாறும். பல பண்பு மாற்றங்களைச் சந்திக்கும்.

லெனின் சொல்லுவது அப்பட்டமான அரசியல் பொய்.

இந்தத் தனி மனிதப் படி ஏற்றங்கள் காலத்துடன் அதிகரித்து குறித்த சதவீதத்தை எட்டும். பொதுவெளியின் முதன்மை அறமாகவும் மாறும். முழுவதுமல்ல (முழுமை என்பது இயங்கியலில் அர்த்தமற்ற பதம், நான் குறிப்பிடுகிற 'முழு' தொடர்ந்து முழுமை அடைகிற விசயம்). சாதியம் எப்படி பொதுவெளியில் பம்முகிறதோ, ஆனாலும் பல வெளிகளில் இன்னுமும் திளைக்கிறதோ அதைப் போலத்தான். முதன்மை என்றால் அம்பது வீதம் என்று கூட அர்த்தமல்ல. பொதுப் புத்திக் கருத்து வெளியில் முதன்மை அடைகிறது.

இந்த எதிர்காலப் பொதுப் புத்திக் கட்டத்தில் 'மக்கள் சோசலிசத்தைக் கொண்டு வருவார்கள் என்று சொல்லுவது ஏற்புடையது.இப்போது 'சோசலிசத்தை' 'மக்கள்' நிறுவ வீண்டும் என்று அணி திரட்டினால், அந்த மக்கள் கூட்டத்தின் மீச் சிறு அளவிலான சுய புத்தியாளர்கள் (தத்துவ புரிதல் உள்ளவர்கள், தெரிந்தோ தெரியாமலோ) மிகுதிப் பெரும் பான்மையை  'வழி நடத்துகிற', அதாவது அந்தப் பெரும்பான்மையை விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ அடிப்படைவாதிகள் ஆக்குகிற (தமக்கு விளங்காததை அவர்களை ஏற்கச் செய்கிற) செயற்பாடாக, விஞ்ஞான பூர்வமற்ற மக்கள் விரோத செயற்பாடாகவே  'சோசலிசம்' முடியும்.

இந்தப் போக்கு நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து கொண்டே தான் ஒரு சோசலிஸ்ட் என்று நம்புகிற பலரைப் பெருமளவில் உருவாக்கி வைக்கிறது. விளங்தவர்களுக்கு விளக்கலாம். நம்புகிறவர்களுக்கு விளக்க முடியாது. தர்க்கமும் தெரியாது. விஞ்ஞானமும் தெரியாது. சோசலிசமும் தெரியாது.

ஆனால் எந்த உறுத்தலுமின்றி விஞ்ஞான சோசலிசம், அதற்கான விஞ்ஞான பாதை தமக்கு விளங்கி விட்டது என்று தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டு வாழுகிற மனிதர்களை அது உருவாகுகிறது. இந்த இடத்தில் 'மக்களை' உருவாக்குகிறது என்றும் பாவிக்கலாம்.

இது ஒரு அடிப்படைவாத சக்தியாக உருவெடுத்து சோசலிசக் கட்டத்தைப் பிற்போடவும் செய்கிறது.

இந்த விளங்காததை விளங்கியதாக நம்புகிற அடிப்படைவாதமும், போலியான பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு வண்டி ஊட்டுகிற  பிழைப்புவாதமும், இடத்தை இறுகப் பிடிக்கத் துடிக்கிற அதிகார வேட்கையும் மார்க்ஸ், லெனின் போன்றவர்களின் சிந்தனைக் குறைபாடுகளைப் புரிந்து கொள்ளக் கடைசி வரைக்கும் இயலாதவர்களாய் தமக்கான சிந்தனைச் சட்டகத்தை ஆக்கிக் கொள்ள முயலாதவர்களாய் (முடிவது, முடியாதது இரண்டாம் பட்சம், முயற்சி இல்லை, அந்தத் திசையில் திரும்பவில்லை என்பதுதான் உண்மையான பிரச்சினை) அவர்களை அடித்துப் போடுகிறது.

தமக்கான சுய சிந்தனைச் சட்டகத்தை பத்திருபது வீத மனிதர்கள் ஆக்காத வரையில் சோசலிசம் வெறும் கற்பனாவதமே. சோசலிசத்துக்கு வேறெந்தக் கிளைகளும் கிடையாது. தாராண்மைவாதம் அளிக்கக் கூடிய அதியுயர் சிந்தனை வெளியைக் காட்டிலும் அதிகமான சிந்தனை வெளியை குறித்த வீதத்தினர் பெறுகிற வரையில் இது சாத்தியமல்ல.

நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து கொண்டு சோசலிசம் வரப் பாடுபடுவது உண்மையில் ஏமாற்றத்துக்கே வழி வகுக்கும். பிற்போடும். மறுபடி மறுபடி தோற்கடிக்கும்.

முதலாளித்துவ மனநிலை முதிர்ந்தே சோஷலிச மனநிலை வருகிறது. இன்னொரு குறுக்கு வழி இருக்கிறது. அது தத்துவ அடிப்படைகளைப் புரிந்து கொண்டு முதலாளித்துவ முதர்ச்சிக்கு முன்பாகவே சோஷலிச மனநிலைக்குப் போவது.

சோஷலிச மனநிலையில் இருந்து தாராண்மைவாத இயக்கத்தை எல்லாவித வெளிகளிலும் எதிர்ப்பதுதான் சரியானது. சோசலிசக் கட்டத்தை நோக்கி விஞ்ஞான பூர்வமாக வேலை செய்கிற அனைவருக்கும் இது கட்டாயமானது.
சரியான திசையில் திரும்புவதே முக்கியம். எவ்வளவு மெல்ல நடந்தாலும் இலக்கு வந்துவிடும்.

சோஷலிச மனநிலைக்கு முதலாளித்துவம் முதிர்ந்து வரலாம். அல்லது தத்துவப் புரிதலில் இருந்து வரலாம்.

அல்லது 'நான் வந்து விட்டேன்' என்று சும்மாவும் சொல்லலாம். இதுதான் சோசலிசம் என்று ஆரும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அதெல்லாம் விஞ்ஞான சோசலிசம் ஆகாது. பொதுவில் வைக்கப் பட்டுச் சரிபார்க்கப்பட வேண்டும்.

உண்மையில்  சோசலிசத்தை விஞ்ஞான பூர்வமாக்குவதே இந்த இயக்கந்தான்.

இந்த இயக்கமே சோசலித்தைப் புறவயமாக்கும் ஒரே வழி.

இதை அன்றி விஞ்ஞான சோசலிசம் வேறில்லை.

இயங்கியலை 'எழுதி' புரிய வைக்கிற முயற்சி அதனளவில் குறைபாடுள்ளது.
இனி வருங்காலத்தில் அசைபடங்களாக, மெய் நிகர் வெளிகளில் எல்லாவிதமான தொழிநுட்ப சாத்தியங்களின் ஊடும் இயங்கியல் அறிவையும் பயிற்சியையும் நாம் வழங்க வேண்டும்.

எந்த அறிவும் எவருக்கும் பொதுவானது. எனது இயங்கியல், உங்களைத் இயங்கியல் என்றெல்லாம் ஒன்றில்லை (அந்த நிலைக்கான பொறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும்).

அதைப் போல மார்க்சின் இயங்கியல், ஹெகலின் இயங்கியல், லெனின் தத்துவம் என்றெல்லாம் ஒன்றில்லை.

எல்லா அறிவும் எல்லோருக்கும் பொதுவானது அதை எடுத்து ஆள்வதும், ஆள ஊக்குவிப்பதும், அதற்கான கட்டமைப்பை எழுப்புவதுமே முக்கியம். அடிமையாய் இருப்பது அவரவர் தெரிவு. அனால் இது அடிப்படைவாதத்தின் தோற்றுவாய். ஆகவே தனி உரிமை அல்ல. இந்தப் போக்கை விமர்சிக்க போது வெளி பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் முடியும். கட்டாயம் விமர்சிக்க வேண்டும்.அடிமைகளாய் மார்க்சிய மூலவர்களின் காலடியில் உட்கார்ந்து அண்ணாந்து பார்த்து பேராசான், மாமேதை என்று அடிமைகளாய்ச் சேவிக்காமல் அவர்களது தோள்களில் ஏறி தலையிலும் மிதித்து அவர்களது சிந்தனை முறைகளுக்கு எட்டாத வெளிகளிலும் நாம் பயணிக்க வேண்டும். அப்படிப் பயணிக்க முயல்கிறவர்கள் (முடிவது பல காரணிகளில் தங்கியிருக்கும்) மட்டுமே விஞ்ஞான முறை சோசலிஸ்ட்கள்.


பிற்சேர்க்கை

//நடந்த உரையாடலில் சில தோழர்கள் 'லெனின் முதலாளித்துவம், சோசலிசம்' சொல்லிவிட்டார். நீங்கள் சொல்லுகிற மூன்றாவது எங்கே என்று மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இது தர்க்கத் திறன் இல்லாத பிரச்சினை.

இவர்கள் 'எனக்கும் (முதலாளித்துவம்), எனது மகனுக்கும் (சோசலிசம்) எல்லா விசயமும் தெரியும்' என்கிறார்கள்.

நான் கேட்கிறேன் - "சரி எனக்கு உங்களைத் தெரியும் (முதலாளித்துவம்). உங்களுடன் நேரடியாகப் பழகிவருகிறேன். இயக்க விதிகள் தெரியும். ஆனால் உங்களுடைய மகனைக் காட்டுங்கள். அவரது இயக்க விதிகளைப் புரிந்து கொண்டு அதைப் புதுபிக்கத்தக்க வழிகளைக் காட்டுகிறேன்." என்கிறேன்.

ஆனால் அவர்களோ 'இல்லை இல்லை. எனக்கும் என் மகனுக்கும் தெரியாத எதுவும் இல்லை. எங்கள் இருவருக்கும் தெரியாத அந்த (மூன்றாவது நபருக்குத் தெரிந்த) விசயத்தைச் சொல்லு என்று அடம்பிடித்தார்கள்.

இது மோசமான வாதப் போலி. தர்க்கத் திறன் பிரச்சினை.

தவிர லெனின் முதலாளித்துவம், சோசலிசம் என்று ஒரே தட்டில் வைப்பதில் ஒரு மயக்கம் இருக்கிறது.

முன்னையது தெரிந்தது. நடைமுறையில் இருப்பது. விதிகள் தெரியும். நிகழ்வுப் போக்குடன் மாறினாலும் அதைத் தொடர முடியும். பின்னையது நிகழ்வுப் போக்குடன் தொடர்ந்து புதுப்பிக்கப் படுவது. இன்னுமும் நிர்ணயிக்கப்படாதது.

அதாவது முடிவிலி இடைநிலைச் சோசலிச தத்துவங்கள் உண்டு.

அல்லது சோசலிசம் என்பது தொடர்ந்து புதுப்பிக்கிற (முடிவிலி இடைநிலைப் படிகள் இருக்கிற) ஒரு தத்துவம்.

இந்த இரண்டு மட்டுமே இயக்க நிலைச் சிந்தனையில் சாத்தியம்.

மூன்றாவது தத்துவம் எது என்று ஓயாமல் கேட்டது அவர்களுடைய இயங்கியல் தர்க்கத்தின் குறைபாட்டைக் காட்டுகிறது.

இது பல தோழர்களுக்கு இயக்க நிலைச் சிந்தனை இல்லாத பிரச்சினை.

//உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப் போக்கிலே , தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக்கொள்ளும் பேச்சுக்கிடமில்லை.
// லெனின்

இது சோஷலிச வரைவுக்கே முரணானது. இது நிர்ணயவாதமாக, விதிவச வாதமாக, வளர்ச்சிப் போக்கற்றவொன்றாக சோசலிச சிந்தனையை முடக்குகிறது.

லெனின் சொல்லுவது சோசலிசம் அல்ல. நிகழ்வுப் போக்கில் வளர்த்தெடுக்கப் படுவதே சோசலிசம்.

லெனின் சொல்லுவதுதான் சோசலிசம் என்கிற முன் முடிவோடு என்னை 'லெனின் சோசலிசம், முதலாளியம் சொல்லிவிடார், உன்னுடைய மூன்றாவது தத்துவம் என்ன?' என்று கேட்பது மோசமான முன்முடிபும் அடிப்படைவாதமுமே.

நான் சொல்லுவதுதான் சோசலிசம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்ல. நான் சொல்லுவதேதுவும் முடிந்த முடிவு அல்ல. ஒவ்வொரு பதிவிலும் அதை அழுத்தி வருகிறேன்.

முறையைப் புறவயப் படுத்தி பொதுவில் வைத்து தொடர்ந்து கூட்டாக முன்னேற்றி 'விஞ்ஞான பூர்வமாய்' மாற்ற வேண்டும்.

இவ்விதந்தான் தான் சோஷலிச விஞ்ஞான பூர்வமே ஆக்க வேண்டும். வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள்.

அதற்குள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் விஞ்ஞான முடிவு என்று பொய் சொல்லுவது எப்படி?

இது மிக வெளிப்படையான மதவாதந்தானே? //


என்னுடைய துணை நிலா முன்பொருமுறை கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது.
அதன் சாரம் - முதாலாளியக் கட்டத்திலிருந்து சோசலிசக் கட்டத்துக்கான உடைப்பு நிகழ்கிற பொழுது, அந்த நிகழ்வில் முதலாளித்துவத்தின் செல்வாக்கு எவ்விதம் இருக்கும்? எந்த இடத்தில் உடைப்பு நிகழ்கிறது, எவரால், எதற்காகத் தூண்டப் பட்டது, அந்தக் கால கட்டத்து பொதுப்புத்தி மட்டம் இவற்றின் செல்வாக்கு என்ன? எனக்குத் தெரியும். உங்களுக்குப் பதில் தெரியுமா? என்று கேட்டார். நிலா கேட்ட பொழுது எனக்கு அந்தக் கேள்வியைச் சரியாக மட்டுக்கட்ட முடியவில்லை. என்னுடைய சிந்தனை போதாமல் இருந்தது. இப்போது லெனினின் மேற்படி கூற்றை உடைத்து வருகையில் என்னுடைய அறியாமையும் சேர்ந்தே உடைக்கப்படுகிறது. செல்வாக்குச் செலுத்தும். அதனால்தான் சோசலிசம் நிகழ்வுப் போக்குக்களினூடு தொடர்து வரைவுபடுகிற விஞ்ஞான பூர்வ செயற்பாடாக இருந்தாக வேண்டும். இந்தத் திசையில் தொடர்ந்து இயங்குகையில் சோசலிசக் கட்டத்தின் ஆரம்பப் புள்ளியின் பாதிப்பு அற்றுப் போகும். சோசலிச உடைப்புக் கட்டம் என்பது ஒரேயடியாய் நடப்பதல்ல. ஒரு தோழர் இப்படிக் கேட்டார், என்னை நேரடியாகக் கேட்காமல், தவிர்த்து (அவர் தோழர் என்றும் அழைப்பதில்லை, அவரது அதிகாரவெளி தொடர்பான பிரச்சினை அது) //ஏகாதிபத்தியத்தின் வேட்டைக்காடாக மாறியிருக்கும் மூன்றாம் உலகநாடுகள் முழுமையான முதலாளித்து நாடாகும் வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறீர்களா ப்ரவீன் தோழர்// 'முழுமையான' முதலாளித்துவ நாடாக எந்த நாடும் ஆகாது. இது இயங்கியல் விளக்கமற்ற அர்த்தமற்ற கேள்வி. அதைப் போல சோசலிச மாற்றமும் முழுமையானதல்ல. அதுவும் பல படிமுறைகளில் நடந்தேறுவது. இந்தப் புரிதல்களினூடு சோசலிச உடைப்பு நிகழும் கட்டத்தின் செல்வாக்கை சோசலிச கட்டச் சித்தாத்தங்களில் குறைத்து வடிவமைக்கலாம்.

-Nila

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home