Saturday, February 24, 2018

இயங்கியலைப் புறவயப்படுத்தல்

'மார்க்சிய மூலவர்களின்' சிந்தனை முறை, முடிவுகளைச் சரிபார்க்க, புதுப்பிக்க இயங்கியல் அறிவு இன்றி முடியாது.

இந்தப் புதுப்பிக்கிற அசைவியக்கம் சமூக மட்டத்தில் பரவலாக நடந்தேறுகிற வரையில் 'சோசலிசம்' வெறும் கற்பனாவாதமே.

எவ்வளவுக்கெளவு 'மார்க்சிய மூலவர்களின்' சிந்தனையைப் புதுப்பிக்க ஊக்குவிக்கிறேனோ அதை விடவும் அதிகமாக அந்தப் புதுப்பித்தல் இயக்கமும் அனைவருக்கும் பொதுவாய், கட்டற்றதாய் இருக்குமாறு வடிவமைக்க முனைகிறேன்.

இயங்கியலையும் விஞ்ஞானத்தையும் முரணின்றி (இயங்கியல் அடிக்கோள்களுடன் மட்டும் முரண்கள் இருக்குமாறு) இணைத்து, பொய்ப்பிக்கப்படத் தக்க முடிவுகளை எதிர்வு கூறுவதன் மூலமே இயங்கியல் விஞ்ஞானபூர்வமாக முடியும்.

இயங்கியல் விஞ்ஞானபூர்வமாக முடியுமே தவிர அது ஒரு போதும் சூத்திரங்களை உருவாக்குகிற 'விஞ்ஞானமல்ல'.

பருமட்டான கணித்தல்களே சாத்தியம்.

உதாரணத்துக்கு இயற்கையிலிருந்து தனித்த, இயற்கையை தனக்கேற்ப வளைக்கிற  (உதாரணம் மனிதர்கள், மனித உழைப்பில் செயற்கை நோக்கோடு உற்பத்தியாகிறவை, சாத்தியமான வேற்றுக்கிரகவாசிகள் இத்யாதி) கூறுகளின் சமூக இயக்கம் ஒரு கட்டத்தில் அவை அனைத்தும் கூட்டாக இணைந்து இயற்கையின் சவால்களையும் எதிர்கொள்ளும் என்பதுதான். இவ்வகையில் மட்டுமே அந்தச் சமூகத்தின் தனித்த கூறுகளுக்கு அதியுயர் சராசரி வெளி கிடைக்க முடியும்.

தனித்த கூறுகளின் அனைத்து சமூக முரண்களும் (வர்க்க முரண்கள் அடங்கலாக) மேற்படி நிலைக்கான திசையிலேயே "முதிர்ந்து" தீர்வடையும்.

இந்த இயக்கத்தை ஆழப் புரிந்து கொள்வதன் மூலம் இந்த முதிர்ச்சியை விரைவுபடுத்தலாம்.

எல்லாவிதமான அர்த்தங்களும் இயக்கம் சார்பானவை. இயக்கத்தின் பொதுப்பண்புகளை ஆழ ஆராய்வதன் மூலம் எல்லாவித வெளிகளிலும் புரிதல்களை மேம்படுத்த முடியும். .

அதற்கான முயற்சியே 'வரிப்படங்களின் வழி இயங்கியலைப் நியமப்படுத்தல்'.

நான் சொல்லுவதுதான் நியமம் என்பதில்லை. அது நியமப்படுத்தலின் தொடக்கம். இது விஞ்ஞானபூர்வ சோஷலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிற கொண்ட அனைவரது பங்கெடுப்பும் புதுப்பித்தல்களும் அத்தியாவசியம். அதனால்தான் முதற்கண் பொதுவில் வைத்து, புரிதலை இலகு படுத்தி, அனைத்து மட்டத்தினரும் பங்கெடுக்க வைக்கிற முயற்சியாக இந்த வரிப்பட நியமம் இருக்கிறது.

தத்துவப் பயிற்சி ஒரு நூலிழை தப்பினாலும் அடிப்படைவாதமாக மாறும்.

அதைத் தடுக்க அடிப்படை வாதமாக மாறுகிற விசையை விட அதிக விசை கொண்ட உள்ளகப்பொறிமுறைகள் தேவை.

- வரிப்படங்களாக நியமப்படுத்தல், 'பிரட்டிப் பிரட்டி' அதுதான் இது, இதைத்தான் குறித்தேன் என்று மாற்றி எமாற்றாதிருக்க இது மிக முக்கியம்

- பொய்ப்பிக்கப் படத்தக்க நிபந்தனைகளை, பிரயோக எல்லைகளைத் தெளிவாக வெளிப்படுத்தல். அதாவது விஞ்ஞானத்தை முரணின்றி இணைத்து விஞ்ஞானத்தால் பொய்ப்பிக்கப் படுகிற நிபந்தனைகளை வெளிப்படையாக தெளிவாக முன்வைக்க வேண்டும்.


- ஒரே ஒரு விசயத்தில் தோற்றாலும் (எந்தவொரு விதிவிலக்கிலும்) புதுப்பிக்க முடிந்தால் புதுப்பிக்கலாம், அடிக்கோளை (அடிக்கோள்களை)  இணைக்கலாம்.  மாற்றலாம். எதையுமே மாற்றாமல் விதிவிலகை ஆவணப் படுத்தி இணைத்து வைக்கலாம். புதுப்பிக்க முடியாவிட்டால் மொத்தமாகத் தூக்கிப் போட்டு விட்டு தெரிந்த விதிவிலக்குகள் இல்லாத புதியவொன்றை ஆக்கலாம்.

- கருத்துமுதல்வாதத்தைக் களைவது செயலுக்கு (அதற்கான திட்டமிடல் அடங்கலாக) அத்தியாவசியம்.  பிழைப்புவாதம், அடிப்படைவாதம் இவற்றைக் களைவது செயலின் வினைத்திறனை அதிகரித்து வரும்.  இதைப் புரிந்து கொள்வது மட்டுமில்லாமல் இவற்றைத் திருத்தமாக இனங்காணுகிற வகையில் எமது தத்துவம் வரைவுபடுத்த வேண்டும். அவ்வகையில்   ஒவ்வொரு கருத்தையும் சரிபார்க்க, புதுப்பிக்க முடியும்.

- இந்தச் சட்டகத்தைக் கொண்டு (இது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிற சட்டகம்) அனைத்து இயக்கங்களையும் ஆராய, அனைத்து கருத்துக்களையும் சரிபார்த்துத் திருத்த முடியுமாகையால் கருத்து வெளியிலான அதிகாரத்தை உடைக்க முடியும். தனிமனிதர்கள் திசைப்படுத்தலுக்காக எவரையும் நம்பி இருக்க வேண்டியதில்லை. தகவல்களுக்காக மட்டும் அனைவரையும் நம்பி இருக்கலாம். சட்டகத்தைப் புதுப்பிக்க (முடிந்தவரை) அனைவரும் அனைவரிலும் தங்கி இருப்பர்.

- இயங்கியலில் விவாதம் என்கிற எண்ணக்கரு பிற்போக்கானது. உரையாடல் மட்டுமே. புதிய கருத்துக்கள், தத்துவங்கள் மேற்படி சட்டகத்தை மேவினால் சட்டகம் புதுப்பிக்கபட்டே ஆகவேண்டும். அதிக பிரயோக வெளி இருக்கிற இன்னொரு தத்துவம் இருக்கிற தத்துவத்தை விடத் திருத்தமானது. இந்தப் புதுப்பித்தல் உரையாடல் வழி நடைபெற முடியாதிருந்தால் இயங்கியல், விஞ்ஞான முறைப் பயிற்சி போதவில்லை என்பதுதான் ஒரே அர்த்தம். விவாதமும், மோதலும் சிந்தனை மட்டம் குறைவாயிருகிற பொழுது நடக்கிறது. குறைந்த பட்சம் ஒரு சாராருக்கு மட்டம் குறைவாயிருந்தாலும் உரையாடல் வழி தீர்வு கிட்டாது. அதனால் அமைதியான சமுகப் பண்பு மாற்றங்களின் சாத்தியம் மிக மிகக் குறைவு. ஆனால் இயங்கியல், மார்க்சிய முறைகளைக் கைக் கொண்டதகச் சொல்லுகிற இருதரப்பும் உரையாடல் வழி அனைத்துக்கும் தீர்வு காண முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் ஒரு தரப்பு போலியானது. சமகாலத்தில் இருதரப்புமே போலியாக இருப்பதையே அதிகம் அவதானிக்கிறேன்.

- ஒரு தரப்பு மட்டுமே போலியாக இருக்கிற பட்சத்தில் சரியான தரப்பை இனம் காண இயங்கியல் சட்டகம் உதவும். அதை விடவும் உடனடியாய்த் தெரிந்து கொள்ளச் சில உத்திகள்

அ. முனேற்றமான முறை:- இயங்கியல் தர்க்கம். முடிவுகளைக் கொண்டு அல்லாமல் முறையை முன்னிலைப் படுத்துவது. தகவல்களைக் கொண்டு எதையும் 'நிறுவ' முயலாமல் முறையைக் கொண்டு விளக்குவது (இயங்கியலின் படி எதையும் 'நிறுவ' முடியாது), வராலாற்றின் மீச் சிறு நிகழ்ச்சிகளைக் (ஆண்டு, அளவு, தகவல் இத்யாதி) கொண்டு உரையாடலை நிரப்பாமை. பொருத்தமான, மிகக் குறைவான உதாரணங்கள் அல்லது இல்லாமை. உதாரணங்கள் இயக்கநிலைச் சிந்தனையில் உதவிகரமானவை அல்ல.

ஆ. தனது கருத்துக்களுக்குப் பொருத்தமான வெளியை/சூழமைவை முன்வைத்தல். முடிந்த முடிபு போல எதையும் அழுத்திச் சொல்லாதிருத்தல். முடிந்த முடிபென்று எதுவுமில்லை என்பது மட்டுமே இயங்கியலில் முடிந்த முடிபு.


இந்தச் சட்டகம் சோசலிசத்துக்கான நெடிய பயணத்தினதும் அதிமுக்கிய பகுதி.

இது வரைக்கும் எழுத்துக்களில் வந்திருப்பவற்றை விடவும் வீரியமான சட்டகமாக இது இருக்கிறது. பொதுவில் வைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து புதுப்பிக்கவும் வலியுறுத்துகிறேன் (நான் தொடர்ந்து புதுப்பித்து வருவேன்).

இது என்னுடைய நியமம். ஒவ்வொருவரும் தமக்கான நியமங்களை ஆக்கிப் பொதுவில் வைக்க வேண்டும்.

குறைந்த பட்சம் பத்து-இருபது வீத (வீதம் அதிகரிக்கிற திசையில் சோசலிசம் விரைவுபடும். வீதம் எனக்குச் சரியாகத் தெரியாது, சில பொது மாதிரிகளை வைத்து இருபது வீதம் வரைக்கும் தேவைப்படும் என்று சொல்லுகிறேன்)  மனிதர்கள் இதைச் செய்யாத வரையில், வெறுமனே பின் தொடரிகளாக இருக்கிற வரையில் சோசலிசம் என்பது பேண்தகமை கொண்டதாக இராது.

தாராண்மைவாதம் அளிக்கக் கூடிய அதியுயர் சிந்தனை வெளியைக் காட்டிலும் அதிகமான சிந்தனை வெளியை குறித்த வீதத்தினர் பெறுகிற வரையில் இது சாத்தியமல்ல.

நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து கொண்டு சோசலிசம் வரப் பாடுபடுவது உண்மையில் ஏமாற்றத்துக்கே வழி வகுக்கும். பிற்போடும். மறுபடி மறுபடி தோற்கடிக்கும்.

முதலாளித்துவ மனநிலை முதிர்ந்தே சோஷலிச மனநிலை வருகிறது.

இன்னொரு குறுக்கு வழி இருக்கிறது. அது தத்துவ அடிப்படைகளைப் புரிந்து கொண்டு முதலாளித்துவ முதர்ச்சிக்கு முன்பாகவே சோஷலிச மனநிலைக்குப் போவது.

சோஷலிச மனநிலையில் இருந்து தாராண்மைவாத இயக்கத்தை எல்லாவித வெளிகளிலும் எதிர்ப்பதுதான் சரியானது. சோசலிசக் கட்டத்தை நோக்கி விஞ்ஞான பூர்வமாக வேலை செய்கிற அனைவருக்கும் இது கட்டாயமானது.

சரியான திசையில் திரும்புவதே முக்கியம். எவ்வளவு மெல்ல நடந்தாலும் இலக்கு வந்துவிடும்.

சோஷலிச மனநிலைக்கு முதலாளித்துவம் முதிர்ந்து வரலாம். அல்லது தத்துவப் புரிதலில் இருந்து வரலாம்.

அல்லது 'நான் வந்து விட்டேன்' என்று சும்மாவும் சொல்லலாம். இதுதான் சோசலிசம் என்று ஆரும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அதெல்லாம் விஞ்ஞான சோசலிசம் ஆகாது. பொதுவில் வைக்கப் பட்டுச் சரிபார்க்கப்பட வேண்டும்.

இந்த இயக்கமே சோசலிசத்தை விஞ்ஞான பூர்வமாக்குவதே இந்த இயக்கந்தான்.

இந்த இயக்கமே சோசலித்தைப் புறவயமாக்கும் ஒரே வழி.

இதை அன்றி விஞ்ஞான சோசலிசம் வேறில்லை.

இயங்கியலை 'எழுதி' புரிய வைக்கிற முயற்சி அதனளவில் குறைபாடுள்ளது.

இனி வருங்காலத்தில் அசைபடங்களாக, மெய் நிகர் வெளிகளில் எல்லாவிதமான தொழிநுட்ப சாத்தியங்களின் ஊடும் இயங்கியல் அறிவையும் பயிற்சியையும் நாம் வழங்க வேண்டும்.

எந்த அறிவும் எவருக்கும் பொதுவானது. எனது இயங்கியல், உங்களைத் இயங்கியல் என்றெல்லாம் ஒன்றில்லை (அந்த நிலைக்கான பொறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும்).

அதைப் போல மார்க்சின் இயங்கியல், ஹெகலின் இயங்கியல், லெனின் தத்துவம் என்றெல்லாம் ஒன்றில்லை.

அடிமைகளாய் மார்க்சிய மூலவர்களின் காலடியில் உட்கார்ந்து அண்ணாந்து பார்த்து பேராசான், மாமேதை என்று அடிமைகளாய்ச் சேவிக்காமல் அவர்களது தோள்களில் ஏறி தலையிலும் மிதித்து அவர்களது சிந்தனை முறைகளுக்கு எட்டாத வெளிகளிலும் நாம் பயணிக்க வேண்டும்.

அப்படிப் பயணிக்க முயல்கிறவர்கள் (முடிவது பல காரணிகளில் தங்கியிருக்கும்) மட்டுமே விஞ்ஞான முறை சோசலிஸ்ட்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home