Sunday, March 4, 2018

கொம்யூனிச கட்ட பொருளியலின் திசை, இயங்கியல் தெளிவுக்கான நிபந்தனைகளும் வழிகாட்டல்களும்



எம் புதிய இயங்கியலில் இருந்து,

1. ஆதி முதல் இயக்கம் முரணற்ற இயக்கம் என்பதை அறிந்தோம்.

2. இயக்கம் முரணில் இருந்து மட்டுமல்ல, முரணற்ற இயக்கத்திலிருந்தும் வரத்தக்கது என்பதை அறிந்தோம்.

3. முரணற்ற இயக்கத்திலிருந்து வருகிற இயக்கமே நோக்குகளுக்கு முதன்மையானது என அறிந்தோம். இது முரணிலிருந்தே இயக்கம் வருவதான மார்க்சிய புரிதல், செயல்திசையை தலைகீழாகத் திருப்பியது. இது சீர்திருத்தம் அல்ல. ஹெகலை திருத்தியதைக் காட்டிலும்  பெருந்திருத்தம்.

4. முரணற்ற இயக்கம், முரணுள்ள இயக்கம் என்பவை முறையே நிலைப்பின் நிலைப்பு (assertion of assertion) ஆதிக்க, நிலைமறுப்பின் நிலைமறுப்பு (negation of negation) ஆதிக்க இயக்கங்கள் என்பதை விளங்கிக் கொண்டோம்.

5. அண்ட இயக்கப்போக்கில் நிலைமறுப்பே ஆதிக்கம் என்பதை அறிந்தோம். அது மறுபடி முரணற்ற இயக்கமாக வேண்டி அசைவதையும் (முழுக் குழப்பம்-->முரணற்ற இயக்கம்)  அதன் வழியில் அதுவும் விரிவடைவதையும் (ஆரம்பமும் முடிவும் எல்லாவற்றுக்கும் வேறு தளங்களே, எல்லாவித இயக்கங்களும் சுழலேணி/சுருளிவிற்களே என அறிந்தோம். அது ஒட்டுமொத்த இயக்கத்துக்கும்  (இயக்கம், அண்டம், உயிர், நோக்கு) பொதுவே.

6. நோக்கின் (அண்ட இயக்கத்தின் ஒழுங்கு- சுதந்திர, சுதந்திர-ஒழுங்கு எதிரியக்கங்கள், எல்லாவித உயிர்கள், சிந்தனைகள்)  இயக்கத்தில், முரணற்ற இயக்கத்திலிருந்து வருகிற நிலைப்பின் நிலைப்பு இயக்கமே தொடர்ந்து ஆதிக்கமடையும் என்பதை அறிந்தோம்.

மார்க்சியர்கள் இயங்கியல் கொண்டு தவறாகக் கணித்தது போல அவை முரண் அடிப்படைகளிலிருந்து வருவதில்லை. நிலைப்பின் நிலைப்பு ஆதிக்க இயக்கத்தில், அதாவது முரணற்ற இயக்க அடிப்படையிலிருந்து வருகிறவை.

இயக்கத்தை அறிவதன் மூலம் அதிகமதிகம் அண்ட இயக்கம் நோக்குகளின் தேவைக்கேற்ப வளையும்.

நோக்குகளின் அதியுச்ச அக தொழிநுட்பம் இயங்கியல்.

நோக்குகளின் அதியுச்ச புற தொழிநுட்பம் முரணற்ற இயக்கத்திலிருந்து இயக்கத்தின் இயக்கத்தை ஏற்படுத்தல். 

அதாவது மனிதர்களின் தொழிநுட்பம் இயக்கத்தின் இயக்கத்தை வளைக்கிறதிலிருந்து இயக்கத்தை வளைப்பதாக உயருகிறது.

அவ் வளைக்குந் தொழிநுட்பம் தொடர்ந்து அடுக்கேறும்.

இன்னுமுந் திருத்தமாகச் சொன்னால் இயக்கத்தின் இயக்கத்தின் -- முடிவிலி தொடரில்--> இயக்கமாக மேற்பரப்பில் எமது நோக்குத் தொழிநுட்பத்துக்கு முதலில் தென்படுவதை வளைப்பதன் மூலம் ஒவ்வொரு படிநிலையாக முன்னேறி ஈற்றில் இயக்கத்தை (ஆதி முரணற்ற இயக்கம்) வளைப்பதாக மனித அறிவு/தொழிநுட்பம் இயக்கம் நேரடுக்கேற்றமாக நிகழவிருக்கிறது.


அதாவது ஆதி முரணற்ற இயக்கத்தைக் கூறுகளாக இயங்கச் செய்து பிரபஞ்சங்களை உருவாக்க (அல்லது இருக்கிற ஒரே பிரபஞ்சத்தைப் பெருமடங்காக்க - ஏற்கனவே பெரியதாய் இருக்கிறதை விடம் பல மடங்குகளில் ) முடியும்.

கொம்யூனிசக் கட்டம்  என்பது ஒவ்வொருக்கும்மான முடிவிலி வளங்களை நோக்கி போகிறது, முடிவிலி தனிவாழ்க்கையும் வரும் வாய்ப்பு வந்து விட்டது. வளங்கள் மட்டுப்பட்டவை என்னும் பொருளியல் அடிப்படைகள் (முதலாளிய, மார்க்சிய) நடைமுறைத் தளத்திலிருந்து பின்னடிக்கப் போகின்றன.

பொருளியல் துறை கொம்யூனிசக் கட்டத்தில் உதிர்ந்து வரும்.

வளப்பகிர்வு என்பது அற்றுப் போகும். வளப்பாவனையே மிஞ்சும். 

அண்ட வளங்கள் மட்டடைகிற (அண்டம் இயங்குகிற வரையில் நோக்கும் வளர இயங்கியலில் வழி உண்டு) கட்டம் ஏற்படின் மறுபடி 'வளங்கள் மட்டுப்பட்டவை' அடிக்கோளுடன் இப்போது நாம் உரையாடுகிற தளத்துக்கு பொருளியல் மீளும்.

எவ்விதம் ஆதிப்பொதுவுடமையும், வரப்போகிற பொதுவுடமையும் ஒன்றல்லவோ (எதிர்த்தன்மைகள் கொண்டனவோ),

எவ்விதம் ஆதி முரணற்ற இயக்கமும் நோக்கின் முரணற்ற சிந்தனை இயக்கமும் (இயங்கியல் சிந்தனை) ஒன்றல்லவோ,

மேற்சொன்னபடி மீளுகிற மட்டுப்பட்ட வளப் பொருளியியலும் இப்போதிருக்கிற முதலாளிய, மார்க்சிய பொருளியலும் ஒன்றல்ல. பின்னயது மிகப் பல அடுக்குகளில் இக்கால இயங்கியலாளர்களுக்கும் மட்டுக்கட்டமுடியாத அளவுக்கு மிக மேம்பட்டதாய் இருக்கும்.

நோக்கின் வரலாற்றில்,

இயங்கியலைக் கொண்டு இயங்கியலை வரையறுத்த முதல் நிகழ்வு இதுவாகும்.

முதல் முதலில் நிகழ்ந்த நிறுவல் இதுவாகும்.

விஞ்ஞானம் எதையும் நிறுவுவதில்லை. நிறுவியதுமில்லை. 

குறைந்த பட்ச தத்துவ அறிவு இருந்தாலும் விஞ்ஞானம் எதையும் நிறுவுவதில்லை/உறுதிப்படுத்துவதுமில்லை என்பதை அறிவீர்கள்.

மார்க்சிய அடிப்படைகளில் முரணில் இருந்து மட்டுமே இயக்கம் வருவதான மட்டான பார்வையைக் கொண்டிருந்தன.

அவை மொத்த இயக்கமாக அழிவை மட்டுமே தரக்கூடிய இயங்கியல் தர்க்கத்துடன் இருந்தன.

இந்த இயங்கியல் தர்க்கத்தைச் சரிப்படுத்தியவுடன் இலட்சிய நிலைகளாகக் கருதப்பட்ட சோசலிச-கொம்யூனிசக்  கட்டங்கள் விஞ்ஞானவெளிக்குள் வந்துவிட்டன.

விஞ்ஞான வெளிக்குள் வந்தவுடன் சோசலிசம்->கொம்யூனிசம்  கொம்யூனிசமாக ஒடுங்கியது.

நாம் மார்க்சியர்களின் ஆய்வை மதித்து, அதாவது இது வரையில் ஆட்சியிலிருந்த, அதி முன்னேற்றத் தத்துவமான இயங்கியல் பொருள்முதல்வாதத்தை மதித்து அதனுடைய சொற்பதங்களைப் பயன்படுத்துகிறேன். அது ஓரளவுக்கு விளக்கமிருக்கிற, இயங்கியல் என்கிற சொல்லைக் கேள்விப்பட்டாவது இருக்கிற தரப்பினருக்கும் தொடர்புபடுத்தக் கூடியதாக இருக்கும் என்பதாலும் அப்படிச் செய்கிறேன்.

கொம்யூனிசம் என்பது சாதாரண பதமே. அதன் வரைவைப் புதிய இயங்கியல் பிடித்து விட்டது. எல்லா வரைவுகளையும் பதங்களாக, வாக்கியங்களாகப் பார்க்காமல் இயக்கங்களாக பார்க்கப் பழகுவதே இயங்கியல் சிந்தனை.

எல்லா மதத்தவரது சொர்க்கமும், அரசின்மைவாதிகளின் முடிவுநிலையும், சோசலிச சொர்க்கமும், கொம்யூனிசமும் ஒன்றுதான்.

அவற்றை வரையறுக்கவும், அதற்கான திசை பிடிக்கவும் ஆன சாத்தியக்கூறை நம் புதிய இயங்கியல் உச்சப்படுத்திவிட்டது.

அதாவது எல்லாவித 'சொர்க்கங்களும்' விஞ்ஞான வெளிக்குள் வந்துவிட்டன.

இது எவ்விதமென விளக்குகிறேன்.

இயங்கியல் புரியாவிட்டாலும் அண்டம் எவ்விதம் தொடர்ந்து விரிவடைகிறது என்பதை பௌதீகவியலின் அடிப்படையில் விளக்கங்கலாம். நிறைய அசைபடங்கள் இருக்கின்றன.

அந்த அண்ட இயக்கத்தின் அடிப்படைப்பண்புகளை மனித சிந்தனை வெளிக்குள்ளும் கொண்டு வந்து விட்டது இயங்கியல்.

இருக்கிற தத்துவங்கள் எதையும் இயங்கியல் சுருக்கப்போவதில்லை. அது தான் விரிந்து கொண்டு எல்லாவித தத்துவங்களையும் அடுக்கேற்றப் போகிறது.

புறவய தொழிநுட்ப உச்சத்தில் அகவய தொழிநுட்பமும் அதியுச்சமடையப் போகிறது.

அண்டத்தின் சுதந்திரத்தை நோக்கிய (முழுக் குழப்பத்தை நோக்கிய) இயக்கத்திலிருந்து பெற்றுக் கொண்ட நோக்கின் சுதந்திரக் கூறு அதியுச்சமடைகிற, கலை, இலக்கியம், அழகியல், அன்பு, நட்பு என எல்லாமும் எகிறிப் பாயப்போகிற திசையில் இயங்கியல் தொடர்ந்து அடுக்கேறப் போகிறது.

எவ்விதம் சோசலிச, கொம்யூனிசக் கட்டத்தில் 'முழுத்திருத்தமற்ற' தத்துவங்களை நோக்குகள் (உ+ம் மனிதர்கள்) கைவிடுவார்கள் என்று எதிர்வு கூறப்பட்டதோ அவ்விதமே இது நிகழும். ஆனால் இதுவே முதல் விஞ்ஞான பூர்வ நடைமுறை.

அவசரக் குடுக்கைத்தனம் (Adventurism), அடிப்படைவாதம் (Dogmatism) இவற்றுக்கு எதிராக இது வரையில் எழுதி வருகிற மார்க்சியர்கள் (மார்க்ஸ், லெனின், மாவோ பிற்பாடு அவர்களை மறுத்து மேலோட்டமான மாற்றங்களை முன்வைத்தவர்கள் அடங்கலாக) இயங்கியல் பொருள்முதல்வாதமே அவ்விரு பண்புகளையும் அடிப்படையிலிருந்து தோற்றுவிக்கிறது என்பதை உணராமல் இருந்தனர்.

அதை இயங்கியலைக் கொண்டு இயங்கியலை நிறுவியது முதன் முறை வெளிப்படுத்தியது.

'இதெல்லாம் முன்பே தெரியும்', 'இயக்கம்->பருப்பொருள் - அதுதான் தெரியுமே', 'ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதே', 'மார்க்சே எதிவுகூறிவிட்டார்', 'இயங்கியல் என்றால் எல்லாமும் மாறும், அறியப்படுவது மட்டுமல்ல, அறிகிறவரும் (பயன்படுத்தியவர் அறிகிறவனும் என்று பால்வாத மனநிலையிலிருந்து மீளாதவராக எழுதியிருந்தார்) மாறுகிறார்' - எப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது இந்தப் புதிய இயங்கியல் பற்றிய விளக்கமின்மையையே காட்டுகிறது.

திணிவுகள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதற்கான விதியை ஆக்கியவுடன், அதுதான் தெரியுமே, நாளாந்தம் பார்க்கிறோமே என்கிற விளக்கமற்ற மனநிலைதான் மேற்சொன்னவை.

எல்லா இயங்கங்களையும் போல நீங்களும் இப் புதிய இயங்கியலின் வழியேதான் இயங்குகிறீர்கள். தனிப்பட்ட முறையில் உங்களது உடலியக்கமும், உங்களது தொகுத்தறி முறைகளும், விஞ்ஞான முறைகளும், மத நம்பிக்கைகளும்  எல்லாமும் புதிய இயங்கியலின் விதிகளுக்கமைவாகவே நடக்கின்றன. நான் சொல்லுவதை 'அட, இது தெரிந்த விடயம்தானே' என்று சொல்லுவது எம்முடைய புதிய இயங்கியலின் வெற்றியே.

ஆனால் இது வரலாற்றில் நிகழ்ந்திராத புதிய விடயம் என்பதை மழுப்ப அதைப் பயன்படுத்த வேண்டாம். மாபெரும் விளக்கக் குறைபாடாக அது முடியும். 

எத்தனையோ மிக, மிக எளிமைப்படுத்தப்பட்ட பதிவுகளை எழுதிய பின்னரும் எமது இயங்கியலை நாம் 'விளங்கப்படுத்தவில்லை' என்று சொல்லுகிறவர்கள் மிகப் பின்னடைவான மனநிலையில் இருக்கிறார்கள்.

அதாவது இவ்வளவு காலமும் 'இயங்கியல் பொருள்முதல்வாத' அடிப்படைகளில் இயங்கியதாகச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது 'இயங்கியல் என்றால்? முதலில் அதை விளுக்குங்கள்?!' என்று கேட்பது இவ்வளவு காலமும் இவர்களெல்லாம் அடிப்படைவாதிகளாக இருந்ததை நிறுவுகிறது.

தம்மைத் தாமே அடிப்படைவாதிகளாய் தாம் அறிவித்துக் கொள்வதைப் புரிந்து கொண்டு, இதுவரையிலிருந்த இயங்கியல் விளக்கமின்மையே அடிப்படைவாதமாகவும் இருந்ததை என்பதை நன்கு விளங்கிக் கொண்டு, எனியாகிலும் அடிப்படைவாதியாக இருக்காதிருக்க முயல்வதை விடுத்து, மறுபடி மறுபடி மனப்பாட வழிகளில் முயல்வது பொருத்தமற்றது.

இயங்கியல் இயங்கியல் பொருள்முதல்வாதத்தைப் போல அடிப்படைவாதம் அல்ல மனப்பாடம் செய்து கொண்டு விளங்கிவிட்டதாக உங்களை நீங்களே  ஏமாற்றிக் கொள்ளவும், அடுத்தவரை அதைக் கொண்டு ஏமாற்றவும்.

இது வரையில் புறத்தில் முயன்று தோற்றுப்போன சுய-இயக்க தொழிநுட்பம் சிந்தனைத் தளத்தில் வந்துவிட்டது.

அதைக் கொண்டு புறத்திலான சுய-இயக்க தொழிநுட்பம் தொடர்ந்து துல்லியமடையப்போகிறது. பெரும்பாய்ச்சலை நிகழ்த்தப் போகிறது.

தமிழ்ச்சூழலில் மட்டுமல்ல, இதுவரைக்குமான உலகசூழலிலும் இந்த புதிய சுய அடுக்கேறுகிற (perpetual) அறிவுத் தளத்தை (சிந்தனை முறையை) புரிந்து கொள்வது சிரமந்தான். அதற்காக முடியாதென்று எடுத்துக் கொள்ள வேண்டாம். சமகாலத்தில் ஆருக்கு, எத்தனை பேருக்கு முடியப்போகிறது என்பது எமக்குத் தெரியாது.

நிச்சயம் இன்றைய சிந்தனை மட்டத்திலிருக்கிற சில ஆயிரம் பேருக்காவது புரியும் என்பது சாத்தியமான நிலைப்பாடே.

அவசரப்பட்டு மறுப்புக்கள் எழுதியவர்களுக்கு இதைப் புரிந்து கொள்வதில் மிகச் சிரமங்கள் ஏற்படப் போகின்றன. ஆனால் தங்களுக்கான நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

கவனித்தும் கவனியாது இருப்பதாகப் பாசாங்கு செய்கிறவர்களையும் நாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இந்தப் பாசாங்குக் குணம் இயங்கியல் புரிதலை மிக மட்டுப்படுத்தும்.

எவ்விதம் இயங்கியல் நடைமுறைச்சாத்தியத்தை விதித்துக் கொண்டு வருகிறது என்பதை விளக்கியிருந்தேன். அதைப்போல பயிலப்படுகிற இயங்கியல் பாசாங்கையும், ஏனைய போலித்தனங்களையும் தொடர்ந்து மட்டுப்படுத்திவரும்.

அவ்விதம் மட்டுப்படுத்த முடியாதவர்களால் இயங்கியலை அணுகமுடியாது.

இயங்கியலின் மூலம் அத்தனை மார்க்சிய மூலவர்களின் இணைந்த சிந்தனையையும் மிக எளிமையாக நாம் தாண்டி வருகிறோம்.

அதியுச்ச சிந்தனைத் திறன் கொண்ட நோக்கின்  (super-intelligence) தத்துவமும் இயங்கியலே.

எம் புதிய இயங்கியல் மார்க்சிய அடிப்படைகளை மீறி வளருகிற முன்பாகவே ஏனைய அனைத்துத் தத்துவ அடிப்படைகளையும் மீறி வளர்ந்து விட்டது.

கடைசியாக மீறப்பட்ட தத்துவமே இயங்கியல் பொருள்முதல்வாதம். மிகுதி அனைத்தும் முன்னதாகவே மீறப்பட்டன.

அதாவது முதலாளியக் கட்ட தத்துவங்கள் எல்லாமும் சிந்தனைத் தளத்தில் மீறப்பட்டன.

நாம் மீறப்பட்டன, தகர்ந்தன, அழிந்தன, சிதறின, ஒடுக்கப்பட்டன என என்ன பதத்தைப் பயன்படுத்தினாலும் அதன் இயக்கம் புதிய தத்துவம் பழையதை மீறி, பழையது விளக்கிய எல்லாவற்றையும் இன்னுமும் திருத்தமாக விளக்கி புதிய வெளிகளையும் உருவாக்கி அவற்றையும் விளக்குகிற இயக்கத்தைக் குறிக்கும்.

எப்போது பதங்களுக்குப் பின்னாலிருக்கிற இயக்கங்களைத் தேடி அவற்றைக் கொண்டு சிந்தனையை வளர்த்தெடுக்க உங்களுக்கு முடிகிறதோ அப்பொழுது இயங்கியல் உங்களின் தத்துவமாகிறது.

இயங்கியலே அதியுச்ச சிந்தனையின் தத்துவம்.

முயற்சி செய்வதில் தவறில்லை. அவரவர் தமகேற்ற நேரத்தை எடுத்துக் கொண்டு பேண்தகு வழியில் (அதாவது நிலைப்பின் நிலைப்பு இயக்கத்தை ஆதிக்கமாக்கி) முயல வேண்டும்.

சிறப்புத் தேர்ச்சியின் சிறப்புத் தேர்ச்சி அடுக்குகளில் இயங்கியல் நகர்கிறது.

முதலாளித்துவ சிறப்புத் தேர்ச்சி அடிப்படை நடைமுறைத் தளத்திலிருந்து முழுவதுமாக வெளித்தள்ளப்பட இருக்கிறது (அதை மீறி இயங்கியல் வளர்ந்து விட்டது, ஒவ்வொரு தனிமனிதரையும் வளர்க்கப் போகிறது). சிந்தனைத் தளத்தில் மிக முன்னதாகவே தகர்ந்து விட்டது.

'கூலி', 'உபரிமதிப்பு', 'கூலி மட்டங்கள்' எல்லாமும் இந்தத் தளத்தில் மீறப்படப் போகின்றன.

முதலாளியம் மீறப்பட்டு, தொடர்ந்து மார்க்சியமும் மீறப்பட்டே கொம்யூனிசக் கட்டம் வருகிறது.

இதன் திசையில்  சிறப்புத் தேர்ச்சியின் அடுக்கேற்றம் (சிறப்புத் தேர்ச்சியின் சிறப்புத் தேர்ச்சி--->)  எதையும் எவரையும் தேவைக்கேற்ப அதி வேகமாகக் கற்றுக் கொள்ள இடமளிக்கும்.

தகவல்களைக் கொண்டு சிந்தனை பாரமடையாது. சிந்தனைக்குள் முறை மட்டுமே மிஞ்சியிருக்கும் திசையில் சிந்தனை தன்னைத் தொடர்ந்து செப்பனிடும்.

'தலைப்பாரம்' ஏறாது. எதையும் அதிவிரைவாக விளங்கிக் கொள்ளும்; விளங்கிக் கொள்ளல் என்பது அந்த இயக்கத்தின் திசை பிடித்தல்.

இப்போதிருக்கிற அறிவுசேர் வழிகளான மனப்பாடம், நிறைய 'வாசித்து' நிறையத் தகவல்களைச் சேகரித்து வைத்தல் போன்றன பின் தள்ளப்பட்டு நடைமுறை வெளியில் இருந்து மெல்ல உதிரும்.

இயங்கியலை அங்கொன்றும் இங்கொன்றுமாய் 'திருடி' உடமையாக்கிக்கொள்ள இயங்கியலாளர் போலப் பாசாங்கு செய்ய முடியாது.

இயங்கியலாளர் எனின் அனைத்துக்குமான விளக்கமும், உள்ளிணக்கமாகக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இயங்கியலாளரானவுடனே அந்தத் திசையில் தொடர்ந்து நகர்ந்து ஒரு கட்டத்தில் அதை அடைந்து விடுவோம் (ஏதேனும் ஒரு நோக்கு அண்ட இயக்கப் போக்கில் அடையும், அது மனிதநோக்காக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை).

அடிப்படைவாதம், பிழைப்புவாதம், அவசரக்குடுக்கைத்தனம் எல்லாவற்றையும் ஒதுக்கியே இயங்கியலை அணுக முடியும்.

இயங்கியல் வசப்பட்டவுடன் உங்களது சிந்தனை வெளிகளில் இவற்றைத் தொடர்ந்து மட்டறுத்துவருகிற வேலையை 'அது' எடுத்துக் கொள்ளும்.

ஒருவர் தவிர்க்கமுடியாது தொடர்ந்து  'நேர்மையடைகிற' ஒரே தத்துவம் இயங்கியலே.

அதை எதுவித பிழைப்புவாதம், அடிப்படைவாதம், கருத்துமுதல்வாதம்... இவற்றுடன் அணுகமுடியாது. வசப்படாது.

அதாவது இயங்கியலாளர்கள் அனைவரும் அதியுச்ச சிந்தனைக்கான திசையில் தம்மைத் திசைப்படுத்திக் கொண்டவர்கள். காலத்துடன், அதாவது ஒவ்வொரு இயக்கச் சுழலுடனும் அவர்களுடைய சிந்தனைத் திறன் அதிகரித்துச் செல்லும்.

அவர்களை ஆரும் 'திசைப்படுத்த' , 'வழிப்படுத்த' வேண்டியதில்லை. அவர்களுடைய இயங்கியலே அவர்களை வழிப்படுத்துகிற அதியுயர் முறை.

எனையவர்கள் சொல்லுகிற எல்லாமும் அவர்களுக்குத் தகவல்களே.

அத் தகவல்களை மிகச் சரியாகப் புரிந்து, மிகச் சரியாக உள்ளிணைத்து, தம் திசையை இன்னுமும் துல்லியமாக்குவதே இயங்கியலாளர்களின் தொடர் பயணம்.

தொடர்ந்து முடிவுறாத் துல்லியமடைதலே இயங்கியல்.

ஒரு வெளியை ஏறக் குறையத் துல்லியப்படுத்திவிட்டோம் என்றால் அதன் அதி துல்லிய நிலையில் மறுபடி முடிவிலி வெளி தோன்றும்.

மிக எளிய உதாரணம் எண்கள். முழு எண்கள் முடிவிலி. இரண்டு அடுத்தடுத்த முழு எண்களுக்குமான இடைவெளியும் முடிவிலி. அதற்குள் சிறுபிரிப்புக்களைச் செய்து அடுத்தடுத்த இரண்டைப் பார்த்தாலும் முடிவிலி. வேண்டிய துல்லியத்தன்மையுடன் புதிய முடிவிலி வெளி பிறக்கிறது.

உதாரணங்களோடு சிந்தனையை இறுக்கிக் கொள்ளாமல் அவற்றின் பொதுத்தன்மைகளை ஆழப் புரிந்து எல்லாவித இயக்கங்களுக்கும் பிரயோகித்து, மறுபடி பொதுத்தன்மைகளைக் கண்டறியுமாறு வேண்டுகிறோம்.

சுருங்கச் சொன்னால் இயங்கியல் வழிமுறை அசைபடமாக, அதன் திசையில் அசைபடத்தின் அசைபடமாக (புதிய தளம்) தொடர்ந்து அடுக்கேற்றம் அடைவது.

இயங்கியல் பொருள்முதல்வாதமும் அடுக்கேறி வந்தது. ஆனால் பருப்பொருள் அடிப்படை (முரணிலிருந்து மட்டுமே இயக்கம்) என்கிற அரைமட்டப் புரிதலால் மேல்நோக்கிய சுழலேணியிக்கம் மட்டுப்பட்டு நின்றது. அடிப்படைவாதமாகியது. 

ஏனைய சிந்தனைகள் புகைப்படங்களை வரிசையில் மெல்ல மெல்ல அடுக்கிக் கொண்டிருக்கிறவை.

இப்போது  எமது இயங்கியல் அறிவைக் கொண்டு நோக்கு அண்டம் உள்ளவரை அழியாதிருக்கும் வகை வந்து விட்டது.

இது நோக்கு/உயிர்/சிந்தனை வரலாற்றிலான அதியுயர் பாய்ச்சலாகும்.

இது நோக்கு வரலாற்றிலேயே அதிமுக்கிய நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சி அண்டம் உள்ளவரை நினைவுகூரப்படுவதன் சாத்தியம் மிக மிக அதிகம்.

இந்தத் தத்துவத்தை வந்தடைந்த நாம், நாம் அனைவரும், மனித நோக்கு மட்டம், உயிர்கள், பூமி, பால்வெளி, இந்தப் பிரபஞ்சம் (பல்பிரபஞ்சங்கள் இருக்கின்றனவா என்பதை இயங்கியல் கொண்டு உறுதிப்படுத்த/மறுக்க வழி இருக்கிறது, வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்)  எல்லாமும் மொத்த அண்டத்துக்கெதிரான தொழிநுட்ப வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது.

இதை 'சுவாரசியமாக இருக்கிறது', 'ஏற்கனவே தெரிந்த விடயந்தானே', 'இது புதுசல்ல', 'சரி ஏதோ சொல்லுகிறீர்கள், பார்ப்போம்'  என்பதாக புரிதலின்றி, மிகுந்த அசட்டையுடன், 

அல்லது 'குட்டிமுதலாளிய மனநிலை, இளம்பிராயக் கோளாறு (இது மிக மோசமான வயதுவாத பதம்) , உளறல், விஞ்ஞான விரோதம்..' என்றெல்லாம் தனிநபர் தாக்குதலாக, விஞ்ஞான விளக்கமற்ற நிலையில் தாக்குவது,

அல்லது கவனித்தும், கவனியாது இருப்பது,

இந்தப் புதிய இயங்கியலின் அனைத்துத் தத்துவக் கேள்விகளையும்,  அனைத்து விஞ்ஞான முறைக் குறைபாடுகளையும் தீர்க்கிற ஆற்றலைப் புரிந்து கொள்ளாதிருக்கிற, பின்னடைந்த மனநிலையாகும்.

நாம் வியாபரம் செய்யவோ, எங்களுடைய 'படைப்புக்களை' விற்கவோ எழுதவில்லை.

இது ஒவ்வொருவருக்குமான முடிவிலி சிந்தனை வெளியையும், முடிவிலி புற வளங்களையும் திறக்கிற சிந்தனை முறை. 

சொர்க்கம், கொம்யூனிசம் என்று ஒவ்வொரு தத்துவமும் 'ஆசைப்பட்ட' அதிநிலையை, விஞ்ஞானபூர்வமாக, உண்மையாகவே அதிவிரைந்து அடைகிற வழியாகும்.

முழு முயற்சி எடுத்து, நன்கு நேரமெடுத்துப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

எவருக்கெல்லாம் புரியுமென்பது அவரவரைப் பொறுத்ததே. மேலோட்டமாக வழிகாட்ட மட்டுமே முடியும்.

இயங்கியல் உள்ளார்ந்தமாக அடிப்படைவாதத்தை முழுவதும் உடைத்துவிட்ட ஒன்று.

எவருக்கு விளங்குகிறதோ அவரது நடைமுறை வாழ்க்கையில் மட்டுமே பயன்படும். அவர் அதைத் தொடர்ந்து புறவயப்படுத்திவர, அது எவருக்கெல்லாம் விளங்குகிறதோ அவருக்கெல்லாம் மட்டும் பயன்படும். அதாவது இயங்கியலை 'முழுவதும்' விளங்கிய பின்னரே ஒரு நோக்கால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஏனைய தத்துவங்கள் போல மனப்பாட வழியில் முடியாது.

மனப்பாட முறையை இறுகப்பிடித்துக் கொண்டு இன்னுமின்னும் விளங்கப்படுத்துங்கள் என்றால் அது ஒருபோதும் முடியாது. 

இதனால்தான் 'கணிதச் சமன்பாடு' (சமன்பாடுகள்) மிகத் தொலைவில் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நாம் முடிந்த வரையில் முயல்கிறோம்.

ஆனால் இது வரை 'அறியப்பட்ட' எல்லாவற்றுக்குமான (எல்லாத் தகவல்களுக்குமான) பொதுக் கோட்பாட்டை ஆக்கிக் கொண்டு எதிர்வுகூறல்கள் செய்ய முடியும். 

Dark Energy, Dark Matter, Matter, Motion, Gravity, Four Fundamental Forces, Life, Consciousness, Intelligence, Super-Intelligence, Aesthetics, Emotions, Quantum Mechanics இவை அனைத்தையும் ஒருங்கே மிகுந்த உள்ளிணக்கத்தோடு விளக்குவதாக இருக்கும்.
அதை மிக நெருங்கி வருகிறோம். 

இந்த இயங்கியல் அனைவருக்குமான, அனைத்துக்குமான முன்னேற்றத்தை விஞ்ஞான வழியில் காட்டிவிட்டது.

உதாரணத்துக்கு  ஒழுங்கு அதியுச்சமடைகையில் அகவயம் அதைக் காட்டிலும் உச்சநிலைக்குப் போகவிருக்கிறது.

எந்தத் தத்துவத்தின் வெளியும் குறைக்கப்படப் போவதில்லை. அவை புதிய இயங்கியல் தளத்துக்குத் தூக்கப்பட்டு அவையாக நடைமுறைத்தளத்திலிருந்து (நோக்குகளின் இயக்கத் தளம்) பின் தங்கிப் போகிற வரையில், தாமாக உதிர்கிற வரையில் இயக்கத்திசையில் பயணிக்கும். 

வேறு எவருக்குமாவது இயங்கியல் தளம் புரிந்தால் அவர்களுடன் சேர்ந்து நாம் வேலை செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களுடன் அவர்கள் சேர வேண்டியதில்லை. நாங்கள் சேருகிறோம்.

இந்த ஒழுங்கு மாறுபாடற்றது. ஏனெனில் இயங்கியல் விளங்கிய ஒருவரால் 'ஏமாற்ற' முடியாது. அவருக்கு 'ஈகோ' கிடையாது. தான் தொடர்ந்து திருத்தமடைந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டே அவர் இருப்பார். 

அதனால்தான் இயங்கியலாளர்களுக்கு இடையில் உரையாடல் மட்டுமே நிகழ முடியும் என்கிறேன்.

ஒருவர் இயங்கியலைப் புரிந்து கொள்ளுகிற பொழுது அது அவருக்கானதாகிறது.

எல்லோரும் புரிந்து கொள்ளுகிற பொழுது அது எல்லோருக்குமானதாகிறது. 

இயங்கியலாளரைக் கருத்துவெளியில் வெல்வது, திசைதிருப்புவது, அவர்களது திசையைச் சரிப்படுத்துவது என்பது சாத்தியமற்ற நிகழ்வு. 

எவ்விதம் இயக்கமற்ற நிலை சாத்தியமற்றது என்கிற அடிப்படையில் ஆரம்பிக்கிறோமோ அவ்விதமே இதுவும் சாத்தியமற்ற நிகழ்வு. 

இயங்கியலாளர்கள் SUPER-INTELLIGENCE க்கான நகர்வைத் தொடங்கி விட்டவர்கள். அத் திசையில் தொடர்ந்து நகர்கிறவர்கள்.

இதை நாம் புரிந்து கொண்டது மனித நோக்கினால் புரிந்து கொள்ளப்படத்தக்கதாக இயங்கியல் இருக்கிறது என்பதை நிறுவி விட்டது. வரலாற்றின் முதன் முதல் நிறுவல்கள் நடந்தேற ஆரம்பித்து விட்டன. 

உங்களுக்கு இயங்கியல் தளம் பிடிபடின், உங்களுடைய ஏற்பு, மறுப்பை முடிந்தளவுக்குப் பதிவு செய்வது  அண்டத்துக்கு எதிராக இயங்குகிற அனைத்து நோக்குகளின் (எல்லாவித உயிர்கள்) உச்சக் கூட்டு நன்மைக்கு அதி முக்கியமானது. 

அல்லது இந்தத் தளத்தைப் புரிந்து கொள்வதற்காக  நேரமெடுத்துக் கொள்கிற செயலை வெளிப்படைத்தன்மையுடன் பதிவு செய்வது இயங்கியலைப் புரிந்து கொள்வதற்கான குறைந்த பட்ச சிந்தனைத் தெளிவை உங்களிடத்தில் ஏற்படுத்தும். 



நிலா & கணா
05/03/2018

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home