Tuesday, November 27, 2018

புதிய இயங்கியலை உடைப்பதற்கான வழிவகைகள்

எமது இயங்கியல் தொடர்பான எமது நிலைப்பாடு

இந்தப் புதிய இயங்கியலை உடைக்க வேண்டும் என்றே  நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.  நாமும் அதற்கு முழு முயற்சி செய்து வருகிறோம்.

எங்களுடைய 'கற்பனையை' 'திணிப்பதாக' புரிந்து கொள்வது சரியல்ல.

இயங்கியல் புறவயப்படுத்தப்படுகிற அளவுக்கே,அதைப் புறவயப்படுத்துகிறவருக்கு மட்டுமே பயன்படும்.

இதை ஆரம்பத்திலிருந்தே அழுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். புறவயப்படுத்தாமல், விஞ்ஞானம் வழி உறுதிப்படுத்தாமல், சமூக வெளியில் 'ஒரு குத்துமதிப்பாகப்' பிரயோகித்துப் பார்த்து பின் முடிவெடுக்க இது போலி விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் அல்ல.

நாம் இயங்கியல் என்று எதையாது 'அடித்து விட' எல்லோரும் 'குருட்டுத்தனமாக' அதன் பின்னால் ஓடி வருவார்கள் என்கிற வழமையான 'அடிப்படைவாதத் தத்துவங்களின் அனுபவம்" உருவாக்கி வைத்திருக்கிற "அறச் சீற்றம்" வேண்டியதில்லை. .

இயங்கியல் ஒரு பொதுவுடமைத் தத்துவம். ஒருவர் இயங்கியலைப் புரிந்து கொள்ளுகிற பொழுது அது அவருடையதும் ஆகிறது.

அதைப் போல ஒரு சிலர் இயங்கியலைப் புரிந்து கொள்ளுகிற பொழுது அவர்களுக்கிடையிலான உரையாடல் வழமையான உள்ளரசியல்களை கடந்து மிக வினைத்திறனாக இருக்கிறது.

இயங்கியலைக் கொண்டு இயங்கியலை வரைவு செய்ய முடிந்ததால், நிரந்தர இயக்கமுடைய, Perpetual தத்துவத்துக்கு வந்தடைந்தோம் (அப்படி ஒன்று இருந்தால்) என்றே நாம் சொல்லுகிறோம்.

இதெல்லாம் சாத்தியக்கூறுகளே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

"எல்லாவற்றுக்குமான பொதுப்பண்பு இருந்தால் அது..." என்றுதான் நாம் ஆரம்பிக்கிறோம்.

எல்லாப் பெருந்தத்துவங்களும், விஞ்ஞானமும் இந்தத் தவிர்க்க முடியாத நடைமுறைக் கேள்விக்கு வந்து சேருகின்றன.  'பொதுப்பண்பு' தேடுகின்றன. அது இருக்கிறதா இல்லையா என்பதையும் தேடிப் பார்த்தே முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.

"நடைமுறை, நிசம் என்று ஏதாவது இருந்தால் அது..." என்றுதான் நாமும் பூச்சியவிதியில் அடிக்கோளாக்குகிறோம்.

எல்லாம் மாயையாக இருந்தால்? அது நம் எவருக்கும் "பயன்" அளிக்கப்போவதில்லை.

நான் கடந்த மூன்று ஆண்டுகளாக, நிலாவுடைய 'உள்ளார்ந்த' இயங்கியல் கருத்துக்களைக் கோர்த்து, இணைத்து உள்ளிணக்கமான இயங்கியல் கோட்பாடாக ஒரு விசயத்துக்கு இப்போது வந்தடைந்திருக்கிறேன். இதுவே முடிவு என்று சொல்ல நான் என்ன அடிப்படைவாதியா?

ஒரு தத்துவம் வளர்த்தெடுக்கப்படுகிற பொழுது பல உள்ளார்ந்த எடுகோள்கள் உண்டு. 

எல்லாவித எடுகோள்களும் ஒரே எடுகோளிலிருந்து வருவாதாக, அதாவது மிகக் குறைந்த எடுகோள்கள் இருப்பதாகஅதை நாம் பார்த்துப் பார்த்துச் சரி செய்கிறோம்.

அது நமது பேருழைப்பு.

அப்படியும் ஓட்டை விழுந்துவிட்டால் அதைத் திருத்திக் கொண்டு புதிய அடிப்படைகளிலிருந்து பொதுப்பண்புகள் எதிர்பார்ப்புக்களில் இருந்து ஆரம்பிக்கிறோம்.

அந்தப் புதியதும் 'இயக்கமே' பொதுப்பண்பு என்று ஆரம்பித்தால் அதுவும் இயங்கியலே. 

அதைவிடத் திருத்தமான பொதுப்பண்பு கிடைத்து விட்டால் இயங்கியலையும் தாண்டிச் செல்வோம்.

'செல்வோம்' என்பதே இயக்கமாக இருப்பதால் இயங்கியலைத் 'தாண்ட' எமக்கு இன்னுமும் முடியவில்லை. 

எனக்கு இன்னுமும் முடியவில்லை.  உங்களைப் பற்றி நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

புதிய 'இயக்கப் பொதுப்பண்பு' தத்துவம் அதிக வெளிகளை உள்ளிணக்கத்தோடு விபரித்தால் அதுவே இப்போது இயங்கியல்.

அந்நிலையில் நிலா-கணரூபன் இயங்கியல் உடைந்து விட்டது. அதற்கு எனி இயங்கியல் என்று பெயர் கிடையாது.

ஆனால் நாங்கள் அந்தப் புதிய, திருத்தமடைந்த இயங்கியலை அதிவிரைவாக விளங்கிக் கொள்ளுகிறவர்களாக இருப்போம். அந்த இயங்கியல் எங்களுக்குமானதாகும்.

அதனால்தான் இயங்கியலைப் புறவயப்படுதலின் திசை தொடர்ந்து அதிகரிக்கும் எனவும், இது வரை இயங்கியல் இந்தளவுக்குப் புறவயத்தோடு வெளிப்படவில்லை என்பதையும் சொல்லுகிறோம்.

அதோடு இதை உடைக்க முயலவேண்டும் என்கிறோம். நாங்களும் மிக முயலுகிறோம்.

இயங்கியல் பொருள்முதல்வாதமும், முரண்களிலிருந்தான இயக்கமும், "வர்க்கப்போராட்டங்களே வரலாறு" என்கிற பார்வையும் பின்னடைந்தன என்கிறோம்.

இயங்கியலாளர்கள் 'சுப்பர்-இன்டெலிஜென்ஸ்' திசையில் தொடர்ந்து இயங்குவார்கள் என்றுதான் சொல்ல முடியுமே தவிர அவர்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

அடுத்தடுத்த சுழல்களில் விட்ட தவறுகளில் இருந்தெல்லாம் திருத்திக் கொண்டே இருப்பார்கள். தொடர்ந்து முடிவுறாத் திருத்தமடைதல் இயக்கத்தை ஏற்று நிகழ்த்துவார்கள். அவ்வளவுதான்.

'விஞ்ஞான விரோத' நிலைப்பாடுகளை நாங்கள் எடுக்கவில்லை.

விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக இயங்கியல் 'நிறுவப்படுவது' விஞ்ஞானத்தின் உதவியுடன் மட்டுந்தான்.

'நீங்கள் விஞ்ஞான விரோதிகள்' என்றெல்லாம் பதட்டமடைய வேண்டாம். 

இருக்கிற விஞ்ஞான அவதானங்களை இயங்கியல் கண்ணோட்டத்தில் முழு உள்ளிணக்கத்தோடு விளக்கி, விஞ்ஞானம் இன்னுமும் கருதுகோள் நிலையில் வைத்திருக்கிற கரும்சக்தி, கரும்பொருள், குவாண்ட இயக்கம் இவற்றின் இயக்கத்தையும் எதிர்வுகூறி, இன்னுமும் கருதுகோள்நிலைக்கும் வந்திருக்காதவற்றையும் முடிந்தால் எதிர்வுகூறி/கருதுகோள் வைத்து பரிசோதிக்க அனுமதித்தே இயங்கியல் விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் ஆக முடியும்.

பொய்ப்பிக்கத் தகுந்த முடிவுகளை முன்வைத்து நிறுவப்படாமல் விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக இயங்கியல் ஆகாது. பதட்டம் வேண்டாம்.

அவசரப்பட்டு 'விஞ்ஞான விரோத', 'மனநிலைப் பிறழ்வு', 'இளம்பிராயக் கோளாறு (ageism)', 'தனிமைச் சிக்கல்', 'உளறல், பிதட்டல்/பிதற்றல்' என்றெல்லாம் பயன்படுத்துவது சரியல்ல.

முடிந்தளவுக்கு "கண்ணியமாகவே" இவற்றை மறுக்கிறோம்.

எங்களுக்கு எவரும் எந்தப் பண உதவியும் செய்வதில்லை. செலவீனம் மிகுந்த நாட்டில் பல மணிநேரம் கூலி அடிமையாய் உழைத்து கொஞ்சமாய் மிச்சம் பிடிக்கிற தனிப்பட்ட நேரத்தில் ஒரு பகுதியைத்தான் இந்த ஆய்வுக்கும் பயன்படுத்துகிறோம்.

இந்த ஆய்வு முடிவிலி அக வளத்தையும் (சிந்தனை வெளி), முடிவிலி புறவளங்களையும் திறப்பதற்கானது. அதனால் மிக முக்கியமானது.

இதை இயங்கியல் பொருள்முதல்வாதிகள் செய்து கொண்டிருக்க வேண்டும். சோவியத் காலத்தில் 'இயங்கியல்' விஞ்ஞானிகள் மிகத் துரிதமாக அண்டவெளிப் பயணக்கட்டங்களுக்கு வந்து சேர்ந்ததாக கேள்வி. அந்த இயங்கியல் விஞ்ஞானம் இப்போது எங்கே?

சமூகத்தளத்திலான வேலைத்திட்டங்கள் அதி முக்கியம். வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்த இந்த வேலைத்திட்டங்களினால் கிடைத்த வெளியில்தான் நாம் செய்கிற ஆய்வு வளர்கிறது.

எம்முடைய ஆய்வு சமூகத்தை நாசமாக்கும் என்றால் அது நாம் அமர்ந்திருக்கிற இருக்கிற கிளையை அடியில் வெட்டுவதாகும்.  

ஆனால் இந்த ஆய்வு கிளையிலிருந்து, ஒரு சின்ன மர கூறிலிருந்து பல பெருமரங்களை உருவாக்குவதற்கான முயற்சி. இதுவும் முக்கியந்தான்.

நாம் பொதுவுடமைவாதிகள்.

இயங்கியலே முதல் பொதுவுடமைத் தத்துவம்.

மார்க்சியர்களின் பார்வையான வர்க்கப் போராட்டமே வரலாறு என்பது சரியல்ல.

தனிமனிதர் ---> மனித வெளி அமைப்பு ---> தனிமனித மாற்றம்

இந்த இயங்கியல் ஓட்டத்தில் மனித வெளி அமைப்புக்கள் தனிநபர்களை விட 'திறன்' மிகுந்து வரும்.

ஆனால் மனிதர்களிடமிருக்கிற அடிப்படைவாத சிறு கூறு, அதிகார விழைவு அமைப்புக்களில் உருப்பெருத்து வெளிப்படும்.

தங்களுடைய குறைகளை அமைப்பு படிகூட்டி, உருபெருக்கி வெளிப்படுத்துகிற பொழுது மனிதர்கள் (அதனால் பாதிக்கப்பட்டு) அந்தக் குறைகளுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் தமது செயல், சிந்தனைத் தளங்களில் அந்தக் குறைகளை மெல்ல மெல்லக் குறைத்து அடுத்த கட்ட அமைப்புக்களுக்குப் போகிறார்கள்.

அடுத்த கட்ட அமைப்பு அதனால் 'வளர்ச்சியடைந்ததாக' இருக்கிறது. அங்கும் குறைபாடுகள் மெல்ல மெல்ல உருப்பெருக்கின்றன. மறுபடி மனிதர்கள் அந்த அமைப்பை எதிர்த்து அளிக்கிறார்கள்.

செயலறிவைக் கோட்பாடு தொடரோட்டத்தில் எப்போதும் வெல்லும்.

விஞ்ஞானத்தைத் தத்துவம் தொடரோட்டத்தில் எப்போதும் வெல்லும்.

மனிதர்களை அமைப்பு தொடரோட்டத்தில் எப்போதும் வெல்லும்.

எனின் மார்க்ஸ் கண்ட கனவு, அரசின்மைவாதிகள் காணுகிற கனவு பலிக்காதா? அது இலட்சிய நிலையா? விஞ்ஞான வழி கிடையாதா?

பலிக்கும். விஞ்ஞான வழி வந்துவிட்டது.

மனிதர்களை முந்தியோடுகிற அமைப்பு முழு அதிகாரந் துறந்து, அடிப்படைவாதம் களைந்து வந்தடைந்த முடிவு நிலையே இயங்கியல்.

அரசு உதிர்ந்து, பொருளியல் முதலிய துறைகள் உதிர்ந்து இயங்கியல் சிந்தனையே பொதுஅமைப்பாய், மனிதர்கள் ஒவ்வொருவரையும் விட முன்னேறியதாய், ஆனாலும் அடிமைப்படுத்தாததாய் இருக்கிற ஒரே அமைப்பு.

இயங்கியலே முதலும் கடைசியுமான பொதுவுடமைத் தத்துவம். பொதுவுடமை அமைப்பு.

அமைப்புக் குறைபாடு பெரியது. அதை அதிகமதிகம் விமர்சிக்க வேண்டும் - இதை நானும் சரி, நிலாவும் சரி தொடர்ந்து எழுதி வருகிறோம். நான் இதை நிலாவிடமிருந்துந்தான் முதலில் அறிந்தேன்.

அமைப்பின் குறைபாடு தனிமனிதர்களின் சிறுசிறு குறைபாடுகளால் உருப்பெருக்கம் அடைகிறது. தனிமனிதர்களுக்கும் மேற்படி விமர்சனம் மெல்லக் கசியும். மிகக் குறைவாய் இருக்கும். ஆனால் தனிமனிதர்கள் மீதும் விமர்சனம் உண்டு.

மக்கள் 'எல்லோரும்' நல்லவர்கள். 'சில அரசியல்வாதிகள்' தான் எல்லாப் பிழைக்கும் காரணம். அமைப்பு மட்டுமே பிழை. நாம் கூடி அதைத் தகர்த்தால் எல்லாம் விடியும் - என்றெல்லாம் மட்டாகப் புரிந்து கொள்வது இயங்கியல் விரோதம்.

எந்த விசயத்தை அமைப்பின் குறைபாடாக இனங்காண்கிறோமோ, அதை நம் சிந்தனை வெளியில் களைகிற வேலை தொடங்கப்பட வேண்டும்.

இந்தக் களையெடுப்பு அமைப்பை எதிர்த்து சிந்திப்பது, செயற்படுவதன் மூலம் நடந்தேறுகிறது.

அந்த வகையில் வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வழி முன்னேறுகிறது என்பது அரைவாசி (அதற்கும் சற்றுக் குறைவான நிலையில்) சரிதான்.

ஆனால் அதனுடைய அடிப்படை விசை வளர்ச்சிநோக்கு.

இயக்கத்தின் உள்ளார்ந்த பண்பான சுயமுன்னேற்றமே மனிதரை இயக்குகிறது. அதுவே தேவையை உருவாக்கிறது. தேவைப் பூர்த்திக்கான கருவியே முரண்பாடு. இந்த முரண்பாடு அக தொழிநுட்பம் சார்ந்தது. அதாவது மேம்பட்ட அக தொழிநுட்பம் இந்த முரண்பாட்டை மிக ஆக்க பூர்வமாகத் தீர்த்துக் கொள்ளும்.

இயங்கியலில்  புதிய  இலட்சிய நிலை என்பது 'முழு இயங்கியலாவது'. அது இயங்கியலின் படி நடைபெறாத ஒன்று. தொடர்ந்து அதை நோக்கி நகர முடியுமே தவிர அடைய முடியாது.

இந்த நகர்வுத் திசையில் தேவைப்பூர்த்தியில் வளர்ச்சி/அழிவு விகிதத்தில் வளர்ச்சி அதிகரித்து வரும்.

மார்க்சியர்கள் 'சுழலேணி, சுருளிவில்' என்று சொல்லுகிறார்களே ஒழிய அவர்களுடைய தத்துவமான "முரணில் இருந்தே முன்னேற்றம்" அதை விளக்கவில்லை என்றே நான் புதிய 'அதி திருத்த' இயங்கியலை வெளியிடுகையில் எழுதியிருந்தேன். சுருளிவில் இயக்கத்தை உண்மையில் விளக்குவது புதிய இயங்கியலே என்றும் காட்டியிருந்தேன்.

ஆனால் நான் ஒன்றைத் தவற விட்டேன். மார்க்சியர்களின் "முரண்பாடுகளில் இருந்தே வளர்ச்சி" இதன் அடிப்படை சுருளிவில் இல்லையெனின் அதன் இயக்கம் என்ன? இதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. 

இது என்னுடைய விளக்கக் குறைவுதான். மார்க்சியப் பார்வைக்கான வரிப்படத்தை வரைந்து ஒப்பிட்டு நான் எழுதியிருந்தால் எத்தனையோ குழப்பங்களை நான் சுலபமாகத் தீர்த்திருக்கலாம். என்னுடைய சிந்தனைக் குறைவு அந்த வாய்ப்பைத் தவறவிட்டது.

தவறிழைப்பது, தவறவிடுவது ஒன்றும் தவறில்லை. வாய்ப்புக் கிடைத்தும் திருந்தாமல் இருப்பதே தவறு.

நேற்றைய தினம் நிலா இயங்கியல் பொருள்முதல்வாதப் பார்வையிலான வளர்ச்சிக்கான வரிப்படத்தை வரைந்து நான் இது வரையில் என்னுடைய சிந்தனை தவற விட்டதைத் திருத்தினார். 

நிலா என்னுடைய சிந்தனையைத் திருத்தினார். இவ்விதமே ஒவ்வொருவரும் என்னுடைய சிந்தனையைத் திருத்திக் கொண்டே இருக்கிறீர்கள்.

இயங்கியல் பொருள்முதல்வாதம் எதிர் இயங்கியல் வரிப்பட ஒப்புநோக்கை நிலாவே வெளியிடுவதுதான் பொருத்தம். 

நான் அடிப்படைவாதி அல்லன் என்பதால் ஆரும் என்னைத் திசைப்படுத்துவதில்லை. ஆனால் தகவல்களைக் கொண்டு  எல்லோரும் என்னைத் தொடர்ந்து திருத்தியமைக்கிறீர்கள்.

தவறிழைப்பதன் சுதந்திரம், மீள முயற்சிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் திசையே முழு விடுதலைக்குமான திசையுமாகும்.

நாம் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை, முரண்களே முன்னேற்றத்தின் அடிப்படை என்பதை மீறி இன்னுமும் வளர்ந்து விட்டோம். இதற்கான சாத்தியக் கூறு மிக அதிகரித்திருக்கிறது.

நாம் பேசுவதெல்லாம் சாத்தியக் கூறுகளை. அந்தச் சாத்தியக் கூறுகளைப் புரிந்து கொண்டு (அவையும் பொதுப்பண்பு, அதன் கடத்திலில் தங்கியிருக்கும் அல்லவா) அதை அதிகரிக்க முயல்கிறோம். அவ்வளவே.

அதனால் மறுபடி நாம் அழுத்துகிறோம். நாம் விஞ்ஞானவிரோத, மானுடவிரோத, இயங்கியல்விரோத ஆய்வை நிகழ்த்தவில்லை.

இது முதற் பொதுவுடமை தத்துவம். இதுவே பொதுவுடமை அமைப்புமாகும்.

இதிலிருந்து அனைத்துக்குமான பொதுக் கோட்பாடு ஆக்கிற வாய்ப்புத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கால-இடம் தொடர்பான குழப்பத்தை இயங்கியல் போக்குகிறது. பரிமாணம் என்றால் என்னவென்று வரைவு செய்கிறது. எத்தனை பரிமாணங்கள் என்று அறிய தகவலும், கணிதமும் வேண்டும்.

இயங்கியல் என்பது எல்லாவித விஞ்ஞானங்களையும் (கணிதம் அடங்கலான எல்லா அறிவுத் துறையும்) மிகத் திருத்தமாக இணைத்துக் கொண்டு விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக வளரவிருக்கிற தத்துவம்.

அப்படி இணைக்கத்தவறின் உடையும். எல்லாவற்றையும் உள்ளிணக்கமாக விளக்கத் தவறின் உடையும். அடிக்கோள் எதுவும் உடைந்தாலும் உடையும்.

எப்படி உடைந்தாலும் இயக்கமே பொதுப்பண்பு என்ற 'கருதுகோள்' இருக்கிற வரையில் இயங்கியல் உடையாமால் புதிய வழிமுறைகளுடன் மீண்டு வரும்.

மீண்டு வருவதே 'இயங்கியல்' ஆகும். புதிய இயங்கியல், புத்தம் புதிய இயங்கியல், மார்க்சின் இயங்கியல், நிலாவின் இயங்கியல் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பழையவை இயங்கியல் விரோத தத்துவங்கள் அவ்வளவுதான்.

மிக எளிமையாகச் சொன்னால் பொதுவுடமை, அரசின்மை முடிவு நிலை என்றொன்று 'இருந்தால்' அதற்கான தத்துவமும், அதற்கான அமைப்பும் இதுவே.

சரி, இந்த ஆய்வின் முக்கியத்துவத்தை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்தியாயிற்று.

எனி, எவ்விதம் இதை 'உடைத்து' (இயங்கியலில் உடைக்கிற போக்கு வளர்ச்சியாகவும், வளர்க்கிற போக்கு உடைப்பதாகவுமே இருக்கும்) இன்னுமும் திருத்தமான இயங்கியலுக்குப் போகிற வழிவகைகளைப் பார்ப்போம்.
 cont...

-Nila


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home