Wednesday, February 28, 2018

புதிய (அதி திருத்தமான) இயங்கியல்

இப்பதிவு  28/02/2018 இல் பிரசுரிக்கப்பட்டது. 


பிற்சேர்க்கைகள் - 12/03/2018

- இப்பதிவுக்கு முன்னைய பதிவுகளில் இயங்கியல் பொருள்முதல்வாதப் பார்வையா எனக்கும் இருந்தது. ஆகையால் முன்னைய பதிவுகலிலான 'முரணே இயக்கத்தின் அடிப்படை' என்கிற அதி திருத்தமற்ற கருத்தைப் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறேன். வருந்துகிறேன். திருந்தி விட்டேன். பழைய பதிவுகளைத் திருத்திக் கொண்டிருக்க நேரமில்லை. 

- பொறுமையாக இப் புதிய இயங்கியலின் வழி ஆராய்கையில் பழைய ஹெகலிய, மார்க்சிய கருத்துமுதல், பொருள்முதல் அடிப்படைகளில் அமைந்த தவறான இயங்கியல் தத்துவங்கள் மீறப்பட்டுவிட்டது உறுதியாகிறது.

- இது மார்க்சியத்தை 'மாற்றியமைப்பது', 'திருத்தத்துவது' அல்ல. அப்படிப் புரிந்து  கொள்வது மார்க்சியமும் விளங்கியிருக்காததால் வருகிற விளக்கக்கேடே . இது தத்துவ வரலாற்றின் அதியுயர் பாய்ச்சலாகும். இருக்கிறஎல்லாவித துறைகள், முறைகள், முடிவுகள். அடிக்கோள்கள் எல்லாவற்றையும் பின்தள்ளி இப் புதிய இயங்கியல் வளர்ந்து விட்டது. எதையும் சுருக்கவில்லை. தான் முடிவில்லாமல் வளர்ந்து ஏனையவற்றை (எல்லாவற்றையும்) முந்தி விட்டது என்பதே உண்மை.

- இப்பதிவில்" காலம் இடத்தை முந்தியது எனக் கருதுகிறேன், அதை உறுதிப்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தேன். புதிய இயங்கியல் அதை உறுதி படுத்தி விட்டது.

- இந்தப் பதிவில் வேறுபல விசயங்களையும் திருத்தியிருக்கிறோம் (அடிப்படைகள் மாறவில்லை, இன்னுமின்னும் நுணுக்கமாக, மிக மிகத் திருத்தமாக வளர்த்திருக்கிறோம்). இந்தத் திருத்தும் செயற்பாடு முடிவற்றது. இயங்கியல் தளத்தில் ஏறுகிற அனைவருக்கும் முடிவற்ற ஆய்வு வெளி, பிரயோக வெளி இருக்கிறது. இது சமூக மட்டத்துக்கு வந்தடைகியல் முடிவற்ற வளம், வாழ்வு வர இருக்கிறது. இப்பதிவுகள் இயங்கியல் தளத்துக்கு ஏறுவதற்கானது. இதிலும் குறைபாடுகள் உண்டு. ஆனால் அடிப்படைகள் மிகச் சரியானவை.

- இதெல்லாம் 'கற்பனை', விஞ்ஞான விரோத மனநிலை என்றெல்லாம்  பதட்டமடைய வேண்டியதில்லை. கணினி, கணித வெளிகளில் புறவயப்பட்டு, விஞ்ஞான நிறுவல்கள், வாய்ப்பு பார்த்தலின் ஊடு மட்டுமே இது பிரயோக வெளிக்கு வரும். அப்படியில்லாமல் ஏமாற்றிக் கொண்டு வர இது ஒன்றும் மார்க்சியம் போன்ற போலி விஞ்ஞானங்களின் விஞ்ஞானமல்ல. மார்க்சியம் போல அடிப்படைவாத, அவசரக் குடுக்கைத்தன அரைவேக்காட்டுத் தத்துவம் அல்ல.

- 'முழுமை ஞானமான' மார்க்சியம் ஏன் கணிதவெளிகளுக்குள் இல்லை? ஏன் மார்க்சால் (அவர் ஆன மட்டும் முயன்றார்) கணித வெளியை உருவாக்க முடியவில்லை? ஏனெனில் அது ஒரு போலி விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாகும். அவரது கணித முயற்சிகளைப் பார்வையிட்டேன். அவற்றின் அடிப்படையே (frame of reference, axioms) தவறு.

- இந்தப் புறவயப்படுகிற செயற்பாட்டை மனித நோக்குத்தான் செய்து முடிக்கும் என்று பொய் சொல்ல முடியாது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு விஞ்ஞான முடிவு என்று மார்க்சியம் எந்தக் குற்றவுணர்ச்சியுமின்றிப் பொய் சொல்லி வந்தது போல இந்த இயங்கியல் பொய்களுக்கு மேல் தன்னுடைய வழிமுறைகளையும் முடிவுகளையும் கட்டமைக்காது. நாம் புறவயப்படுத்த முடிந்த வரை முயலுகிறோம்.

- எங்களுடைய பல முன்னுரிமைகளைத் தாண்டி இந்த ஆய்வுக்கு  வாரத்துக்கு மூன்று மணி நேரம் வரையில் மட்டுமே ஒதுக்க முடியும். நாங்கள்தான் செய்ய வேண்டுமென்று பதுக்கி வைக்கமால் எவரும் பங்களிக்கவே நாம் இந்த வலைத்தளத்தைப் பிரசுரித்து, முகநூலிலும் அறிவித்தோம். 

- இந்த வலைத்தளத்தில் வேண்டிய அளவுக்கு விளக்கம் இருக்கிறது. இவற்றிலிருந்தும் விளங்காது விடின் அவரவர் தங்கள் தளங்களை முயன்று உயர்த்திக் கொள்ள வேண்டியதுதான். 





மிக ஆழமான கேள்விகள், செயல்கள் மூலம் வழிப்படுத்தி, என்னுடைய பிழைப்புவாத சித்தாந்தங்களை முழுவதுமாக முறியடித்த, எல்லாவித பிற்போக்குக் கூறுகளிடமிருந்தும் என்னை விடுவித்த இயக்கக்காதலான என்னுடைய அதிதுணை நிலாவுக்கு, மிகத் திருத்தமான இயங்கியலுக்கான எனது சிந்தனை முறையை அன்பளிப்புச் செய்கிறேன். 

விரிவான, சற்று இறுக்கங் குறைந்த, தளர்ந்த நிலைப் பதிவு (இணைப்பு). நேரடியான தத்துவப் பரிச்சயம் இல்லாதவர்கள் முதலில் வாசித்து, யோசித்து, சிந்தனை முறையை அமைத்துக் கொண்டு இதை வாசிப்பது உகந்தது.

மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஹெகலைத் திருத்தியதில் குறைபாடு உண்டு. அவர்களுடய இயங்கியல் அறிவும் மிகச் சரியானதல்ல. லெனினினதும் அப்படித்தான்.

ஹெகலின் இயங்கியலிலான சறுக்கல் பின்வருமாறு.

ஹெகல் "ஆதிக்கருத்தையும்" (இது அவருடைய 'கருத்து', pun intended), பல பண்புமாற்றங்களினூடு வருகிற, இயங்கியலைக் கைக்கொள்ளுகிற சிந்தனைக் கருத்தையும் தேவையற்று இணைத்து தான் ஆக்கி வந்த இயங்கியலைத் தானே வீணில்  முறியடித்தார்.

அது ஒரு சிறு சறுக்கல்தான். விளக்குகிறேன்.

ஒழுங்கு என்பது நிகழ்வுப் போக்கில் நடக்கும் விபத்துச் சாத்தியமே என்பதை ஹெகல் தவற விட்டார்.

தான் இயங்கியலினூடு  வந்தடைந்த அத்தனை 'ஒழுங்கும்' எங்கிருந்து வருகிறது என்று மலைத்து, தன்னுடைய சிந்தனைத் திறனைக் கண்டு தானே மலைத்து (சிந்தனையிலிருந்து சிந்தனையில் முடிகிற கருத்துமுதல்வாதச் சுழலை இந்த மலைப்பு உருவாக்கியது), அத்தனை ஒழுங்கும் கருத்தாக இருந்து பின் புறத்தில் பாய்ந்து இன்று மறுபடி என் சிந்தனையின் ஊடாக முழு வட்டத்தை ஆக்கிக் கொண்டது என்று ஹெகல் எழுதுகிறார்.

ஒரு தடவை மார்க்ஸ் ஒரு மார்க்சியவாதியா என்பது தனிப்பட்ட ஆராய்ச்சி என்று எழுதியிருந்தேன்.

ஹெகல் ஒரு இயங்கியலாளரா என்பதும் அப்படியே.

நான் இயங்கியல்வாதி/இயங்கியல்வாதம் என்று எழுதுவதில்லை. இயங்கியலாளர்/இயங்கியல் என்றே குறிப்பேன். இதை வாசித்து முடிக்கையில் ஏன் என்பது இன்னுமும் தெளிவாகப் புரிந்து விடும். 

கோட்பாட்டை வளர்த்தெடுப்பவர்கள் அதை அப்படியே உள்வாங்கி அனைத்திலும் பிரயோகிப்பதில்லை. அது பயிற்சிக் காலத்தினூடே வருகிறது.

ஒரு இயங்கியலாளனான எனக்கு முடிவற்ற ஓட்டம் (அதை முடிவற்ற முனேற்றம் ஆக்குவது) மிக இயல்பான ஒன்று. வட்டத்தை மூட  வேண்டும் என்கிற உந்தல் எனக்கு இல்லை. ஏனெனில் நான் மிகத் தேர்ந்த ஒரு இயங்கியலாளன்.

நான் மட்டுந்தான் என்றில்லை, எவரும் மிகத் தேர்ந்த இயங்கியலாளர்களாக வரமுடியும். வேண்டும். அந்த இயக்கத்தைத் துரிதப்படுத்தவே எழுதுகிறேன்.

வட்டத்தை மூடுகிற இயங்கியல் விரோத உந்தல் ஹெகலுக்கு வந்துவிட்டிருக்கிறது.

இந்தச் சறுக்கல் தேவையற்ற பொருள்முதல்வாதத்தை இயங்கியலுடன் இணைக்கிற நிலைக்கு (மார்க்ஸ், ஏங்கல்ஸ், டைஜஸ்டன் போன்றவர்களின்)  தவறான முடிவுக்கு இட்டு வந்தது.

அவர்களும் மூடுவதில் குறியாக இருந்தார்கள். பருப்பொருளை அடிப்படையாக்கி தவறான மூடுதலைச் செய்தார்கள். மூடுவதே முழுமை என்கிற இயங்கியல் விரோத மனநிலையிலிருந்து மீளாதவர்களாய் இருந்தார்கள்.

ஹெகலை ஏற்றால் 'விதிவசவாதம்' ஆகிவிடும் மனிதச் செயலுக்கு அர்த்தமற்றுப் போகும் என்று சொல்லுகிற லெனின் 'நிகழ்வுப் போக்குகளினூடு வரைவுபடுவதல்ல சோசலிசம்' என்று சொல்லுவது என்ன? அது தவறான நியதிவாதம்.

இயக்கமும் பொருளும் பிரிந்திருப்பதில்லை என்றுதான் லெனினும் எழுதுகிறார்.

இது லெனினின் இயங்கியல் புரிதலின் குறைபாடே. உண்மையில்  இது மார்க்சியர்களின் பொதுவான குறைபாடு. 

எவ்விதம் ஆதிப் பொதுவுடமையும்  எனி வரமுடிகிற பொதுவுடமையும் ஒன்றல்லவோ, மிக வேறுபட்டதோ, மிக மாறுபட்டதோ, பல பண்புமாற்றங்களைக் கடந்து வருவதோ (முன்னையது வரட்சி ---> தொழிநுட்பம் ---->  பின்னையது வளம்) அதைப் போல "ஆதிக்கருத்தும்" முடிவுக் கருத்தும் மிக மாறுபட்டன.

அது ஹெகல் நினைத்து போலக் "கருத்து" அல்ல.

மார்க்சியர்கள் "முடிவுகட்டியது" போலப் பருப்பொருளும் அல்ல.

அது பருப்பொருளற்ற, கருத்தற்ற இயக்கம்.

இன்னுமும் திருத்தமாகச் சொன்னால் அது முரணற்ற இயக்கம்.

ஆதி இயக்கம் முரணற்ற இயக்கம். நோக்கற்றது. பருப்பொருளற்றது.

முரண்பாடுகளை அடிப்படையாக்கி காரணத்தால் இயங்கியலும் முரண்பாடுகளற்ற கருத்துவெளியை நோக்கி நகர்கிறது

அது நோக்குள்ளது.  தொடர்ந்த இயக்கத்தில் முரணற்ற 'கருத்து/சிந்தனை' இயக்கத்தை தொடந்து அண்மிக்கிறது (எல்லை).  

ஆரம்ப முரணற்ற இயக்கமும், பின்னைய முரணற்ற இயக்கமும் ஒன்றல்ல. 

முரணின்றி இயக்கம் எவ்விதம் நிகழ முடியும்?

விளக்குகிறேன்.

மார்க்சியத்தை, குறைபாடுள்ள இயங்கியல் பொருள்முதல்வாதத்தை விஞ்ஞானமாக அறிவித்து, அதை விஞ்ஞானமாகப் புரிந்து கொண்டு அது தோற்றதும் அதை விஞ்ஞானத்தின் தோல்வியாக, அறிவின் தோல்வியாகத் தவறி எடுக்கிற (பிரஞ்சு) பின்னவீனவாத சிந்தனையின் அதே தவறை மார்க்சியர்கள் விட்டார்கள். இன்றுவரையில் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

 ஹெகலின் இயங்கியல் தருக்கத் தவறு கருத்துமுதல்வாதத்தைத் தேவையற்றுக் கொண்டு வர, அதன் முரண்பாட்டை உணர்ந்து மேம்பட்ட முரண்பாடாக (முரண்பாட்டைத் தீர்க்கவில்லை) பொருள்முதல்வாதத்தை (பருப்பொருளின் ஆதித்தன்மை) மார்க்சியர்கள் கொண்டு வந்தது மேற்படி தவறுக்கு ஒப்பானது.

பொருள்முதல்வாதமும், பருப்பொருளிலிருந்து இயக்கத்தை அணுகுவதும், பருப்பொருள் (பொருள் என்றே தத்துவ வழக்கில் எனிக் குறிப்பேன்) இயக்கத்துடன் எப்பொழுதும் இருப்பதென்பதும்
"ஆதிக்கருத்து" முடிவை விட முன்னேற்றகரமாக இருக்கிறது.

ஆனால் முரண்பாட்டைத் தீர்க்கவில்லை. இயங்கியலை 'முழு' உள்ளிணக்கத் தத்துவமாகாமல் இது தடுத்துவிட்டது.

எவ்விதம் ஆதிப் பருப்பொருள் தீர்வு முரண்பாட்டைத் தீர்க்காமல் இருக்கிறது என்பதை விளக்குகிறேன்.

1. பொருள்->அகமுரண் (சுயமுரண்)->இயக்கம்  என்பதை அடிப்படையாகக் கொண்டதே மார்க்சிய மூலவர்களின் தத்துவம்.

2. இந்த அடிப்படை முரணானது.
ஏனெனில் 'முரணை' 'உருவாக்குவது', 'முரணை' 'வைப்பது' இன்னொரு இயக்கமே. அதாவது இரண்டு எதிர்ச்சக்திகளை/விசைகளை/கூறுகளை  அருகில் வைப்பது ஒரு இயக்கம்/வேலை/சக்திமாற்றம். மிகச் சுருக்கிச் சொன்னால் முரண் உருவாகுவது, அல்லது உருவாக்கப்படுவது எதில் எதுவாக இருந்தாலும் அது ஒரு இயக்கம்.

3. ஆகையால் பொருள்-->இயக்கம்-->முரண்-->இயக்கம் --- என்று ஏற்படுகிறது. இதுவும் தர்க்கத்தவறோடு இருக்கிறது. பொருளில் இருந்து இயக்கம் உருவாக முரண் வேண்டுமே. பொருள் (நிலை) தன்னை மறுத்து (முரண்பட்டே) இயங்க முடியும். நிலைமறுப்பே இயக்கம்.

4. இயக்கம் ---> பொருள் ---> முரண்--> இயக்கம்
 இதுவும் தருக்கத் தவறு. இயக்கம் எவ்விதம் முரணின்றிப் 'பருப்பொருள்' ஆக முடியும்? இது மேற்சொன்னதின் தலைகீழ் தவறு .

5. இயக்கம் ---> முரண் ----> பொருள்--->
 இது மட்டுமே உள்ளிணக்கமான தொடராக இயங்கியல் தர்க்கத்துக்கு இருக்கிறது. அதியுச்ச உள்ளிணக்கத்தை ஒரு தத்துவம் அடைகிற வழியாகவும் இருக்கிறது.

6. அதாவது முரணற்ற இயக்கம் தன்னைப் படியேற்றிக் கொள்ள (சுய படியேற்ற இயக்கங்களையும் (bootstrapping) அவற்றின்  அடிப்படைகளையும் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்), அதாவது இயக்கம் தன்னை இயக்கும் விழைவில் முரணை உருவாக்குகிறது.

இயக்கம் தன்னை இயக்குவது சுயமுரண் அல்ல. அது உள்ளார்ந்த ஆக்கப் பண்பு. ஆனால் அதை 'நடைமுறைப்படுத்த' அது உருவாக்குகிற பண்பு 'சுயமுரண்'. சுயமுரணும் அடிப்படையான ஆக்கப்பண்பும் முரண்கள். மிக அடிப்படையான முரண்இயக்கம் சுயமுன்னேற்றச் செயற்பாடு.  மிக அடிப்படையான முரண்நிலை சுயமுரண்.

"இயக்கம் தன்னை இயக்குகிற" இயக்கத்தில் விளைபொருளாகிற முரண்-இயக்கம் சுயமுரணை உருவாக்குகிறது.

முரண் என்பது "இயக்கத்தின் இயக்கத்துக்கான" முதல் பண்பு.

7.இயக்கமே அடிப்படை. முரணற்றது. நோக்கற்றது. கருத்தற்றது. இயக்கம்  சுயமுன்னேற்றமடைகிற விபத்தாக முரண் பண்பை உருவாக்குகிறது.

மிக அடிப்படையானவை பொருளும் இயக்கமும் அல்ல.

இயக்கமும் முரணும்.

இவை இரண்டிலும் முதன்மையானது இயக்கம். 

8. முரணற்ற இயக்கம் என்பது மறுப்பதற்கு நிலைகளற்ற இயக்கம். நிலைப்பின் நிலைப்பும் (assertion of assertion) அங்கிருப்பதில்லை. நிலைமறுப்பின் நிலைமறுப்பும் (negation of negation) அங்கில்லை.

9. இந் நிலையில் இடம் எதுவும் இல்லை. ஆனால் காலம் இருக்க முடியும் என்றே கருதுகிறேன். நிச்சயமல்ல, உறுதிப்படுத்த வேண்டும். கால இடம் என்பது பொதுப்பண்புகளில் ஒன்றிணைந்தாலும் வேறான தனிப்பண்புகளையும் கொள்ளும். ஒவ்வொரு இணைந்த, பின்னிப்பிணைந்த இயக்கங்களிலும் முதன்மையை இனங்காண்பது என்பதே இயங்கியலின் அடிப்படை.

இயக்கம் சார்ந்தது காலம். இயக்கத்திலிருந்து காலம் உருவாக முடியும். ஆனால் இடம் பருப்பொருளில் இருந்து உருவாகுவது. இடம் காலத்துக்குப் பொதுப்பண்பு (ஒன்றல்லது பல), தனிப்பண்பும் (ஒன்றல்லது பல) உண்டு.

10. 'காலப்போக்கில்' மறுக்க நிலையற்ற 'மாறாத' இயக்கம் மாறுகிற இயக்கமாக மாறுகிறது. 7. இல் சொன்னது போல முரணைக் கொண்டு தன்னை முன்னேற்றுகிறது. முதல் முரணியக்கம் சுயமுன்னேற்றம், முதல் முரண் சுயமுரண். முதல் விளைவு இயக்கத்தின் இயக்கம்.

11. இந்தச் சுயமுரண் "இயக்கத்தின் இயக்கத்திலும்" தொழிற்படுகிறது. அதாவது "இயக்கம் --> இயக்கம்" இன் இயக்கமாக மாறுகிற பண்புமாற்றத்தில் பொதுப்பண்பாகக் கட்டத்தப்படுகிறது.

12. சுயமுரண் காரணமாக இயக்கத்தின் இயக்கம் தனக்கான எதிர்விளைவுகளையும்  உருவாக்குகிறது. அதுவே பருப்பொருள்.

13. பண்பேற்றம் பெறக்கூடிய பண்பும் பொதுப்பண்பாக இந்தப் பண்புமாற்றங்களினூடு கடத்தப்படுகிறது. அப்படிக் கடத்தாத பண்புமாற்றங்களின் விளைவுகள் இல்லாது  போகின்றன.

14. 
முரணற்ற இயக்கம் ----> உள்ளார்ந்த ஆக்கப் பண்பினூடு இயக்கத்தின் இயக்கத்துக்கான ஆக்க முனைப்பு ---> ஆக்க முனைப்பு உருவாக்குகிற முரண் கருவி ---> சுயமுரண் ----> இயக்கத்தின் இயக்கம் ----> சுயமுரண் ---> பருப்பொருள் ..... 

சாத்தியக் கூறுகளின் சாத்தியத்தை உருவாக்குகிற  இந்தத் தொடரோட்ட அடிப்படைகளில் இயங்குவதே என்னுடைய இயங்கியல்.

இது எவ்விதம் மிக மேம்பட்டு, அதியுயர் உள்ளிணக்கத்தை அடைகிறது என்பதைக் கீழே விளக்குகிறேன்.

இயங்கியலில் எந்த இரண்டு பின்னிப் பிணைந்தவற்றைக் கொடுத்தாலும் எது முதன்மை, எது இரண்டாம் நிலை என்று சொல்லத் தெரிய வேண்டும்.

ஒவ்வொரு சூழமைவிலும் இந்த முதன்மை, இரண்டாம் நிலை மாறி வரும். இடம் மாறும்.

உண்மையில் மீள்கிற முதன்மைக் கூறை மூன்றாவதாகவே கொள்ள வேண்டும். சுருளிவில் இயக்கத்தை விளக்கி எழுதியிருக்கிறேன்.

ஆனால் தொடக்கத்தை அறிய வேண்டும்.

கோழியா, முட்டையா என்பதைக் காரண-காரியத்தினூடு நாம் முட்டையே முதலில் வந்தது என்று கண்டறிந்தோம்.

இது வரைக்குமான மார்க்சிய இயங்கியலில் தவறான அடிப்படைகளாக இருக்கிற - "பொருளா, இயக்கமா" என்பதை தத்துவ இயக்கத்தினூடே கண்டறிய முடியும்.

இந்த இரண்டில் எதிலிருந்து எது என்பது கேள்வி.


லெனினால் பதிலளிக்க முடியவில்லை. பொருளும் இயக்கமும் எப்பொழுதும் ஒன்றாய் இயங்குவன என்கிற மட்டத்தில் விட்டுவிடுகிறார். அது இயங்கியல் விரோதம். 

மார்க்சிய மூலவர்களின் பொதுவான/தவறான/வழிவழியாக வருகிற புரிதல் பொருளில் இருந்து இயக்கம் என்பதே. பொருளின் பண்பே இயக்கம் என்பதே.

இது தவறு. இயக்கத்தின் விளைவே பொருள். பொருள் என்பது பண்பேற்றம் அடையக் கூடிய பண்பு.  இந்தப் பண்பை மேற்சொன்னது போல (13) இயக்கத்திலிருந்து பண்புமாற்றங்களினூடான பொதுப்பண்பாக வாங்கிக் கொண்டது.

இயக்கம் பிரிந்திருக்க முடியும், இயக்கம் பொருளைக் காட்டிலும் முதன்மையானது என்பதே என்னுடைய நிலைப்பாடு.

மிகப் பரந்த பார்வையில் இவ்விதமே இயக்கம் நடக்கிறது.

முரணற்ற இயக்கம் --> முரணுள்ள இயக்கம் --> முரணற்ற இயக்கம் (மேம்பட்ட, வேறான) ---> முரணுள்ள இயக்கம் (மேம்பட்ட, வேறான) --->

நிலைகளற்ற இயக்கம் (போலி நிலைப்பின் நிலைப்பு இயக்கம்)===>நிலைப்பின் நிலைப்பு===> நிலைமறுப்பின் நிலைமறுப்பு===>நிலைப்பின் நிலைப்பு===>நிலைமறுப்பின் நிலைமறுப்பு.....


இந்த இயக்கத்தின் பொதுப்பண்புகள் பின்வருமாறு
1. இயக்கம்
2. இயக்கத்தின் உள்ளார்ந்த அடுக்கேற்றப் பண்பு 
3. அடுக்கேற்றுவதற்கான சுயமுரண் உருவாக்கம்
4. சுயமுரண் ஊடான அடுக்கேற்றப் பண்புமாற்றம்
5. பண்புமாற்றத்தினூடு புதிய பண்பு(கள்)
6. பண்புமாற்றத்தினூடான பொதுப்பண்பு(கள்) கடத்தப்படல் 
7. இந்தத் தொடரேற்றம்  

2. இல் சொன்ன 'உள்ளார்ந்த சுய அடுக்கேற்றப் பண்பு' முரணில் இருந்து வருவதல்ல. இது சுய முரணை உருவாக்குகிற விபத்து. விதிகளால் மட்டுக்கட்டப்பட முடியாதது. நியதிவாதமும், விதிவசவாதமும் பொருத்தமற்றது.

நிலைப்பின் நிலைப்பு அடிப்படைகளில் அமைந்தது நிலைமறுப்பின் நிலைமறுப்பு.

நிலைமறுப்பின் நிலைமறுப்பில் மறுபடி ஒழுங்குகள் வருகின்றன. நிலைமறுப்பின் நிலைமறுப்பின் மேல் மறுபடி நிலைப்பின் நிலைப்பு கட்டமைகிறது.

இந்த நெடிய இயக்கத்தில், "மனித நோக்கும் இருப்பும்" (வரலாறும்) நிலைமறுப்பின் நிலைமறுப்பு அவத்தையில் கட்டமைந்த  நிலைப்பு இயக்கம்.

வரவிருக்கிற "செயற்கை நோக்கு" (Artificial Intelligence) நிலைப்பின் நிலைப்பில் கட்டமையப் போகிற நிலைமறுப்பின் நிலைமறுப்பு இயக்கம் . 

இற்றைத் தேதியில் செயற்கை நோக்கென்று நாம் சொல்லுவது நிலைப்பின் நிலைப்பில் அமைந்த அவத்தையில் 'இயற்கையான' நோக்கு ஆகும்.

மார்க்சிய மூலவர்களின் (பருப்)பொருள்முதலில் இருந்து இயக்கத்தை அணுகுகிற பார்வையும், அதனூடு  தத்துவத்தையும் விஞ்ஞானத்தையும் விளங்கி, வேறாக்கி, ஒருங்கிணைக்கிற செயலும் குறைபாடுடையவை.

அவற்றைத் திருத்துவோம். இயங்கியலினூடு புதுப்பிப்போம்.

இயக்கத்திலிருந்து பொருளையும், விஞ்ஞானத்தையும், தத்துவத்தையும்  (அனைத்தையும்) இயக்கத்திலிருந்து வரைவு படுத்துங்கள்.

இவ்வகையில் தத்துவ விஞ்ஞானத்தைப் பொருத்தமாக இணைத்து அந்தப் பெறுதியை விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக்க முடியும்.



மார்க்சிய மூலவர்களை விடவும் மிக வலிமையான தத்துவச் சட்டகம் கிடைக்கும்.

என்னதான் வலியமையடைந்தாலும் அதைத் தொடர்ந்து திருத்தவே நாம் முயலவேண்டும். 

அதை 'அறிவு பற்றிய அறிவுக்கும்' (இவ்விதம் எண்ணற்ற சுயமுனேற்ற கூறுகள் உண்டு),  அத்தனை அறிவுத் துறைகளிலும் பிரயோகியுங்கள்.

புறம், அகம் என எதையும் பரும்படியாகப் புரிந்து கொண்டு திட்டமாகப் புரிந்து கொள்கிற இயக்கத்தை விரைவுபடுத்துங்கள். 

தோழர்களே, நாம் இயங்கியலை உள்ளெடுத்து, விளங்கிப் பயில்வதன் மூலம் சோசலிச மனநிலைக்கு முதலாளியக் கட்டம் முதிரமுன்பே வந்துவிடலாம். 

மிகப் பரந்த பார்வையில் இவ்விதமே இயக்கம் நடக்கிறது.

முரணற்ற இயக்கம் --> முரணுள்ள இயக்கம் --> முரணற்ற இயக்கம் (மேம்பட்ட, வேறான) ---> முரணுள்ள இயக்கம் (மேம்பட்ட, வேறான) --->

நிலைப்பின் நிலைப்பு (assertion of assertion) அடிப்படைகளில் அமைந்தது நிலைமறுப்பின் நிலைமறுப்பு (negation of negation).

நிலைப்பின் நிலைப்புக்கான வெளியை நிலைமறுப்பின் நிலைமறுப்பு இயக்கம் மறுபடி தோற்றுவிக்கிறது.

நிலைமறுப்பின் நிலைமறுப்பில் மறுபடி ஒழுங்குகள் வருகின்றன. நிலைமறுப்பின் நிலைமறுப்பின் மேல் மறுபடி நிலைப்பின் நிலைப்பு கட்டமைகிறது.

மனித நோக்கு நிலைமறுப்பின் நிலைமறுப்பு அவத்தையில் கட்டமைந்த ஒன்று. நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஐ அடிப்படையாக்கி நிலைப்பின் நிலைப்பாக (தொகுத்தறிவு முறையாக)  கட்டமைந்த ஒன்று.

வரவிருக்கிற "செயற்கை நோக்கு" (artificial intelligence) நிலைப்பின் நிலைப்பின் மீது கட்டமையப் போகிறவொன்று.

அதன் தன்னுணர்வுக் கட்டம் (self-conscious AI, General -> Super AI), நிலைப்பின் நிலைப்பு மீது கட்டமைகிற நிலைமறுப்பின் நிலைமறுப்புக் கட்டமாக இருக்கும்.

இற்றைத் தேதியில் செயற்கை நோக்கென்று நாம் சொல்லுவது நிலைப்பின் நிலைப்பில் அமைந்த அவத்தையில் 'இயற்கையான' நோக்கு ஆகும்.

நிலைப்பின் நிலைப்பு (முரணற்ற இயக்கம்), நிலைமறுப்பின் நிலைமறுப்பு (முரணுள்ள இயக்கம்) இவை பின்னிப்பிணைந்தவை. சுருளிவில்லாய் அவத்தைகளினூடு இயங்குபவை.

எனின் எங்களது இயங்கியல் கேள்வியை எழுப்புவோம்?

எது முதன்மையானது? மறுபடி அழுத்துகிறேன். ஒவ்வொரு வெளியிலும் அவத்தைக்கேற்ப முதன்நிலைக் கூறு இரண்டாம் நிலைக்கும் மறுதலையும் நடக்கும்.

காலம் என்பது இயக்கம் சார்ந்த கருத்து. இயக்கமன்றி காலம் இல்லை.

நான் கேட்கிற முதன்மையானது எதுவென்ற கேள்வி எது காலத்தால் முந்தியது? அதாவது அடிப்படையான இயக்கம் எது என்பதே.

நிலைப்பின் நிலைப்பா? நிலைமறுப்பின் நிலைமறுப்பா?

என்னுடைய முடிவு, மேலே நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல நிலைப்பின் நிலைப்பே முதன்மையானது.

இதைக் கருத்துமுதல்வாதம், அத்வைதம், ஆன்மீகத்தோடு குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. என்னுடைய முடிவு இயங்கியல் வழியிலானது. தெரிவுக்கான காரணங்களை மீண்டும் சற்று எளிய பதங்களில் விளக்குகிறேன். இலகுபடுத்தியிருக்கிறேன்.

1. நிலை உருவாகிற பொழுதுதான் மறுக்கவும் முடியும். இவை மிகத் தொடர்ச்சியாக நடந்தாலும் (அ=அ அல்ல என்பதே இயங்கியல் அடிப்படை) நாம் தத்துவ வலிமையால் முதன்மைக் கூறைக் காணுகிறோம்.

2. இயக்கத்தின் அடிப்படையாக முரணைக் கொள்ளுகிற பொழுது இந்த முரண் எங்கிருந்து வருகிறது என்கிற கேள்வி வருகிறது. இந்தக் கேள்வி பருப்பொருளை முதன்மை நிலைக்குத் தேவையற்றுக் கொண்டு வருகிறது.


அவ்விதம் வருகிற 'தீர்வும்' இயங்கியல் விரோத முடிவான பொருளும் (பொருள் என்று நான் தத்துவமொழியில் குறிப்பது பருப்பொருளையே) இயக்கமும் பின்னிப்பிணைந்தவை என்று மட்டும் சொல்லிவிட்டு முதன்மையைச் சொல்லாமல் மழுப்புகிறது.

மாறாக இயக்கத்தின் விளைவாக முரணைக் கொள்ளுகிற பொழுது உள்ளிணக்கம் மிகுந்து வருகிறது.

அனைத்தையும் இயக்கம் சார்பாக வரைவு செய்து மார்க்சிய மூலவர்களின் சிந்தனையக் காட்டிலும் ஆழம் போக முடிகிறது. 

நிலைமறுப்பின் நிலைமறுப்பு (negation of negation) ஆதிக்கமாயிருக்கிற அவத்தையில் அதற்கு எதிரான நிலைப்பின் நிலைப்பு (assertion of assertion), ஒழுங்கு உருவாகி வளர்கிறது. 

இந்த அவத்தையில் இயக்கத்துக்கு முரணான எதிர்கள் வளர்கின்றன. இவை இயக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. 

மாறாக (இயக்கத்தின் இயக்கத்தின் இயக்கத்தளத்தில் ஏறி நின்று சொன்னால் 'நிலைமாறாக'),

நிலைப்பின் நிலைப்பு ஆதிக்கமாயிருக்கிற அவத்தையில் நிலைமறுப்பின் நிலைமறுப்பு உருவாகி வளர்கிறது. 


இந்த அவத்தையில் இயக்கத்துக்கு ஆதரவான எதிர்கள் வளர்கின்றன. இந்த முரண்கள் இயக்க வேகத்தைக் கூட்டுகின்றன. 

இயக்கத்தின் 'சுயமுன்னேற்ற' பண்பும் அது சுயமுன்னேற்றத்துக்காக உருவாக்குகிற கருவியான சுயமுரணும் அடிப்படைமுரண்களாக இருக்கின்றன. 

இப்போது இயங்கியலின் சுய அடுக்கேற்ற இயக்கமான சுருள்வில் இயக்கத்தை இன்னுமும் அதிகமாகப் புரிந்து கொள்ளலாம். 

சுருளிவில்லின் மேல் நோக்கிய இயக்கம் நிலைப்பின் நிலைப்பால் உந்தப் படுவது. 

சுருளிவில்லின் வட்ட இயக்கம் நிலைமறுப்பின் நிலைமறுப்பால்  உந்தப் படுவது.



3. முரணுக்கு 'முன்பு' (காலம்) என்ன இருந்தது கேட்பது முரணுக்கு முன்பு இயக்கம் இருந்ததா என்று கேட்பதாகவே அர்த்தம். இருந்திருந்தால் அது முரண் பண்பை (அதுவும் விபத்தே) வந்தடைந்திருக்காத முரணற்ற, நோக்கற்ற, நிலையற்ற இயக்கமாக இருந்திருக்கும்.

நிலையற்ற நிலையே இயக்கம்.

நிலை எதுவுமற்ற நிலையே ஆரம்ப இயக்கம்.

 ஆரம்ப இயக்கம் ஹெகல் சொல்லுவது போலக் கருத்தும் அல்ல. மார்க்சியர்கள் சொல்லுவதுப்போல பருப்பொருளும் அல்ல.

சுருளிவில்லை மிகச் சரியாக, மிக மிக மிகப் பரந்து பட்ட, மனித அறிவின் எல்லையில் நின்று வரைந்தால் அது மேல் நோக்கி இயங்க  'ஆரம்பித்து' நேரடுக்கேற்ற இயக்கத்தை அடைந்து (இயக்கத்தை இயக்குதல் - இயக்கம் தன்னை விரைவுபடுத்தவே முரண் பண்பைக் கொள்கிறது), முரண்கள் வலுத்தததும் மறுபடி ஒழுங்கமைகிற இயக்கம் தோன்றுகிறது.  வளைந்து மேலே செல்லச் செல்லச் வட்டப் பரப்புக் குறைந்து வந்து, ஈற்றில் ஏறக் குறைய நேர் மேலே செல்லுகிற இயக்கமாக மாறி, மறுபடி தலைகீழான சிறுவட்டப்பரப்பிலிருந்து பெருவட்டமாக மாறிச் செல்லுகிறது. அவத்தைகள் மாறி மாறி மீளுகின்றன. அவை சமச்சீராக இருப்பதில்லை. 

இயங்கியல் அறிவு இயக்கத்துக்கு எதிரான சக்தியாக உருவெடுத்து வளர்கிறது.

அதாவது புதிய முரணற்ற இயக்கமான இயங்கியல் சிந்தனை, ஆதி முரணற்ற இயக்கமான முரணற்ற இயக்கத்தை (சரியாகத்தான் எழுதுகிறேன் முரணற்ற இயக்கமான முரணற்ற இயக்கமே அடிப்படையானது, அதுவுவே பொருளுக்கும் அடிப்படை) எதிர்க்கிறது.

எதிலிருந்து வளர்ந்ததோ அதையே எதிர்க்கிற இயங்கியல் போக்குக்கு இயங்கியல் அறிவும் விதிவிலக்கல்ல.  

உதாரணத்துக்கு மார்க்சியத்தை அடிப்படையாக்கிய செயல் என்பது மார்க்சியத்தைத் தகர்ப்பதே (காலாவதியாக்கி, தேவையற்றதாக்குவதே).

எப்படித் தகர்ப்பது என்கிற தளத்தில் உரையாடலைத் தொடங்காமல், தர்க்கக் கூடாது, அப்படி நினைப்பதே பிழை (பாவம்?!) இவர்கள் எல்லோரும் திரிபுவாதிகள் என்று மேம்போக்காகச் சொல்லிக் கொண்டிருப்பது மார்க்சியச் செயலை மட்டுப்படுத்துகிறது.


ஒவ்வொரு சாத்தியப்பாடும் தமக்கெதிரான சாத்தியப்பாடுகளை உள்ளார்ந்து உருவாக்குவைதை, தமக்கு எதிர்நிலைகளை தமது உருவாகத்தினூடே உருவாக்குவதை விளங்கிக் கொள்ளுவோம். 

என்னுடைய இந்த இயங்கியலை வளப்படுத்துகிற செயல் அதைத் தகர்த்து இன்னொன்றை ஆக்குவதே. எல்லோரிடம் அதையே வேண்டுகிறேன். அதுவே இயல்பு. இதில் ஒரு 'மனக்குறை', 'பயமும்' வேண்டாம்.

உபயோகிக்கப் படுகையில் எல்லாவற்றிற்கும் தேய்மானம் உண்டு. இயங்கியல் கருவி அடங்கலாக. ஆனால் தேய்மானத்திலிருந்தே புதிய கருவியை உருவாக்குகிற கருவியாக இயங்கியல் இருக்கிறது. 


கத்தியை உபயோகித்து வருகையில் அது மழுங்கும். கத்தியை உபயோகிப்பதே அதைத் தொடர்ந்து தீட்டுகிற வகையில் பார்த்துப் பார்த்து வடிவமைத்தால் அதுவே இயங்கியல் கத்தி. 



இந்த வரிப்படம் தொடர்ந்து அவத்தை மாற்றங்களைச் சந்தித்து வரும். மாறி மாறி இந்த அவத்தைகள் ஒன்றிலிருந்து ஒன்று உருவாகி முன்னையதை மறுத்து வரும். அவத்தைகள் ஒரே அளவிலானவை அல்ல.

நிலைப்பின் நிலைப்பிலிருந்து நிலைமறுப்பின் நிலைமறுப்பு உருவாகி, நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆதிக்கசக்தியாகி, மொத்த இயக்கத்துக்குமான ஆதிக்க சக்தியுமாகிறது.

அதாவது நிலைப்பின் நிலைப்பு, நிலைமறுப்பின் நிலைமறுப்பு இவை இரண்டும் பின்னிப்பிணைந்து இயங்குவதன் மொத்த இயக்கப் பண்பு நிலைமறுப்பின் நிலைமறுப்பாக மாறி வருகிறது.

இதன் காரணத்தையும் இந்த  நிலைப்பின் நிலைப்பின் அடிப்படையை எவ்விதம் இயங்கியல் வழி நிறுவுவது எனவும் பார்ப்போம்.

வரிப்படத்தில் நிலைமறுப்பின் ஆதிக்கக் கட்டம் அதிகமாக இருப்பதைக் கவனிக்குக.

நிலைப்பின் நிலைப்பின் திசைக் கதி (அதாவது திசைப்பட்ட மேல் இயக்கம், முன்னேற்றம் அதிகம்) அதிகம். அதன் வேகத்தை அதிகரிக்கிற, இயக்கத்தின் இயக்கமான  நிலைமறுப்பின் நிலைமறுப்பே அதிக கதியில் இயங்கும். இது ஒழுங்கை 'முன்னேற்றாது', குழப்பத்தை முன்னேற்றும்.

இயக்கத்தை "இயக்கத்தின் இயக்கம்" வென்றுவிடுகிறது.

இது இயங்கியலை மனித நோக்கு அறியத்தக்க (நிலைமறுப்பின் நிலைமறுப்பிலிருந்து உருவான
ஒரு நிலைப்பின் நிலைப்பு இயக்கமே மனித நோக்கு) அதியுயர் சிந்தனைச் சட்டகமாக, முரணற்றதாக இயங்கியல் தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறது.

தத்துவத்தின் இயக்கம் தொகுத்தறி இயக்கம் - தனித்த நோக்கின் தவிர்க்க முடியாத தொகுத்தறி இயக்கம். என்னுடைய இயங்கியலின் பூச்சிய விதி இது. விரிவாக எழுதியிருக்கிறேன்.

இந்தத் தொகுத்தறி இயக்கம் சுழல் ஏரணங்களில் சிக்கித் தவிக்காது இருக்கவே (சிக்கித் தவிப்பதைத் தொடர்ந்து அவதானித்துக் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டதால்) அந்தக் குறைபாடுகளைத் தீர்க்கவே நான்/நாம் இயங்கியலை வளர்த்தெடுக்கிறோம்.

இயங்கியல் உள்ளார்ந்து வட்ட இயக்கங்களை முறியடிப்பதால் இயங்கியலைக் கொண்டு இயங்கியலை வரையறுப்பது சுழல் ஏரணம் (Circular Reasoning) அல்ல. சுழல் ஏரணத்தை முறியடிக்கவே நாம் இயக்கநிலைத் தர்க்கத்தைக் கொண்டுவந்தோம் என்பதை அறிக. In this case 'self-referencing' is perfectly okay. Please challenge if not. 

மிகப் பரந்த இயக்கப் போக்கில் நிலைமறுப்பின் நிலைமறுப்பே ஆதிக்கமாயிருக்கும்.

எவ்விதம் ஆரம்பக் கூறு முதன்மையாக இருந்து ஆனால் இரண்டாம் நிலைக்கூறு வளர்ந்து முதன்மைக்கூறாக மாறுகிறதோ அதே இயக்கமே இதுவும்.

மறுபடி முதன்மைக் கூறு மீண்டு வரும். அது உண்மையில் மூன்றாம் நிலையாகக் கொள்ளத்தக்கது.

ஒரு வசதிக்காகவும் தொடர்புக்காகவுமே நான் இரண்டு கூறுகளை வைத்துப் பேசுகிறேன். 

முதன்மை இரண்டாவதாகுவது பண்புமாற்றம். அது இரண்டையும் இணைத்துப் புதியதையே ஆக்கியிருக்கிறது   (இரண்டு அல்லது பல). அது மூன்றாவது.

முரணற்ற ஆதி இயக்கமும், புதிய முரணற்ற சிந்தனை இயக்கமான இயங்கியலும் ஒன்றல்ல. 

நான் எழுதிவருவது கருத்துமுதல்வாதமோ, ஆன்மீகமோ, இறையியலோ அல்ல. 

இயங்கியலை இயக்கம் சார்பாகவே முழுவதும் வடிவமைக்கிற பொழுது (மார்க்சிய மூலவர்கள் பருப்பொருள் சார்பாக இயக்கத்தை, இயங்கியலை வடிவமைத்தது பொருத்தமற்றது, பல சிந்தனைக் குறைபாடுகளுக்குக் காரணமானது), அது பின்வரும் வலிமைகளைப் பெறுகிறது.

1. நான் மேற்சொன்ன கருத்துமுதல்வாதம், ஆன்மீகம், இறையியலை 'எதிர்க்காது' அவற்றை உள்ளிணைத்து ஒடுக்க வேண்டிய வெளிக்குள் ஒடுக்கி வைக்கிறது. நடைமுறைத் தளத்திலிருந்து தத்துவங்களைத் துரத்த முடியுமே தவிர எதையும் அழிக்க முடியாது.  புதிய இயங்கியல்  சட்டகத்தைக் கொண்டு (இயக்கம் சார்பாக அனைத்தையும் வரைவு செய்கிற சட்டகமும் அணுகுமுறையும் - சட்டகமும் அணுகுமுறையும் ஒரே இயக்கத்தின் இரு வேறு நிலைகளே நான் முறை என்பது இரண்டையும் சேர்த்தே) மனித நோக்கு உருவாக்கத்தக்க அனைத்தையும் உருவாக்கவும், அதற்குரிய குறிப்பான வெளிகளுக்குட் போட்டு மூடவும் ( நடைமுறைத் தளத்திலிருந்து விரட்டியடிக்கவும்) முடியும்.

தத்துவத்தையும் விஞ்ஞானத்தையும் திருத்தமாக இணைத்து வருகிற விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் தத்துவங்களின் தத்துவமாகவும் இருக்கிறது.விஞ்ஞானத்தின் 'மட்டறுக்கிற' பண்பைக் கொள்கிறது. ஏனைய தத்துவங்களையும் (எவ்விதம் விஞ்ஞானத்தை உள்ளிணைத்ததோ அவ்விதமே) பொருத்தமாக இணைத்துக் கொண்டு தத்துவங்களின் தத்துவமாகத் தொடர்ந்து வளர்கிறது. 

ஆன்மீகம், கருத்துமுதல்வாதம், பின்னவீனவாதம் இவற்றையெல்லாம் மிக மிக மிக மிக எளிதாக நாம் எனி தகர்த்து ஒடுக்கலாம். செய்முறைகளை நான் மட்டுமல்ல, நாம் கூட்டாகச் செய்ய வேண்டும்.

ஒரு உதாரணத்துக்கு,

நிலைமறுப்பின் நிலைமறுப்பு இயக்கமே தனக்கான எதிர்விளைவுகளை (ஆகவும் அடிப்படையில் சமமமற்ற, மேற்பரப்பில் சமமாகத் தோற்றுகிற)  தோற்றுவிக்கிறது. இயற்கை நிலைமறுப்பின் நிலைமறுப்பில் இருப்பது.

இந்த எதிர்விளைவு, 'கர்மா' போன்றவையை சமூக வெளிக்குள் நிலைப்பின் நிலைப்பு ஆதிக்கமாயிருக்கிற சூழமைக்குப் பொருத்துவது தவறு. 

'கர்மா' கருத்தியல், தாக்கத்துக்குச் 'சமனும்' எதிருமான (இது தோற்றப்பாடே)  மறுதாக்கம் இவையெல்லாம் நிலைமறுப்பின் நிலைமறுப்பு வெளிகளின் தொழிற்படத்தக்கவை.



விசை தாக்காத பொருள் ஓய்வில் இருக்கும் அல்லது மாறாவேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் என்பது நியூட்டனின் முதல் விதி.

(நியூட்டனின் விதிகள் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன, சில வெளிகளில் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டன).

நியூட்டனின் விதியை இயங்கியல் வழி திருத்தினால் வருவது,

விசைதாக்காத விடத்து 'பருப்'பொருட்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இயக்கத்தின் இயக்கத்துக்குப் போகாது - ஆர்முடுகாது.

சார்பு வெளியில் எல்லாமும் மாறா வேகத்தில் இயங்கிக் கொண்டு இருக்கலாம். அல்லது எல்லாமும் ஓய்வில் இருக்கலாம். அதைத் துணிய முடியாது.

ஆனால் சார்பு வெளியில் உள்ள அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

சார்பு வெளியிலன 'இருப்பே' இருப்பை மறுக்கிற இயக்கமாகவும் இருக்கிறது. 

இயக்கத்தின் இயக்கத்துக்கு அதுவாகவே போகத்தக்க ஒரே கூறு இயக்கம் என்பதையே என்னுடைய இயங்கியல் அழுத்துகிறது. பருப்பொருட்களுக்குப் புறவிசை தேவை. 



மார்க்சிய, ஹெகலிய இயங்கியலிலிருந்து வேறுபட்டு, அதியுயர் திருத்தமடைகிற என்னுடைய இயங்கியலை 'இயங்கியலின் இயங்கியல்' என எழுத முடியும். இயங்கியலியன் இயங்கியலின் ... இயங்கியலின்... இயங்கியல் என்றும் எழுத முடியும்.

ஆனால் இயங்கியல் 'அறிவுச் செயற்பாடு', தொகுத்தறி செயற்பாடு. அது நிலைப்பின் நிலைப்பு வெளியை நோக்கி இயங்குவது; திசைதான் பண்பு; நோக்கி இயங்குவதென்பது  உள்ளிருந்து இயங்குவதே.

இதைத்தான் நான் சோசலிச மனநிலையென்பது சோசலிசத்துக்கான திசையில் சிந்திப்பது என்கிறேன். இது அறிவுத்திறன் சார்ந்ததல்ல (பருமன்). இது சுயமுன்னேற்றம் (சுயவிமர்சனம்) சார்ந்தது. இந்தச் சிந்தனை இயக்கம் நிலைப்பின் நிலைப்பு வழி நடந்தேறுவது. சிந்தனை வெளியில் சோசலிசத்தை வந்தடைந்து அங்கிருந்து புறத்தை அவ்வழியில் நடத்துவதே நிலைப்பின் நிலைப்பை புறத்திலும்  கொண்டுவரும். பேண்தகு (sustainable) சோசலிசக் கட்டம் அவ்வழியில் மட்டுமே சாத்தியம்.

சரி, விட்டதுக்கு மீளுகிறேன், இயங்கியலின் இயங்கியலின் இயங்கி... என்கிற விரிப்பைத் தொகுத்தறியின் அது இயங்கியலாகச் சுருங்கும்.

நிலைப்பின் நிலைப்பு  என்பது அறிவு வெளியில் உறுதிப்படுத்துவதை உறுதிப்படுத்துவதாகும் .

ஆகையால் இயங்கியல் என்று எழுதுவதே இயங்கியலின் இயங்கியலுக்கு மிகப் பொருத்தம்.

இவ்விதமே மிகத் திருத்தமாக இணைக்கப்பட்ட தத்துவ-விஞ்ஞானம் விஞ்ஞானங்களின் விஞ்ஞானத்திலிருந்து வெறுமனே 'விஞ்ஞானம்' ஆகும்.

அடுக்கேறிய அறிவின் அறிவைப் பற்றிய அறிவு, அதைப் பற்றிய அறிவு ....

சுருங்கி 'அறிவு' ஆகும்.

எல்லாவித சுய அடுக்கேற்றமும் சுருங்கி அதுவாகவும் ஆகிற நிலைப்பின் நிலைப்பையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி மிகவும் மட்டானது. அதனுடைய பதங்களின் "பொருள்" (அர்த்தம்) இயக்கத்துடன் மாறுவது. இயக்கத்தின் இயக்கத்தோடு மொழி ஈடுகொடுத்து இயங்காது. அவதானம்.

பிரயோக உதாரணங்கள் எண்ணற்றவை. மிஞ்சிப் போனால் சில பத்தாயிரம் உதாரணங்களை எழுதுவே என்னுடைய ஆயுட்காலத்தில் சாத்தியம். முறையைப் புரிந்து எடுக்கச் செய்வதே சரியானது. அதைத்தான் முயலுகிறேன். 

2. அனைத்தையும் இயக்கத்திலிருந்து வரைவுபடுத்துவது அதியுச்ச உள்ளிணக்கத்தைக் கொண்டு வருகிறது. எதையும் பொருத்தமாகவும், திருத்தமாகவும் இணைக்க முடிகிறது. உதாரணமாக தத்துவம் விஞ்ஞானத்தைத் மிகத் திருத்தமாக இணைப்பது.

3. கையடக்கமான இயக்க அடிப்படை என்கிற ஒற்றையிலிருந்து (இருமைவாதம் ஒருமைக்கும், ஒருமைவாதம் இருமைக்குமே இட்டுச் செல்லும்) புறவயப்படுத்தல், சமன்பாடாக்கிக் கணினியைக் கற்கச் செய்தலை மேம்படுத்தலாம். வாய்ப்பு மிக அதிகம்.

4. விஞ்ஞானம், கோட்பாட்டாக்கம், தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற படிமுறைத் தளங்களில் பெரும்பாய்ச்சல்கள் நிகழ்த்தலாம்.

வரலாற்று இயங்கியலில் (வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது தவறான பதம், தேவையற்ற Materialist அடையாளம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இயங்கியல் ஆய்வை முடக்கி விட்டது), வர்க்கப் படிநிலைகள் உருவாகி வளர்வதையும், இரண்டாம் நிலைகளை முதல்நிலைக்குப் போவதையும் விளக்குவோம். இயற்கையுடன் அணுக்கமாயிருக்கிறவற்றின் 'நேர்த்திறம்' எவ்விதம் மெல்லக் கசிந்து சமூக ஒழுங்குகளை முன்னெடுக்கிறது என்பதையும் பார்ப்போம். எது, எவை முதலில் மாறும் என்கிற புறவயத்தை இவ்விதம் கட்டியெழுப்புவோம்.

அடித்தளம்<---====> மேற்பரப்பு ஒரு சார்பியக்கம். இந்தச் சார்பியக்கம் சமூக மாற்றங்களைப் புறவயப்படுத்தி, சமூகப் பண்புமாற்றங்களுக்கான (சோசலிசப் புரட்சி அடங்கலாக) காலம், திசையைத் துணிய உதவாது. 

மேற்சொன்ன வகையில் புறவயப்படுத்த இயற்கையின் இயக்கத்திலிருந்து அனைத்துக்குமான 'தூரங்களைப்' புறவயப்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை ஆக்க வேண்டும். 





நான் இதை எழுதி முடித்தவுடன் மீண்டும் முதலில் இருந்து வாசித்தால் திருப்தி வரமாட்டேன் என்கிறது. ஏனெனில் ஒவ்வொரு தடவையும் வாசிக்கிற பொழுது என்னுடைய அறிவு அடுக்கேற்றம் அடைகிறது. அது ஒருபோதும் குறைப்போவதில்லை (உடலின் குறைபாட்டால் ஒரு கட்டத்தில் குறையும்).

ஆகையால் நான் எழுதியதை விட எழுதாததே அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு தொடர்ந்து மாறுகிற முறையையும் அதன் போக்கையும் அதன் பலத்தையும் புரிந்து கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அதை மாற்ற வெளிக்கிட்டால் மாற்றிக் கொண்டே இருக்கவேண்டியதுதான் என்பது புரிகிறது. முறையை மற்றவர்கள் உள்ளவாங்கப் போதுமான புறவயம் இருப்பது எனக்குப் போதுமானது.

ஒவ்வொருவருடைய மட்டமும் வேறானது என்பதால் அவர்கள்தான் வாசிக்கிற தடவைகளின் எண்ணிக்கை, வேகத்தைத் தமக்கேற்றாற் போல நிர்ணயிக்க வேண்டும்.

இந்த முறையை (முறை என்பது முறை->சட்டகம்->முறை, முடிந்த வரைக்கும் எல்லாப் பதங்களையும், வரைவுகளையும் இயக்கமாகச் சிந்தனையில் பாருங்கள்) உடைப்பதே எனி என்னுடைய அறிவியக்கம். இந்த முறையைப் பயன்படுத்திக் கொண்டே முதன்மை இயக்கமாக உடைக்கவே (இன்னுமும் முன்னேற்றவே) முயல்வேன்.

அதையேதான் அனைவரும் செய்யவேண்டும். தங்களுக்கான முறைகளை ஆக்கும் முயற்சியே அனைவருக்கும் முதன்மை நோக்காக இருக்கவேண்டும். அது பிழைப்புவாதம் களைந்து (பிழைப்புவாதத்தை இயக்கம் கொண்டு வரைவு செய்திருக்கிறேன்) அறிவு இயக்கமாக இருக்க வேண்டும்.

இதுவே சோசலிச கருத்துவெளி. 

இதைத்தான் புறவெளிக்கும் கடத்தப் போகிறோம்.

கருத்துவெளியில் இல்லாததை, சோசலிசத்துக்கான இயக்கவெளியில் இல்லாததை சோசலிச வெளிக்குள் 'திடீரெனக்' கொண்டு வருவதென்பதெப்படி? 

பண்புமாற்றம் அளவுமாற்றத்தினூடே நடைபெறுவது. சமூகத்தின் சோசலிச மனநிலையாளர்களின் அதிகரிப்புடனே சமூகமே சோசலிசத்துக்குப் பண்புமாற்றம் அடையும். 

மொழி இயங்கியல் சிந்தனைக்கானதல்ல. அது நிலைப்பின் நிலைப்பு இயக்கத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட கருவி.  வெறும் மொழியைக் கொண்டு இயங்கியல் உரையாடலை நிகழ்த்த முடியாது. 

இயங்கியல் தர்க்கத்தைப் புரிந்து கொண்டு மொழியின் பின்னாலிருக்கிற இயக்கத்தைப் பரஸ்பரம் சுட்டிக் கொள்ளுகிற பொழுதுதான் இயங்கியல் உரையாடல் நிகழும். 

இயங்கலகுச் சிந்தனை என்று பெயரிட்டு அந்த முயற்சியையும் செய்து வந்தேன். முடிந்தளவுக்கு இயக்கத்தைச் சிறைப்பிடிக்கிற பதங்களாக மொழியை முன்னேற்றுகிற வேலையையும் செய்தாக வேண்டும். இயங்கியல் அகரமுதலியாக அது இருக்கும்.

எவை எல்லாமுமே தொடர்ந்து திருத்தமடைகிறவை என்பதையும், அடுத்த அவத்தையில் தலைகீழ் மாற்றத்தையும் (எல்லாப் பண்புகளும் தலைகீழாகாது, அனைத்துக்கும் பொதுப்பண்புகள் உண்டு, அதைக் கொண்டுதான் இயங்கியலை வடிவமைத்திருக்கிறேன்) புரிந்து கொண்டு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

ஒரு பண்புமாற்றத்தில் ஒன்றோ பலதோ பண்புகள் மாறலாம். மாறியது எது, மாறாதவை எவை (அல்லது எது) எனத் தெரிந்து கொண்டே புதிய அணுகுமுறையை அமைக்க வேண்டும்.

குறித்த சூழலுக்கு குறித்த தீர்வே உண்டு. ஆனால் அனைத்துக்கும் பொதுவான வழிமுறைகளைக் கொண்டு இந்த இயக்கத்தை அதியுயர் வினைத்திறன் உடையதாகும்படி தொடர்ந்து நெறிப்படுத்தவேண்டும்.

திட்டவட்டத்திலிருந்து பரும்படியும் பரும்படியிலிருந்து திட்டவட்டமும் தொடர்ந்து நடந்தாக வேண்டும்.

சற்று நேரங் கழித்து மீள வாசிக்கிற பொழுது என்னுடைய சிந்தனை குறைபாடுகளும், இன்னுமும் பொருத்தமான பதங்கள், வாக்கியங்கள், அடிக்கோள்கள் தோன்றும். இது சுயதம்பட்டமோ, திமிரோ கிடையாது. இயங்கியல் சிந்தனையின் இயல்பு நிலை. அதையும் இயங்கியல் சிந்தனையினூடு புரிந்து கொண்டு அடுக்கேறுகிற பொழுது அமைதியும், 'நிம்மதியும்' கிடைக்கிறது.

எவ்விதம் என்னை அறிவுக்காகச் சார்ந்திருக்கிறவர்களை விரட்டி விடுவதன் மூலம் (என்னுடைய அறிவு முறையைப் புறவயப்படுத்திப் பொதுவில் வைப்பதன் மூலம்) எனக்கு விடுதலை கிடைக்கிறதோ அதே போலவே அறிவினால் வருகிற குறைகளுக்கும் அறிவின் மூலமே விடுதலை கிடைக்கிறது. 

'அறிவு வளர்ச்சியால்' அழிந்தோம். 'அறிவு' கெட்டது - என்பதாக வளர்ச்சிவாதத்தையும் அறிவின் வளர்ச்சிப் போக்கையும் குழப்பிக் கொண்டிராமல், 'எந்த வகை அறிவு' கெட்டது, எது நல்லது (முன்னேற்றகரமான முரண்களைக் கொண்டது) என்கிற 'அறிவைத்' தேடி வளர்த்துக் கொண்டு தீர்வுகளுக்கு வாருங்கள்.

தீர்த்தல் என்பது முன்னேற்றகரமான முரண்களுக்கு நகர்தலே. 

என்னைச் சார்ந்து இருக்காமல் என்னுடைய கருத்தைப் புரிந்து கொண்டு, அதில் வளர்ந்து, அதை வளர்த்து, என்னை எதிர்த்து, என்னை ஒதுக்கும் படி தோழர்களை வேண்டுகின்றேன்.

அவ்விதமே நான் அடிமைத்தளையிலிருந்து முழுவிடுதலை அடையமுடியும்.

நான் என் சிந்தனையின் வீரியத்தைக் கண்டு சறுக்கிவிட மாட்டேன்.

ஹெகலுக்கும், மார்க்சியர்களுக்கும் வருகிற மூடுகிற மனவிழைவு இயங்கியல் தர்க்கத்தின் குறைபாட்டால் வருவது.

இதையும் தாண்டிய சிந்தனைகளைத் தொடர்ந்து தேடிக் கொண்டும் அதற்காக அனைவரையும் ஊக்குவித்துக் கொண்டும், கட்டாயப்படுத்திக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருப்பேன்.

ஏனெனில் நான் ஒரு இயங்கியலாளன்.

இயங்கியலாளருக்குக் கருத்துவெளியில் தோல்வி கிடையாது.

மண்ணில் மல்யுத்தம் செய்கிற அன்ராயஸ் (Antaeus) பலத்தை மண் (தெய்வம்) அதிகரித்து வருகிற (கற்பனைக்) கதையாக, கருத்து வெளியிலான இயங்கியலாளரின் திறத்தை எல்லாவித கருத்து 'இயக்கமும்' அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

சரியும், தவறும், நேர்ப்படியேற்றமும், மறைப்படியேற்றமும் தெளிநிலையை அதிகரிக்கிற திசையில் மட்டுமே நகரும்.

நம்மில் பலர் இயங்கியலாளர்கள் ஆக வேண்டும். முடியாதிருப்பது வேறு. ஆனால் முயல வேண்டும். அதுவே ஒரு வரை இயங்கியலாளர் ஆக்கி விடும். திசையில் திரும்புதலே வந்தடைதல். திரும்பினால் போதும். இயக்கம் இயல்பானது. அது கொண்டு சேர்க்கும். இயக்கத்தின் இயக்கத்தை  நாம் அதிகரிக்க வேண்டுமானால் அதற்கே விசை வேண்டும். அதற்கு முழுமூச்சாக முயலவேண்டும்.

திரும்புவதற்கும் விசை வேண்டும். அது ஒப்பீட்டளவில் குறைவானது. எமது கைகளில் இருப்பது. எந்த அறிவுப் படிநிலையில் இருந்தாலும் நான் எனக்கு நேர்மையாக இருப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுவது. 

அவரரவருக்கு வேண்டியளவுக்கு நேரமெடுத்து இயங்கியல் முறையை புரிந்து கொண்டு என்னுடன் உரையாட முனையுங்கள். அல்லது என்னுடைய நேரத்தைச் சுரண்டுகிற, உழைப்பைச் சுரண்டுகிற செயற்பாடாக அது இருந்து விடும். 

இயக்கத்தை விளங்கி மேம்பட்ட இயக்கத்தை நிகழ்த்துவோம் தோழர்களே. 

கணா
01/03/2018


பிற்சேர்க்கைகள்
1. நான் எழுதுவது 'அத்வைதம்' அல்ல. இயங்கியல்.

பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதத்தை எவ்விதம் மட்டறுத்து அவற்றின் வெளிகளைச் சுருக்கி இயங்கியல் கருவியாக்கினேனோ (மற்றைய பதிவில் இருக்கிறது) அதே வழியில்தான் துவைதமும் அத்வைதமும் மட்டறுக்கப்படும். இயக்க வழியில் இயக்கம் இயக்க முரணாகவும், முரணியக்கமாகவும் மாறி வருவது ஒன்றிலிருந்து இரண்டும், இரண்டிலுருந்து ஒன்றும் வருவதாகும். துவைதம், அத்வைதம் என்பவை பொருத்த மற்றவை. ஒன்றிலிருந்து ஆரம்பித்தாலும் இரண்டே அதிக வலு அடையும். நிலைப்பின் நிலைப்பிலிருந்து (ஒன்று)  ஆரம்பித்தாலும் ஓட்டத்தில் நிலைமறுப்பின் நிலைமறுப்பே (இரண்டு) வலுவடையும்.

'முதன்மைக்' கூறு ஒன்றுமல்ல, இரண்டுமல்ல. எல்லாமும் ஒன்றே, எல்லாமும் இரண்டே என்றெல்லாம் சொல்ல முடியாது.

எவ்விதம் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் சுருங்கிய தத்துவமோ அவ்விதமே துவைதமும் அத்வைதமும் இயங்கியலின் ஓட்டத்தில் அர்த்தமற்றவையாக மாறுகின்றன.


2. என்னுடைய இந்த இயங்கியலை வளப்படுத்துகிற செயல் அதைத் தகர்த்து இன்னொன்றை ஆக்குவதே. எல்லோரிடம் அதையே வேண்டுகிறேன். அதுவே இயல்பு. இதில் ஒரு 'மனக்குறை', 'பயமும்' வேண்டாம்.

ஒவ்வொரு சாத்தியப்பாடும் தமக்கெதிரான சாத்தியப்பாடுகளை உள்ளார்ந்து உருவாக்குவதை, தமக்கு எதிர்நிலைகளை தமது உருவாகத்தினூடே உருவாக்குவதை விளங்கிக் கொள்ளுவோம்.

உதாரணத்துக்கு மார்க்சியத்தை அடிப்படையாக்கிய செயல் என்பது மார்க்சியத்தைத் தகர்ப்பதே (காலாவதியாக்கி, தேவையற்றதாக்குவதே).

எப்படித் தகர்ப்பது என்கிற தளத்தில் உரையாடலைத் தொடங்காமல், தர்க்கக் கூடாது, அப்படி நினைப்பதே பிழை (பாவம்?!) இவர்கள் எல்லோரும் திரிபுவாதிகள் என்று மேம்போக்காகச் சொல்லிக் கொண்டிருப்பது மார்க்சியச் செயலை மட்டுப்படுத்துகிறது.

உபயோகிக்கப்படுகையில் எல்லாவற்றிற்கும் தேய்மானம் உண்டு. இயங்கியல் கருவி அடங்கலாக. ஆனால் தேய்மானத்திலிருந்தே புதிய கருவியை உருவாக்குகிற கருவியாக இயங்கியல் இருக்கிறது.

கத்தியை உபயோகித்து வருகையில் அது மழுங்கும். கத்தியை உபயோகிப்பதே அதைத் தொடர்ந்து தீட்டுகிற வகையில் பார்த்துப் பார்த்து வடிவமைத்தால் அதுவே இயங்கியல் கத்தி.

There's a strong tendency to derive the theory of everything from this new logic.

This is the first time in history (history of organisms)that dialectics is proven by dialectical logic itself.

Actually this is the first ever proof in the history.

This is the first perpetual philosophy and the philosophy of superintelligence.

கொம்மூனிஸ்ட் அறிக்கையைத் திரித்து வாசிக்கும் நிலப்பிரபுத்துவ மனநிலை

அறிக்கையில் தர்க்கத் தவறுகள் உண்டு. அது வேறு பிரச்சினை. ஆனால் அதிகம் உடன் படுகிற கருத்துகளை அதிகம் கொண்டது. எழுபது எண்பது வீதம் வரைக்கும் உடன்படுகிறேன். இந்தப் பதிவு நிலப்பிரபுத்துவ மனநிலை மார்க்சிய எழுத்தை வாசிக்கிற பொழுதும், மொழிபெயர்க்கிற பொழுது அதனுடைய மட்டுப்பட்ட சிந்தனையால் எவ்விதம் தன்னை அறியாது திரித்து வாசித்துப் புரிந்து கொள்ளும் என விளக்குவதற்கானது. தோழர் சேனன் ‘ஆங்கில மொழி’ மூலங்களில் மார்க்சியம் வாசிக்கச் சொன்ன போது எதிர்க்கருத்து எழுதியவன் நான். நான் எதிர்த்ததன் காரணம், மார்க்சியம் என்பது வாசித்து அறிவதல்ல. இயங்கியல் அடிப்படைகளில் ஆரம்பித்து மார்க்சும் ஏனையவர்களும் வந்தடைந்த அத்தனை முடிவுகளுக்கும் வருவது. இவ் வழியில் சரிபார்ப்பது. இதில் மொழியின் பாதிப்பு இல்லை. தோழர் சேனனின் கருத்து என்னுடைய சோசலிச மனநிலை சார்பாக பிற்போக்கானது. அதனால் தவறானது. ஆனால் சோசலிச மனநிலையை வந்தடையாத, அதுவும் நிலப்பிரபுத்துவக் கூறுகளை தன்னுடைய சொந்தச் சிந்தனையிலிருந்து களையாமல் (அதற்கு முயலாமல்) தாராண்மைவாதத்தை மனித வரலாற்றில் இருந்து களைய வெளிக்கிடுறவர்கள் நிறைந்து வழிகிற தமிழ்ச் சமுகம் சார்பாக முற்போக்கானது. தமிழின் நிலப்பிரபுத்துவ மனநிலை கம மார்க்சிய மனநிலை மொழி பெயர்ப்பதை விடவும் தாராண்மைவாத கம சோசலிச மனநிலை மொழிபெயர்ப்பது திருத்தமாகிற வாய்ப்பு இருக்கிறது. நடைமுறை பெறுமதியும் இருக்கிறது. ஒரே ஒரு உதாரணந்தான் எழுதப் போகிறேன். ஆனால் மிகப் பொருத்தமானது, அதுவே போதுமானது. போதாதெனில் கிளறுங்கள், இன்னுமும் கொண்டு வந்து கொட்டுகிறேன். ஆனால் என்னுடைய நேரத்தை, உழைப்பைச் சுரண்டுவது பொருத்தமல்ல. ஒன்றுக்குக்கு மேற்பட்ட தோழர்கள் கீழ்வரும் கருத்தை முகநூலில் பகிர்ந்திருந்தனர். // இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.// [1] [1] https://www.marxists.org/tamil/marx/1848/communist-manifesto/ch01.htm நான் ஒரே ஒரு தோழருக்கு மட்டும் பதில் கருத்து எழுதினேன். மற்றவர்களை விட அத் தோழருடைய தெளிவு மட்டம் ஏனைய தோழர்களை நேரடியாகப் பாதிக்கும் என்பதால். மற்றப்படி ஆரை அடிக்க வசதியோ அவரை அடிப்பவன் நான் அல்ல. மார்க்ஸ், ஏங்கல்சின் இயங்கியல் புரிதலைத்தான் அடுத்ததாக அடிக்கப் போகிறேன். அவர்களைக் காட்டிலும் வலிமையான சட்டகத்தை உருவாக்கி வருகிறேன். பயபக்தியைக் கிழிப்பதுவும், மிகிமையை இழக்கச் செய்வதும், தொழில்களைஎல்லாம் வெறும் கூலி உழைப்பாக மாற்றுவதும் முதலாளித்துவ இயக்கத்தின் முற்போக்குக் கூறு. அப்படித்தான் மார்க்சும் ஏங்கல்சும் எழுதினார்கள். என்னை நம்பாவிட்டால் கொஞ்சம் அடுத்த பத்தியை வாசிக்கலாம். “உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.” [2] முதலாளியக் கட்டத்தின் முற்போக்குக் கூறுகள் பற்றி கொம்முனிஸ் மனிபெஸ்ட்டோ பக்கம் பக்கமாக வாயாரப் புகழ்ந்து பிற்போக்குக் கூறுகளையும் ஆழமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் நான் மேற் சொன்ன [1] ஐப் பகிர்ந்து கொள்கிறார்கள், இரண்டு முதன்மைக் காரணங்களால் அவர்களுடைய நிலப்பிரபுத்துவச் சிந்தனைக்கு அது உவப்பாயிருகிறது ஏனைய நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளை ஈர்ப்பதற்கு (appeal alike) நான் மார்க்சை விட மிகத் தெளிவாக எழுதி விளக்குவதை ஏற்க மாட்டார்கள். மார்க்ஸ்தான் சொல்லியிருக்கிறார் என்று [2] ஐக் காட்டினால்தான் உவந்து ஏற்பார்கள். ‘அந்தா பார் பூச்சாண்டி’ என்று மார்க்சைக் காட்டி இவர்களுக்குச் சோறு தீத்த வேண்டி இருக்கிறது. மார்க்சை அப்படி ஆக்கி விட்டார்கள். மார்க்ஸ் எழுதினால் மட்டுமே விளங்கக் கூடியவர்களாக இருக்கிறவர்களைப் பற்றிய நிலாவின் பதிவு. அடுத்த ஒப்பீடு மொழி பெயர்ப்பு. ஆங்கில மொழியில் [1] பின் வருமாறு தெளிவாக முதாளித்துவ முற்போக்குக் கூறுகளையும் பிற்போக்குக் கூறுகளையும் பத்தி பிரித்து (விளங்கி இருக்கிறார்கள் என்று புரிகிறது) எழுதி இருக்கிறார்கள். மூலத்தில் பத்தி பிரிக்காமல் இருந்து ஆங்கில மூலத்தில் இவ்விதம் பத்தி பிரித்திருந்தால் தனியாகப் பாராட்டுவேன். //The bourgeoisie has stripped of its halo every occupation hitherto honoured and looked up to with reverent awe. It has converted the physician, the lawyer, the priest, the poet, the man of science, into its paid wage labourers The bourgeoisie has torn away from the family its sentimental veil, and has reduced the family relation to a mere money relation. // [3] [3] https://www.marxists.org/archive/marx/works/download/pdf/Manifesto.pdf, பக்கம் பதினாறு . எதையுமே மாற்றாமல் ‘உள்ளதை உள்ளபடியே’ வைத்திருப்பதே ‘திரிபுவாதிகளிடம்’ இருந்து காக்கிற நிலப்பிரபுத்துவ மனநிலையின் தவறான வழிமுறை. மதப் புத்தகம் போல, அதே பிற்போக்கான ஆண்மொழியுடன் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான் அதைச் சொன்னால் ஏதோ எனக்கு அது மட்டுந்தான் சொல்ல முடியும், அதுதான் எனக்கு விளங்கும் என்பது போல, ஏதோ நான் ஒரு NGO மேட்டுக்குடி பெண்ணியவாதி போல ஒரு பார்வை பார்க்கிறார்கள். சோசலிசக் கட்டத்துக்கு புற தொழிநுட்பமும், அக தொழிநுட்பமும் (தருக்கச் சிந்தனை, தத்துவ சிந்தனை) அத்தியாவசிய நிபந்தனைகள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் சாரம் - நோக்கற்ற இயற்கையின் ‘நேர்மைத்தன்மை’, இயற்கை ஆய் கருவிகள், உழைப்பு, உற்பத்திச் செயற்பாடினூடு (புற தொழிநுட்பம்) தனி, சமூக சிந்தனைக்குள் (அக தொழிநுட்பமாக) கசியும் (trickle down) என்பதே. இறுகிப் போன நியமங்களைக் குழப்பி புதிய நியமங்களை (சோஷலிச) ஆக்குகிற கட்டம் முதலாளியம். முதலாளியக் கட்டம் வேண்டாம் என்பவர்கள் தத்துவ பலத்தைக் கொண்டு நியமங்களை உடைத்து, சரியான திசையில் கட்டமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். இது தனிமனித தளங்களில் ஆரம்பித்து சமூகத் தளத்துக்கு பரவும். முதலாளித்துவ முற்போக்குக் கூறுகளையே உள்ளவாங்க முடியாத மட்டான அக தொழிநுட்பம், புரட்சியைச் செய்து விட்டு அடுத்த நாள் என்ன செய்ய போகிறது. மிகப் பெரிய அதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருகிறது. இந்த உதாரணத்துக்கு மன்னிக்கவும். இயற்கைக்கு அணுக்கமாக இருப்பதால் நாய்களிடம் அதிக நேர்மை இருக்கிறது. இழிவாக எண்ண வேண்டாம். காரைத் துரத்துகிற நாய்களுக்கு ஒரு நாள் அதைப் பிடித்தவுடன் என்ன செய்வதென்றே தெரியாது. இது நாயின் குறையல்ல. சிறப்புத் தேர்ச்சியினால் வருகிற சிந்தனைக் குறைபாடு. கணா - 28/02/2018

Tuesday, February 27, 2018

சோசலிசம் பற்றிய லெனினின் பொய்கள் - 2


சோசலிசம் பற்றிய லெனின் பொய்கள் - 1 இன் தொடர்ச்சி இது. அந்த உரையாடல் பல தோழர்களின் தர்க்கக் குறைபாட்டினால் தொடர்ந்து திசைதிருப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  இது இந்தக் கூற்றுப் பற்றிய இன்னொரு சுருங்கிய விமர்சனம். இத்தோடு இதைக் கடந்து போய்விடுகிறேன்.

பதிவு 

மிகச் சுருக்கமாக லெனினுடைய கீழுள்ள கூற்றின் தவறைச் சொல்லுகிறேன். அதை மறுப்பவர்கள் என்னுடைய தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். என்னுடைய தவறுகளைச் சுட்டிக் காட்டுவது மட்டும் லெனினை நியாயப்படுத்துவதாகாது. இது எளிய தர்க்கம்.

இந்தக் கூற்றுப் பற்றிய விமர்சனத்தை லெனின் பற்றிய விமர்சனமாக்கி, லெனினுடய எல்லாப் பக்கங்களை உரையாடலுக்குள் கொண்டுவருவது பொருத்தமற்றதும், திசைமாற்றுகிற செயற்பாடும் ஆகும். எங்களுக்கு லெனின் முக்கியமல்ல. மானுட விடுதலையை விரைவுபடுத்துவதே முக்கியம். லெனினையும் மார்க்சையும் சரிபார்க்க அடிப்படையான கருவிகளை நாம் தேடிக் கைக் கொள்ள வேண்டும்.

//
உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப் போக்கிலே , தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக்கொள்ளும் பேச்சுக்கிடமில்லை.

ஆதலால், ஒன்றுதான் தேர்ந்தெடுக்க உண்டு.

முதலாளித்துவ சித்தாந்தம் அல்லது சோஷலிச சித்தாந்தம்.
நடுவில் எதுவும் கிடையாது.
#லெனின்.
//

தோழர்களில் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருப்பது போல இந்தக் கூற்றில் இருப்பது இரண்டு தத்துவங்கள்/சித்தாந்தங்கள் அல்ல.

மூன்று.

[தத்துவம் வேறு, சித்தாந்தம் வேறு என்று மறுபடி ஏதாவது திசைதிருப்பல் செய்ய வேண்டாம். எது தேவையோ அதுவே முதன்மைக் கூறாக வேண்டும்.]

சித்தாந்தம் ஒன்று: உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப் போக்கிலே , தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக்கொள்ளுவது

சித்தாந்தம் இரண்டு: தாரண்மைவாத அடிப்படைகளிலான முதலாளித்துவம்

சித்தாந்தம் மூன்று: லெனின் தனது புரிதலுக்கேற்ப இயங்கியலிலிருந்து ஆரம்பித்துக் கட்டமைத்த சோசலிச சித்தாந்தம்.

லெனினுடைய இயங்கியல் புரிதலும் ஏனையவர்களுடைய இயங்கியல் புரிதலும் ஒன்றல்ல. ஹெகல், டைஜட்சன் ( Joseph Dietzgen), மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ட்ரொஸ்கி,
ரோசா லக்சம்பேர்க், பிலேகனவ், ஸ்டாலின் கால நியமம், மாவோ (இன்னுமும் பலர்) என மிக நீண்ட பாரம்பரியமிக்க, வெவ்வேறு கோணங்கள், அடிக்கோள்களில் இருந்து எல்லாமும் இயக்கமாய், இயக்கப் பொருளாய் இருப்பதைக் கொண்டு சமூக வெளி மாற்றத்துக்கான சிந்தனைச் சட்டகங்களையும் அணுகுமுறைகளையும் ஆக்கினார்கள் . ஒவ்வொருவருடைய அணுகுமுறைகளிலும் புரிதல்களிலும் வேறுபாடுகள் உண்டு. அவ்விதம் இருப்பது இயங்கியல் பாரம்பரியத்துக்கு உகந்ததே.

நிகழ்வுப் போக்கில் "சித்தாந்தம் ஒன்று" ஏனைய இரண்டு சித்தாந்தங்களையும் மிக எளிதில் கடந்து போய் விடும் என்பதே எனது நிலைப்பாடு. அதுவே என்னுடைய விமர்சனம்.

எளிமையாக யோசித்துப் பாருங்கள். லெனின் என்கிற தனிமனிதர் இயங்கியலில் இருந்து ஆரம்பித்து வந்தடைகிற சோசலிச எண்ணக்கருக்களை விடவும், பல கோடி பாட்டாளிகள், பல நூறுவருசம் தனியாகவும் கூட்டாகவும் நிகழ்வுப் போக்குகளினூடு தொடர்ந்து திருத்தமடைகிற சித்தாந்தத்தை உருவாக்குகிற பொழுது அது லெனின் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் அவருடைய சிந்தனைகளை விடவும் மிகப் பரந்ததாக இருக்கும். அவருடைய இயங்கியல் புரிதலை விட விஞ்சிய இயங்கியல் புரிதலினூடு இது மிக எளிய சாத்தியம்.

லெனினுடைய கூற்று இந்தமுதலாவது சித்தாந்தத்தைப் போட்டியிலிருந்து விலக்கி வைக்கிறது. அப்படி வைக்காவிட்டால் தன்னுடைய மூன்றாவது சித்தாந்தம் கொஞ்சங் கூட நின்றுபிடிக்காதென்பதை லெனின் நன்கறிவார்.

இது அவருடைய அரசியல் பொய்.

உழைக்கும் மனிதர்கள் தனியாகவும் கூட்டாகவும் சித்தாந்தத்தை நிகழ்வுப் போக்குகளினூடு வளர்த்தெடுக்கவே நான் அழைக்கிறென்.

அதற்காகத்தான் நாம் ஒவ்வொருவரும் எங்களுக்கான நியமங்களை ஆக்கி, புறவயப்படுத்தி, பொதுவில் வைத்து, ஒருங்கிணைத்து (நிசமான) நட்பு-முரண்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறேன்.

'எங்களுக்கான நியமம்' என்பது அனைவரது நியமங்களிலிருந்தும் எடுத்தாண்டு, புதிய இணைப்புக்களினூடு வலிமையடைவதே. எங்களுக்கான நியமம் எல்லாருக்குமானதே. எல்லோரது நியமமும் எங்களுக்கானதே. அறிவு வெளியில் இதுவே பொதுவுடமை. இதுவே கீழிருந்து மேலான பேண்தகு இயக்கம்.

முரண்களைத் தீர்த்துக் கொள்வதென்பது மேம்பட்ட முரண்களை நோக்கித் தொடர்ந்து நகர்வதே.

மேம்பட்ட முரண்களை நோக்கி நகர்வதென்பது சிந்தனை வெளிக்குள் அதி வினைத்திறனுடன் முரண்களைத் தீர்த்துக் கொள்வதே.

சிந்தனையை அதன் உச்சத் திறனுக்குத் தொடர்ந்து நகர்த்த இயங்கியல் தர்க்கம் பயிலுங்கள் தோழர்களே.

சோசலிச இயக்கத்தை மழுங்கடிக்கிற கருத்துவெளி அதிகாரப் படிநிலைகள்

நான் ஏதோ 'பூட்டிய அறைக்குள்' இருந்து கொண்டு வெற்றுக் கருத்துக்களை, கற்பனைகளை எழுதுவதாக பல தோழர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னை லேகியம் விற்பவன், அக நிலைக் கருத்துமுதல்வாதி, பின்னவீனத்துவாதி, குட்டி முதலாளியவாதி, சாய்மனைக்கதிரை அறிவு சீவி என்றெல்லாம் மேம்போக்காகச் சொல்லிக் கொண்டிருப்பதால் பயனில்லை .

எங்கே என்னைத் தோழர் என்று அழைத்தால் தமது 'அறிவு' அதிகார வெளி பாதிக்கப்படுமோ என்று அஞ்சுகிற 'தோழர்களையும்' கடந்து வருகிறேன்.

கனக்கவெல்லாம் வேண்டாம், என்னுடைய இயங்கியல் அறிவைக் கொண்டு எட்டு மணிநேர வேலையை மூன்று நான்கு மணி நேரத்தில் முடித்து விட்டு எழுதிக் கொண்டிருப்பவன் நான். நான் எழுதுவதற்காக நான் என்னுடைய தனிப்பட்ட, குடும்ப நேரத்தைச் சுரண்டுவதில்லை.

நான் ஒப்பந்த அடிப்படையில் புலம்பெயர்ந்து வேலை செய்கிற மாசக் கூலி. என்னிடம் எட்டு அல்ல, பத்து மணி நேர வேலையை எதிர்பார்க்கிறார்கள்.

என்னுடைய சேவையை விற்கிற 'முதலாளி' நான். தொழிலாளி அல்ல என்கிறது 'ஒப்பந்த அடிப்படையின்' தத்துவம்.

இவற்றையெல்லாம் திமிறி நான் மிகத் தெளிவான சோசலிஸ்டாக இருக்கிறென்.

எல்லா முனைகளிலும், நடைமுறை வாழ்வியலிலும் இயங்கியல் அறிவைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிற என்னை 'கற்பனையில்' வாழ்வதாக இவர்கள் குற்றஞ் சுமத்துவது பொருத்தமற்றது.

என்னுடைய அறிவு எனக்கு வலிந்து தருகிற அதிகாரத்தை மிகக் கவனமாக உடைத்து, எனக்கான பின் தொடரிகள், என்னிடம் ஆலோசனை கேட்கிறவர்களை விரட்டுவதற்காக என்னுடைய அறிவைப் புறவயப்படுத்தி சட்டகம் போட்டுக் கொண்டிருப்பவன் நான்.

என்னுடைய அறிவு தருகிற அதிகாரத்தை உடைக்க நான் புறவயப்படுத்துகிற வேகம் அதிகமாக இருக்க வேண்டும். அதையும் நான் மிக விரைவில் எட்டி விடுவேன்.

அப்பொழுது மட்டுந்தான் நான் சோசலிச மனநிலையாளன். அல்லது நானும் ஒரு போலி.

எல்லாவித அதிகாரத்துக்கு எதிரானவர்கள் 'தோழர்கள்' என்று வாய்வார்த்தைக்குச் சொல்லுகிறவர்கள் என்னைத் தோழர் என்று அழைக்க விரும்பாமையை என்னவென்பது? இதில் எனக்கென்ன இழப்பு.

கடவுளைக் காண வேண்டும் என்று தினசரி பிரார்த்தனை செய்கிறவர்கள் கடவுளை உண்மையில் கண்டால் நடுங்கிச் சரிவது போல (கடவுள் ஒரு கற்பிதம்) நாள் தோறும் இடதுசாரி, சோசலிசம், தோழர் என்று அடுக்கிக் கொண்டிருப்பவர்கள்,

நிசமான சோசலிச மனநிலையைக் கண்டவுடன் பதறுவதும் பதுங்குவதும், புறக்கணிப்பதும், தோழர் எனத் தவறியும் அழைக்கக் கூடாதென்பதில் தெளிவாயிருப்பதுவும் நகைப்புக்குரியது.



தோழர்களுடன் நல்லதொரு உரையாடல்.கோர்வையாகப் பகிர்ந்து வைக்கிறென்.

//தோழர். உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி சிறப் பாக விளக்குவார். தாங்கள் லெனின் குறித்த விசயத்தை விளக்குங்கள் தோழரே.//
இந்த மனநிலைக்கு எதிராகவே நான் தொடர்ந்து எழுதுகிறேன் தோழர்.

நீங்கள் உங்களுடைய புரிதலை, அது எந்தளவுக்கு குறைபாடுடையதாக இருந்தாலும் உங்களுடைய சிந்தனையை முறையினூடு வெளிப்படுத்த முயல வேண்டும்.

இவ்விதம் இன்னொருவரைச் சார்ந்து இருப்பது கருத்துவெளியிலான அதிகாரப் படிநிலையாக்கம்.

இது சோசலிச மனநிலையாகுமா தோழர்?

பொருள் மூலம் மட்டுமல்ல, பொருளின் அதியுயர் வடிவமான சிந்தனையை (இற்றைத் தேதியில் அதியுயர்) வைத்தும் அதிகாரந் தேடலாம்.
அனைத்து வகை அதிகார இயக்கங்களை அடித்துத்தான் சோசலிசக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.

அவரவர் சுய புத்திச் சட்டகத்தை ஆக்கி திசைக்காக எவரிலும் தங்கியிருக்காதிருக்க வேண்டும். திசையைத் திருத்துகிற தகவல்களுக்குக்காக எதிலும், எவரிலும், அனைத்திலும் தங்கியிருக்க வேண்டும்.
என்னுடைய சிந்தனை பலப்படுகிற பொழுதும் என்னிடம் 'ஆலோசனை' கேட்பதற்கான கூட்டம் பெருகும். நான் விரும்பியோ விரும்பாமலோ அதிகாரம் என்னிடம் குவியும். எனக்கான பொதுவெளி பிம்பம் கட்டமையும்.
இதை உடைக்கிற பொறிமுறையைக் கையாளத்தவறினால் நான் ஒரு சோசலிச மனநிலையாளன் அல்லன். அதிகார விரும்பி.
அதனால்தான் நான் என்னுடைய சிந்தனையை முறையைப் புறவயப்படுத்தி பொதுவில் வைப்பதன் மூலம் என்னைப் பின் தொடர நினைக்கிறவர்கள், கருத்துத் தெளிவுக்காக என்னில் தங்கியிருப்பவர்களை, என்னிடம் 'ஆலோசனை' கேட்பவர்களை நான் வெட்டி விடுகிறேன். விரட்டி அடிக்கிறேன்.
நான் என்னுடைய அறிவைப் பெருக்குகிற வேகத்தை விடவும் புறவயப்படுத்தி என்னுடைய பிம்பத்தை அழிக்கிற வேகம் விஞ்சுகிற பொழுது மட்டுந்தான் நான் சோசலிசவாதி.
அல்லது அந்தப் போலி முகமூடியுடன் அதிகாரத்துக்காக அலைகிறவன் ஆகிறேன்.

// குறிப்பான சூழலில் குறிப்பான முடிவு என்பது தான் சரியான மார்க்சிய வழிமுறை,,,
வெறுமனே தர்க்கவியல் இயங்கியல் பார்வை என்ற கண்ணோட்டம் சரியானது அல்ல,,, //

 குறித்த சூழலில் குறித்த தீர்வுகள் என்று மேம்போக்காகச் சொல்லிக் கொண்டிருப்பது,

1. தான் எவ்விதம் குறித்த சூழலை இனங் கண்டு, அதிலிருந்து குறித்த தீர்வுகளை எடுக்கிறேன், அதற்கான கருவிகள், முறைகள், தத்துவங்கள் என்ன என்று அறியாத மனநிலை

2. அவற்றை அறிந்தால் புறவயமாக்கிப் பொதுவில் வைக்காதது அறிவை வைத்து அதிகாரந் தேடுகிற மனநிலை

அறியாமையும், அதிகார விருப்பும் சோசலிச மனநிலை அல்ல.

// எனது வயது இன்று ஐம்பது,,இன்னும் ஒரு வருடம் கழித்து ஐம்பத்தொன்று,,,பின்னோக்கி இருவருடம் சென்றால் நாற்பத்தெட்டு,,,
ஆக எனது வயது என்பது குறிப்பான சூழலில் மட்டுமே பொருந்தும் அதற்கு மேல் அல்ல,,,அதே போல் லெனினியம் என்பது சரி,,, சென்றால் //

 தோழர், குறித்த சூழமைவு (context), குறித்த பார்வை/தீர்வு என்பது வெளிப்படையானது. உரையாடலுக்கு உகந்ததல்ல.
குறித்த சூழலை இனங் காணுவதும், குறித்த தீர்வை வந்தடைவதற்குமான அணுகுமுறைகள், கருவிகள், சிந்தனைச் சட்டகங்கள் இவையும் இவற்றை முடிந்தளவு பொதுமைப் படுத்தல், புறவயப் படுத்தல், மிகக் குறைவான அடிக்கோள்களில் இருந்து ஆரம்பித்து மிக அதிகமான சூழமைவுகளை எதிர் கொள்ளல் இவை பற்றிய உரையாடலே இது.
உங்களுடைய வயது மாறி வருவதல்ல பிரச்சினை. அது எவ்விதம் மாறுகிறது, எதிர்வு கூறுவது எங்கனம் என்பதைத் துணியவே காலம், அதற்கான அலகுகளை உருவாக்குகிறோம்.
அந்ததந்தக் கால கட்டத்தில் அது அது சரி என்பது சரியான நிலைப்பாடல்ல.

மிகச் சரியானதை செய்ய முடியாததால் முடிந்ததைச் செய்தார்கள் என்பதுவும் சரியல்ல.

ஏன் மிகச் சரியானதைச் செய்ய முடியவில்லை என்று கேள்வி எழுப்பி, குறைபாடுகளை (மனித, தொழிநுட்ப, சிந்தனை அனைத்து) இனங் கண்டு முன்னேற திசையில் நகர்வதே சரியானது.
இந்த நிகழ்வுப் போக்கை மிக நுணுக்கிப் பார்க்க உதவுகிற, மிகப் பரந்த வெளிகளின், சூழமைவுகளினதும் பொதுப் பண்புகளையும் பொது வழிமுறையையும் வளர்த்தெடுக்க முடிகிற இயங்கியலும், அறிவியல், தர்க்க கருவிகளும் அவசியம்.
அவற்றைப் பற்றிய உரையாடலும் அதி முக்கியம்.



லெனின் தொடர்பான விமர்சனம் பற்றிய கேள்விக்கு...

/ /உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப் போக்கிலே , தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக்கொள்ளும் பேச்சுக்கிடமில்லை.//

நான் எழுதியது இந்தக் கருத்துக்கு எதிராகவே.
லெனின் இந்தக் கூற்றில் சோசலிசத்தையும் முதலாளித்துவத்தையும் ஒரே தட்டில் வைத்திருக்கிறார்.
ஒன்று வரைவு பட்டது. இன்னொன்று முதலாளியம் முதிர்ந்து வருகையில் வரைவுபட இருப்பது.
தொடர்ந்து வரைவுபடுவது.
முதலாளித்துவமும், சோசலிசமும் முழுமையாக நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது என்று அவர் சொல்லுகிறார்.
இந்தக் கூற்றின் தவறை இதற்கு மேல் என்னால் விளக்க முடியாது. லெனின் எழுதியது எல்லாம் சரி என்கிற அடிப்படைவாதப் போக்குக்கு எதிராக எழுதுவதே முதல் நோக்கு. லெனினிடமிருந்து எடுத்துக் கொள்ள பல விசயங்கள் இருக்கின்றன.

லெனினது முன்னணிப் படையின் முன்னணிப்படை (vanguard-ism) சிறப்புத் தேர்ச்சி அடிப்படைகளில் இயங்குவது.
இது ஒரு சமூக இயக்கமாக இருக்கும் பட்சத்தில் மிகச் சரியானதும் தேவையானதும். சமூகத்தை சோசலிசக் கட்டத்துக்குத் தயார்படுத்துவதாக அது இருக்கும்.
ஆனால் அரசியல் கட்சி, புரட்சி, அரச அதிகாரம், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்து சோசலிசத்தை வலிந்து வளர்த்தலுக்கு எந்தளவுக்கு உகந்த வழிமுறை என்பது உரையாடலுக்கு உரியது.
ஏனெனில் சிந்தனையைப் பற்றிய சிந்தனையை சிந்தனையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பது போல, சோசலிசத்தைப் பற்றிய அணுகுமுறையும் சோசலிசத்தைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கிறது. அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்கத் தயாரற்ற மக்கள் கடைசி வரையில் ஒரு அறிவுக் கூட்டத்தினரின் அடிமைகளாக, விளக்கமற்று தொடர்கிற அடிப்படைவாதிகளாக இருந்து விடுகிற சாத்தியமும் அதிகம்.
நான் லெனினையோ, ஏனைய தனிமனிதர்கள் எவரையுமோ எதிர்ப்பதில்லை (அவர்கள் என்னையோ என் அன்புக்குரியவர்களையோ தனிப்பட்ட முறையில் தாக்குகிற வரையில்). என்னுடைய பிரச்சினை லெனின், மார்க்ஸ் சொன்னவற்றை ஆய்வின்றி ஏற்கிற ஆபத்தான அடிப்படை மனநிலை பற்றியதே.
எல்லோருக்கும் தவறிழைக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். ஒருவர் தவறே இழைக்கக் கூடாதென்று எதிர்பார்ப்பது கருத்துவெளியில் அவர் மீது இழைக்கப்படுகிற பெரும் வன்முறை. லெனின் மீதான வன்முறையாகவும் இந்த அடிப்படைவாததைப் பார்க்கிறேன்.
ஒரு மானுட விடுதலைக்கான செயற்பாட்டாளரான லெனின் தன்னுடய கருத்துக்களை விளக்கமின்றி, ஆய்வின்றி ஏற்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார். அப்படி ஏற்றுக் கொள்கிறவராயிருந்தால் அவர் மானுட விடுதலைக்கான செயற்பாட்டாளரல்லர்.
லெனினிசத்தை, மார்க்சியத்தை எதை வைத்துச் சரிபார்க்கிறீர்கள் என்று கேட்டால் எனக்குப் பதில் வருவதில்லை.
இது வெளிப்படையான அடிப்படைவாதம். இதைத்தான் கடுமையாக எதிர்க்கிறேன். லெனினுடன் எனக்கு தனிப்பட்ட வாய்க்கால் தகராறு ஏதுங் கிடையாது.

// இயங்கியல் இயக்கவியல் என்ற சொற்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் தெளிவாக இல்லை.

இயங்கியலுக்கு சரியான இயற்கையே,,,

இயற்கை மற்றும் ஞமூகத்தின் பிரபலிப்பாக கருத்துக்கள் அமைகின்றன.
இயற்கையில் நடக்கும் மாற்றத்தை #இயக்கத்தை#புறநிலை_இயக்கவியல் என அழைக்கலாம். புற நிலை இயக்கத்தை அறிந்துணர்வது #அகநிலைஇயக்கவியல் எனலாம்.அந்த இயக்கம் புற நிலையின் பிரதிபலிப்பாக இருந்தாலும் #தன்னிலையாக இயங்கியலாக சிந்திக்கலாம்.
ஆனால் அது புற நிலை சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.தர்க்கபூர்வமாக கூட விளக்கலாம்.

இயற்கை சமூக இயக்கத்தை எதார்த்தமாக பிரதிபலிக்காத சூழலில் நமது அகநிலை இயக்கம் கற்பனையாக புனைவாக அமையக்கூடும்,

இதை சம்பிரதாய இயக்கவியல் மற்றும் தர்க்கவியல் என அழைப்பர்.

இப்படி தான் எதார்த்தை முழுமையாக பெரும்பான்மையாக பிரபலிக்காமல் அதில் ஒரு அல்லது சில கூறுகளை புற நிலை இயக்கத்தை கவனம் கொள்ளாமல் விளக்குவது நடக்கிறது.இந்தப் படிதான் கடந்த கலா மார்க்சிய ஆசான்களை பற்றிய மதிப்பீட்டை முன் வைக்கின்றனர்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி லெனினியம் பற்றி
ஏகாதிபத்தியம் பற்றி என சொல்லிக்கொண்டே போகலாம்.இப்படி விளக்குவது இடதுசாரி இயக்கத்தை குறுங்குழுவாதத்தில் அராஜகவாதத்தில் கொண்டு சேர்க்கும் நிலை ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது.,,, //

 மார்க்சிய ஆசான்கள் என்ற பதம் எதற்கு தோழர்? பழைய குருகுல முறைக்கு நாம் மீள்வது சரியல்லவே.

 ஆசான்கள், பேராசான்கள் போன்ற பதங்கள் அறிவு வெளியில் அதிகாரப் படிநிலைகளை ஏற்படுதுவது ஏற்படுத்துகின்றனவே. எல்லாவித அதிகாரங்களுக்கும் எதிரான பதம் 'தோழர்'. தோழர்களான நாம் ஏன் அறிவுக்காக அடுத்தவரை அண்ணாந்து பார்க்க வேண்டும்.

அறிவைப் பெறுவது எமது உரிமை அல்லவா. புதிதாக அறிய வாய்ப்புக் கிடைத்தவர்கள் அதைப் பதுக்காமல் பகிர்வது அவர்களது கடமையல்லவா? இதில் எதற்காக ஆசான் மரியாதை வருகிறது?

// எல்லா அதிகார மையங்களையும் எதிர்ப்போம் என்பது பின்நவீனத்துவ பதம்,,
நமது ஆசான் என
சொல்வது குருகுல மனப்பான்மை என்கிறீர்கள்,,,முன்னவர்கள் சொன்னதிலிருந்து பின்னவர்கள் வளம் பெறுவதும் தத்துவத்தை வளர்ப்பதும் தேவை தான்,,, //

 தோழர் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
அதிகாரத்தை அழிப்பதற்காகத்தான் (அதற்கு மட்டுமாகத்தான்) பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்பதே மார்க்சியம்.

மேற்பரப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் ஆன முரண்பாடு பதங்களிலும் உண்டு.

தேர்தல் முறை என்கிற சனநாயக மேற்பரப்பின் உள்ளடக்கம் பாராளுமன்ற, இருகட்சிச் சர்வாதிகாரமாக இருக்கிறது.

'பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்' என்பது மேற்பரப்பில் சர்வாதிகாரமாகத் தெரிந்தாலும் உள்ளடக்கம் கீழிருந்து மேலான உண்மைச் சனநாயகமாக இருக்கிறது.
இந்தக் கீழிருந்து மேலான உண்மைச் சனநாயகப் பொறிமுறையை விளக்குங்கள் என்று கேட்டால் 'பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார' கோசம் எழுப்புகிறவர்கள் பதிலளிக்கிறார்கள் இல்லை.
சோசலிசக் கட்டத்துக்கான இயக்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் ஒரே நோக்கம் கீழிருந்து மேலான உண்மைச் சனநாயக இயக்கத்தை நிறுவி அதிகாரத்தை உதிரச் செய்வதே.

இந்தப் புரிதல் இல்லாத, அதிகாரத்தைக் கைப்பறுவதை மட்டும் குறிக்கோளாக்கி, புரிதலை மழுங்கடித்துக் கொண்ட சிறப்புத் தேர்ச்சியால் பாதிப்படைந்த முன்னணிப் படையினரின் முன்னணிப்படையினர் மீதே விமர்சனத்தை முன்வைக்கிறேன்.

// தோழர் நீங்கள் கற்கனையாக பேசுகிறீர்கள்,,,கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் நோக்கி கருத்துக்கள் பரவ வேண்டும் தான்,,,
முன்னணி சக்திகள் மட்டுமல்ல எல்லோரும் எல்லாமே தெரிந்தவர்களாக இருக்க முடியாது.முன்னணியினர் செய்யும் தவறை சுட்டும் அளவிற்கு கீழ்மட்டத்தில் உள்ளவரை தயார்படுத்த முடியாத நிலை தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் செயலற்று போக காரணம். //

 கருத்துக்களின் முதன்மை இயக்கம் மேலிருந்து கீழ்.
பேண்தகு செயலின் முதன்மை இயக்கம் கீழிருந்து மேல்.
ஆனால் மேலிருந்து கீழ்பாயும் கருத்து இயக்கம் அதிகார இடைமுகங்களினூடு (ஆசான், குரு, அறிவு அதிகாரி) பாய்வது அதிகார, பிழைப்புவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் ஒருங்கே அதிகரித்து வரும். வினைத்திறன் வெகுவாகக் குறையும்.

அதே போல் செயற்பாட்டை, சனநாயகத்தை கீழிருந்து மேலாக விதைக்காது விடின் (வேலைத்தள சனநாயகம்) அதுவும் வினைத்திறன் அற்ற அதிகாரம் மையங்களுக்கே காலப் போக்கில் வழிகோலும்.
எதைக் கற்பனை என்று சொல்லுகிறீர்கள் தோழர்?

  //தவறை சுட்டும் அளவிற்கு கீழ்மட்டத்தில் உள்ளவரை தயார்படுத்த முடியாத நிலை தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் செயலற்று போக காரணம்.//

இதற்கான தீர்வு வழிகளைதான் நான் மேலே முன்வைத்திருக்கிறேன்.

// இயற்கையான மாற்றமே கீழிலிருந்து மேல் தான்,,,அந்த மாற்றம் உணர்வற்றது.
உணர்வுபர்வமாக மாற்ற வேண்டும்.மேலிருந்து கீழ்
கீழிலிருந்து மேல் இரண்டும் இருக்க வேண்டும்,,,
ஆசானாக இருப்பதற்கு மாணவனாக இருக்க வேண்டி உள்ளது ஆசானாக மாற மாணவனாக இருக்க வேண்டி உள்ளது. இதில் எந்த ஒன்றை மட்டுமே அழுத்தம் தர முடியாது,, //
 தோழரே, இயங்கியல் அடிப்படைகளில் ஒன்றைச் சொல்லுவது அதன் முரண் கூறையும் சேர்த்தே சுட்டுகிறது.
ஒவ்வொரு கருத்தும் அதற்கு எதிரானவற்றையும் சேர்த்தே உருவாக்குகிறது.

ஆசான் -- மாணவர் என்பது ஒவ்வொருவரும் தாமே தமக்கு ஆசான் (பொதுப்பாலில் கொள்க) , மாணவராக இருக்கிற சிந்தனை வெளியைக் கொள்கிற கட்டமாக இருக்க வேண்டும்.
ஒருவர் இன்னொருவருக்கு மாணவராகவும் பிறிதொருவருக்கு ஆசானாகவும் (பொதுப்பாலில் கொள்க) இருக்கிற நிலையையே அதிகாரப் படிநிலை, வினைத்திறன் குறைந்தது என்கிறேன்.
நாம் தோழர்களிடையே திசைக்காக எவரிடமும் தங்காத, தானே தனக்கு ஆசான், மாணவராய் (பொதுப்பாலில் கொள்க) இருக்கிற சிந்தனையை அடையச் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
அவர்களை சரியோ தவறொ சுயமாக எழுத (மார்க்சிய மூலவர்களின் கருத்துக்களை எடுத்தாண்டு, தமது விளக்க நிலைக்கேற்ப) விட வேண்டும்.
காலப் போக்கில் தனியாகவும் கூட்டாகவும் தொடர்ந்து திருத்தமடைய இதுவே உதவும்.
இதுவே சிந்தனைத் தெளிவைப் பேரியக்கமாக வளர இடமளிக்கும்.

இறுக்கி வைப்பது தவறு. தவறிழைக்கிற சுதந்திரம் எவருக்கும் உண்டு. நீங்கள் சொன்னது போல கீழிருந்து மேலானதே இயற்கையான போக்கு.
கீழிருந்து மேலான செயலறிவினூடே நாம் கோட்பாடுகள் ஆக்கி மேலிருந்து கீழாகவும் சிந்திக்கக் கற்றுக் கொண்டோம்.

// பின்நவீனத்துவாதிகள் தாக்கத்தோடு பேசுகிறீர்கள்,,,
விரிவாக பேசுவோம்,,, //
நான் பின்னவீனவாதிகளின் தர்க்கத்துடன் பேசவில்லை.

நானும் நீங்களும் ஒத்த அடிப்படைகளிலிருந்தே உரையாடுகிறோம் (கீழிருந்து மேலான இயக்கத்தின் முதன்மையில் ஒன்றுபடுகிறோம்).

ஆனால் நீங்கள் ஆசான் மாணவர்தான் சரி, அப்படித்தான் இருக்க முடியும் என்று முரண்பட்ட கருத்தை முன்வைக்கிறீர்கள்.

இங்குதான் நான் முரண்படுகிறென்.

பின்னவீனத்துவ அணுகுமுறையை என்னோடு குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.
அது எல்லாவித அதிகார மையங்களுக்கு எதிராக காலம் முந்தி இயங்கி இருக்கிற அதிகார மையங்களைக் கட்டிக் காக்கிறது.

நான் சொல்லுவது இருக்கிற அதிகார மையங்களுக்கு எதிராக இயங்குவது புதிய அதிகாரமாயிருக்காத உள்ளார்ந்த பண்பை தத்துவ, செயல் ரீதியாக விளங்கி உள்ளெடுக்க வேண்டும் என்பது.

இதைச் செய்யாது விட்டால். அடுத்து அதிகாரமேறுகிற தரப்பும் இன்னொரு சமூகப் புரட்சியை வளர்த்தெடுக்கும்.

அதிகாரத்தை அழிக்கிற பொறிமுறையை உள்ளெடுக்காத, தன்னைத்தானே உதிரச் செய்கிற திசையில் நகராத அதிகாரத்தை எதிர்க்கிற சக்திகள் மானுட விடுதலைக்கானவை அல்ல. 

Saturday, February 24, 2018

வரிப்படங்களின் வழி என்னுடைய இயங்கியலை நியமப்படுத்தல் - 1


விரிவான அறிமுகம் (இணைப்பு )

நேரடியான தத்துவப் பரிச்சயம் உள்ளவர்களுக்கான பதிவு (இணைப்பு ) அல்லாதவர்கள் இந்தப் பகுதியை வாசித்து, யோசித்து, சிந்தனை முறையை ஆக்கிக் கொண்டு இதை வாசிப்பது சரியாக இருக்கும்.


இந்தப் பதிவு பழைய இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படையான 'முரண்களில் இருந்து இயக்கம்' என்பதைக் கொண்டு எழுதப்பட்டது. இலகுபடுத்தும் நோக்கில் இது நடந்தது. முரணில் இருந்தே இயக்கம் என்பதை எம்முடைய புதிய இயங்கியல் உடைத்து, முரணிலிருந்து மட்டுமல்ல, இயக்கத்திலிருந்தும் இயக்கம் உருவாகும் அதுவே நோக்குகளான மனிதர்கள் முதலியவற்றுக்கு முக்கியமான இயக்கம் என்பதையும் காட்டிவிட்டது. இந்தப் பதிவு அடிப்படைப் புரிதலுக்கு மட்டுமே. 



அறிமுகம்


முழுமை என்பது அதற்கான திசையில் தொடர்ந்து இயங்குதலாகும்

என்னுடைய நியமத்தைப் புறவயமாக்கி பொதுவில் வைக்கிறேன்.

இதுதான் சரி என்று எதையும் திணிக்கும் நோக்கு எனக்கு இல்லை.

இவ்விதமே பலரும் தமது சிந்தனை முறைகளை முடிந்தவரை புறவயமாக்கி, வெளிப்படையாக பொதுவில் வைப்பதன் மூலம் நாம் கூட்டாக மிகத் திருத்தமான சிந்தனை முறைகளுக்கு வந்தடையலாம்.

அவற்றையும் இடைவிடாது புதுப்பித்துக் கொண்டுமிருக்கலாம்.

சோசலிச தத்துவ இயக்கத்தை விஞ்ஞானமாக்க எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான். வேறு இருந்தால் எனக்கு விளக்கி உதவலாம்.

வெறுமனே தத்துவ விதிகளை அன்றி அந்த விதிகளை எவ்விதம் படிப்படியாக உருவாக்குவது என்பதையும் செய்முறையாகவே விளக்கி  எழுதியிருக்கிறேன்.

ஒவ்வொருவரும் தமக்கான தத்துவங்களை உருவாக்கி பொதுவில் வைத்து, இணைத்தே நாம் பேண்தகு சோசலிசக் கட்டத்தை அடைய முடியும்.

தவறுகளைத் திருத்திக் கொள்ளுதல் 



சில வருடங்களுக்கு முன்பாக என்னுடைய துணை நிலாவுடன் உரையாடுகையில் ' காகம், அன்னம் இவற்றில் பிடித்த பறவை' எதுவெனக் கேட்டார்.

நான் 'அன்னம்' என்று சொன்னேன்.

காரணங் கேட்டார்.

'பாலைத் தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்கிற' (கற்பனைப்) பாத்திரமாகிய அன்னத்தை நல்லதை தேடி எடுத்துக் கொள்வதால் பிடிக்கும் என்றேன் (எடுகோள்: பால் தண்ணீரிலும் நல்லது).

'எல்லாவற்றிலிருந்தும் நல்லதை எடுத்துக் கொள்வது ஒரு மோசமான செயல் அல்லவா?'- கேட்டார்.

தொடர்ந்து சொன்னார்.

"எனக்குப் பிடித்தது காகம். பிடித்த பறவை என்று பொதுவாகக் கேட்டாலும் காகம்தான். அதுதான் சமூகத்துக்கு உகந்த இயக்கத்தை ஆற்றுகிறது."

அந்தக் கேள்வி பதிலில் இருந்து நான் பல விசயங்களைப் புரிந்து கொண்டேன். ஒவ்வொன்றிலுமிருந்தும் நான் பலதைப் புரிந்து கொண்டுதான் என்னுடைய அறிவியக்கத்தை மிக பலமுள்ளதாக அமைத்துக் கொள்ளுகிறேன்.

1. சரி, தவறு என்பது சூழமைவு சார்ந்தது. நான் கருத்துவெளியில் சரியானதைச் சொன்னேன். நிலா சமூக வெளியில் சரியானதைச் சொன்னார்.

2. புறவெளியிலும் என்னுடய கருத்து சரிதான். ஆனால் அந்தப் புறச் செயற்பாட்டை சமூகக் கண்ணோட்டத்துக்கு உட்படுத்துகிற பொழுது அது தவறு. நிலா சொல்லியது போல நல்லதை மட்டும் உறிஞ்சிக் கொள்வது சமூகக் கண்ணோட்டத்தில் மோசமான செயல்.

3. புறச்செயற்பாடுகளைச் சமூகக் கண்ணோட்டத்தில் பார்ப்பது பொருத்தமானது. இந்தச் சமூகக் கண்ணோட்டத்தை வளர்க்கிற திசையில் கருத்து வெளியை (சிந்தனையை)  கவனமாக நகர்த்துவதே சரியானது.

4. என்னுடைய அதிகப்படியான உய்த்தறிதல்களை நான் குறைத்துக் கொள்ள வேண்டும். பாலையும், தண்ணீரையும் பிரித்து எடுக்கிற புறச்செயற்பாடு எனக்குக் கருத்து வெளியை (மட்டும்) நினைவுபடுத்துகிறது என்றால் என்னுடைய சிந்தனை அகவயப்பட்டிருக்கிறது. அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.  அதற்கான வழிமுறைகளையும் உருவாக்கினேன். தொடரில் பார்க்கலாம்.

5. இந்தப் பாய்ச்சல் உரையாடுகிற எதிர்த்தரப்பைக் குழப்பி விடும். நல்ல உரையாடல்களுக்கு உதவாது. இன்னுமும் எனக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது.

6. மிகச் சின்ன விசயங்களிலிருந்து நாம் மிகப் பெரிய விசயங்களை ஆக்க முடியும். ஆக்குகிறோம்.

7. சரி தவறு சூழமைவு சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்கிறோம். குறித்த சூழல், குறித்த பார்வை/தீர்வு. ஆனால் சூழமைவு சார்ந்ததே தீர்வு என்று புரிந்து கொள்வதன் மூலம் ஒரு உள்ளார்ந்த அடுக்கேற்றத்தை நிகழ்த்துகிறோம். எல்லாச் சூழமைவுக்கும் பொதுவான ஒரு விசயத்தை அறிந்தவர்கள் ஆகிறோம்.

8. எல்லாவற்றுக்குமான பொதுப்பண்புகளை இவ்விதம் அறிவது அறிவின் புதிய தளத்தைத் திறக்கும். அறிவு பற்றிய அறிவு போன்ற சுயமுன்னேற்ற, அடுக்கேற்றத் தளங்களைப் பற்றிய மிக வீரியமான இயங்கியல் அடிப்படைகளையும் தொடரில் பார்ப்போம்.

9. தவறுகளை ஏற்று, வெளிப்படுத்தி, தொடர்ந்து திருத்தமடைகிற நோக்குடையவர்களுக்கே இந்தத் தொடர். ஏனையவர்களுக்குப் பயனற்றதும் மன உளைச்சலை ஏற்படுத்துவதுமாக இருக்கும். ஆகையால் தவிர்க்கவும்.

10. நான் எழுதுவதைக் காட்டிலும் எழுதாமல் விடுபவையே அதிகம். ஆகையால் வாக்கியங்களோடு தங்கி விடாமல், தேங்கி விடாமல் என்னுடைய சிந்தனை முறையை அறிந்து அதைக் காட்டிலும் சிறப்பான சிந்தனை முறையை அடைய வேண்டுகிறேன். முடிவுகள் மட்டுமல்ல, முறையும் தொடர்ந்து மாறிவரும், வர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

11. அவரரவருக்கு வேண்டியளவுக்கு நேரமெடுத்து இயங்கியல் முறையை புரிந்து கொண்டு என்னுடன் உரையாட முனையுங்கள். அல்லது என்னுடைய நேரத்தைச் சுரண்டுகிற, உழைப்பைச் சுரண்டுகிற செயற்பாடாக அது இருந்து விடும்.


தத்துவச் சிந்தனை


தத்துவச் சிந்தனை பரும்படியானது. இறுக்கமாக உதாரணங்களை, குறித்த விசயங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ளாமல் மிகப் பரந்த சிந்தனை முறையாக அதை அணுகி அங்கிருந்து திட்டமான விசயங்களை நோக்கி நகர வேண்டும்.

கீழுள்ள வரிப்படத்தில் (1) கருத்துக்கள் புள்ளிகளாக இருப்பின், அல்லது மூளையின் சேமிப்புப் பொதிகளாக இருப்பின் கணித விஞ்ஞான இயக்கம் இறுக்கமாக, தெரிந்த படிமுறைகளிலிருந்து அடுத்தடுத்தவற்றைக் கோர்ப்பதாக இருக்கும் (more focused). தத்துவம் மிகப் பரந்த (more diffused) சிந்தனை.




                                                         தத்துவச் சிந்தனை   (1)



கலை, படைபாற்றலே ஆகவும் பரந்த, கட்டுப்பெட்டியில்லாத சிந்தனை என்கிற தப்பபிப்பிராயம் உண்டு. அல்ல, தத்துவம் கலையை விடவும் பரந்த சிந்தனையில் விஞ்சியிருக்கும்.

அத்தோடு, கணித விஞ்ஞானமென்றால் குவிந்த பார்வை மட்டும், தத்துவம் கலை என்றால் விரிந்த பார்வை மட்டும் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு கருத்தும், இயக்கமும் தமக்கு 'எதிரானவற்றையும்' தோற்றுவிக்கும் என்பதையும் பார்க்கவிருக்கிறோம்.

நான் இதற்கு இன்ன பண்பு என்று சொன்னால் அதற்கு அந்தச் பொருத்தச் சூழமைவில் அது ஆதிக்க/முதன்மைப் பண்பு என்றுதான் கொள்ள வேண்டும்.

இந்தப் பதிவின் முதன்மைப் போக்கு தத்துவம். அதனால் நான் விஞ்ஞானம் என்று சொல்லுவதை இயற்கை விஞ்ஞானம், தர்க்கம், கணிதம், தொழிநுட்பம், விஞ்ஞான பூர்வமான அரசியல், கோட்பாடாக்கங்கள் இவ்வாறான படிநிலைகளாக புறவயப்படுத்தக் கூடிய அனைத்தையும் உள்ளடக்குகிற ஆகவும் பரந்த கருத்தாகக் கொள்ள வேண்டும்.




கீழிருந்து மேலான விஞ்ஞான இயக்கத்திலிருந்து கிடைக்கிற 'தகவல்களை' வைத்துக் கொண்டு திசை தேடிப் பாய்வதே தத்துவ இயக்கம்.  அது பரும்படியாக இருக்கும். புள்ளிக் கோடுகளில் குறித்திருக்கிறேன்.  விஞ்ஞானத்தைக் காட்டிலும் முந்தியோடுவதாக எப்பொழுதும் இருக்கும்.  அதனால் மேலிருந்து கீழாக விஞ்ஞானத்தையும் பார்த்து ஆராய்கிற பலத்தையும் தத்துவம் பெறுகிறது.


தத்துவ உருவாக்கம் 


மிக அதிக வெளிகளை ஆள வேண்டும் என்பதே தத்துவ உருவாக்கத்தின் அடிநோக்கு.

ஒரு தத்துவத்தை விட இன்னொரு தத்துவம் மேம்பட்டதெனின் முன்னையதைக் காட்டிலும் அது பல சூழமைவுகளை விபரிக்க வேண்டும். முன்னையது விபரிக்கிற அனைத்தையும் தானும் விபரித்து அதற்கு மேலும் உள்ளிணக்கத்தோடு விபரிக்க முடிகிற பொழுது பின்னைய தத்துவம் முன்னையதை வென்று விடுகிறது.

உதாரணத்துக்குப் பின்னவீனவாதத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் அதனால் ஆளுகிற எல்லாக் கருத்தியலையும் எங்களுடைய தத்துவம் ஆளுகிறது, அதற்கு மேலும் ஆளுகிறது, திருத்தம் கூடியது என்று காட்டியாக வேண்டும்.

'தோற்கடித்தல்' என்பது அழித்தல் அல்ல. அதற்குரிய வெளிகளுக்குள் அதை மட்டுப்படுத்துவதாகும். எல்லாவித கருத்துக்கும், தத்துவத்துக்கும் பொருத்தமான வெளி உண்டு. அதனால் மட்டுந்தான் அவை உருவாயிருக்கின்றன. பொருத்தமற்ற வெளிகளிலான பிரயோகமே பிரச்சினையானது. நமது அறிவியக்கம் பொருத்தமான வெளிகளுக்குள்
பொருத்தமான தத்துவங்களை முடக்கி போடுவதற்கானது.

எதனாலும் முடக்க முடியாத தத்துவங்களைத் தேடுகிறோம்.

எமது தத்துவத்தின் எல்லைக் கோடுகளை மிக அகலமாகப் போட்டுக் கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு பதத்துக்கும், வாக்கியத்துக்கும் ஆகவும் பரந்த விளக்கத்தைக் கொள்ளுங்கள். சரியான திசையில் அது கோர்வையாக இருப்பதுவும் அவசியம்.

உதாரணத்துக்கு  "அகலமாக" என்றால் இருபரிமாணத்தில் என்று அல்லாமல் எத்தனை பரிமாணத்திலும் அந்தப் பெரிய வெளியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

மொழி மிக மட்டானது. அதனால்தான் முடிந்தளவுக்கு வரிப்படங்கள் போடுகிறேன்.

சரி, என்னுடைய தத்துவத்தின்  எல்லைக் கோடுகளை மிக அகலமாகப் போட்டுக் கொள்ள வேண்டும்.

எப்படி?

எல்லாவற்றுக்குமான பொதுத்தன்மையைக் கண்டறிந்தால்தான் ஆகவும் பெரிய எல்லைக் கோடுகள் கிடைக்கும்.

எல்லாவற்றுக்குமான பொதுத்தன்மை என்றெல்லாம் ஏதாவது இருக்கிறதா?

இருந்தால் அது எது?

இந்தக் கேள்வியினூடுதான் எல்லா வலிமையான தத்துவங்களும் உருவாகின்றன.

எல்லாவற்றுக்குமான பொதுத்தன்மை என்பதை 'ஆய்வு' ரீதியாக நிரூபிக்க முடியாது. எல்லாவற்றையும் நேரடியாகத் தெரிந்து கொண்டோம் என்றும் சொல்ல முடியாது.  விஞ்ஞானமும் பொதுப்பண்பு தேடுகிறது. தத்துவமும் தேடுகிறது. ஆனால் தத்துவம் முந்திப் பாய்கிறது. தவறாகிப் போகிற தன்மை தத்துவத்துக்கு அதிகம்.  ஆனால் அதற்கு விஞ்ஞானம் மாற்று அல்ல. அதனால்தான் தத்துவ இயக்கம் விஞ்ஞானத்தால் முழுவதுமாகத் தோற்கடிக்கப்பட முடியாததாக இருக்கிறது.



எல்லாவற்றுக்குமான பொதுத்தன்மை இருக்கிறதா என்பது நிரூபணமாகாத ஒன்று.  அதற்காக முயற்சி செய்து பார்க்காமல் இருக்க முடியாது - இது நான் கீழே விபரிக்க இருக்கிற இயங்கியலின் பூச்சிய விதி சார்ந்த முடிவு. 

சித்தார்த்தன் (புத்தர் என்றும் சிலர் சொல்லுவார்கள்) எல்லா உயிர்களுக்கும் பொதுவாக வலியை முன்வைத்துத் தத்துவத்தை ஆக்கினார்.

எல்லாவற்றுக்குமான அடிப்படை 'கருத்து', 'கடவுள்', 'கர்மா' இப்படியும் பல தத்துவங்கள் இருக்கின்றன.

தத்துவங்களால் ஈர்க்கப்பட்டுப் அதை எடுத்து ஆளுகிறவர்களை விடவும் பின் தொடரிகளும் அமைப்புக்களினூடு அடிமைப்படுத்தப்பட்டவர்களுமே மிகப் பெரும்பான்மை.

எல்லாத் தத்துவங்களைத் தேடி அறிந்து அவற்றில் மிகப் பொருத்தமானதை தெரிந்து, விளங்கி, உபயோகப்படுத்துவதென்பது இன்னுமும் மனிதவரலாற்றுக் கட்டத்தில் நடந்தேறாத நிகழ்வு. ஒரு சிலருக்கு வாய்த்திருக்கலாம். புறக்கணிக்கத்தக்க அளவினர் அவர்கள்.

இருக்கிற எல்லாத் தத்துவத்தை விடவும் அதிகூடிய பரப்பை ஆளுகிற, மிகப் பெரிய எல்லைகளைக் கொண்ட தத்துவத்தை எங்கனம் நாம் உருவாக்குவது?

ஆகப் பெரிய எல்லைக்கான பொதுத்தன்மை, அப்படி ஏதாவது இருந்தால் அது என்ன??


இயங்கியலின் பூச்சிய விதி 


இயற்கையிலிருந்து தனித்த, நோக்குள்ள (தன்னுணர்வுள்ள) கூறு (உ+ம் மனிதர்கள்)  தன்னை மேம்படுத்திக் கொள்ள இயற்கையை மாற்றியமைப்பது  தவிர்க்க முடியாத இயக்கம்.

இயற்கையிலிருந்து 'தனித்திருப்பதால்', அதாவது வேறுபடுத்திக் கொள்ள முடிவதால் (தன்னுணர்வு,  இயற்கையை ஆராய்கிற பண்பு உள்ளார்ந்தமாயிருக்கும். நோக்குள்ளது  என்பதால் இயற்கையை தனது நோக்குக்கு ஏற்றபடி வளைப்பதும் உள்ளார்ந்த பண்பு.

இந்தப் பூச்சியவிதியை ஒரு  கூறியது கூறலாக (tautology, or may be it's truism, which states no 'interesting' new fact) அமைத்திருக்கிறேன்.

இதை உடைக்கும் வழிவகைகளும் உண்டு. அதற்கு இயற்கையிலிருந்து தனித்த, நோக்குள்ள கூறு இயற்கையைப் பாதிக்காமல் இருக்க முடிந்த சாத்தியத்தை எதிர் தத்துவம் விளக்க வேண்டும்.

மேம்படுத்திக் கொள்வதென்பது பொருள் (உடல்) சார்ந்தும், சிந்தனை சார்ந்தும் இருக்கலாம். பொருள்முதல்வாதத்தை இது வலியுறுத்தவில்லை. உடலில்லாத சிந்தனை ( transcendentalism etc) இது அவசரப்பட்டு மறுக்கவில்லை.

இயங்கியலிருந்து ஆரம்பிப்போம். பொருள்முதல்வாதம் தேவையா என்பதை தத்துவ வளர்ச்சிப் போக்கில் விளங்கி இணைப்போம். 

மேற்படி 'இயற்கையை மாற்றியமைப்பது  கட்டாயம்'  தவிர இப்போது எங்களிடம்  எந்த முன்முடிபும் இல்லை.

இந்த 'முன்முடிபும்' உள்ளார்ந்தமாயிருக்கிறது, வேறு வழியற்ற நிலையில் கட்டாயமாயிருக்கிறது என்பதே இப் பூச்சியவிதி.

ஏனைய எடுகோள்களையும், கருதுகோள்களையும் இந்த விதி சார்பாகவே அமைக்கிறேன்.

ஆகக் குறைந்த அடிக்கோள்கள்/விதிகளில் இருந்து ஆகக் கூடியதை விளக்கவே இந்த முன்னெடுப்பு.

இந்த விதி எனக்கு மிக முக்கியமானது.


பூச்சிய விதியின் இயக்கம்


இயற்கை/அண்ட இயக்கத்திலிருந்து தனித்த கூறுகளான நாம் (மனிதர்கள் ஒரு உதாரணந்தான், இலகுக்காக அதையே எடுக்கிறேன்),

சூழலை அவதானிக்கிறோம். ஆய்வு செய்கிறோம். சூழலைப் பற்றி முடிவுகள் எடுக்கிறோம். அதை உறுதிப்படுத்துகிறோம். மறுபடி முயல்கிறோம். எதிர்வு கூறுகிறோம். திட்டமிடுகிறோம். தோல்விகளிலிருந்து கற்றுக் கொண்டு திருத்துகிறோம். நாளாந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் இதைச் செய்து கொண்டுதானிருக்கிறோம்.

எதையும் 'முழுமையாக' விளங்கிக் கொண்டுதான் அதைப் பயன்படுத்த முடியும் என்பதில்லை. தெரிந்ததை பயன்பாட்டுக்கு எடுக்கிறோம். பயன்படுத்துகிற போக்கில் அதிகம் தெரிந்து கொள்கிறோம்.

குழப்பத்தில் ஒழுங்கு பிடிக்கிறோம். கீழிருந்து மேலான செயலறிவினூடு அமைப்புக்கள், கோட்பாடுகள் ஆக்குகிறோம். அமைப்புக்கள், கோட்பாடுகள் வழி மேலிருந்து கீழாக புற, சிந்தனை வெளிகளில் இயங்குகிறோம்.

இது பின்னிப் பிணைந்திருப்பதையும் தொடர்ந்து மாறி மாறி, வேறுபிரித்தறிய முடியாத வகையில் நடப்பதையும் அவதானிக்கிறோம்.

இந்தப் போக்கை அவதானித்து நியமமாக்கி விஞ்ஞான முறையைத் தருவித்து பெருமெடுப்பில் இயற்கையை ஆய்கிறோம்.

தத்துவம் என்பது ஆகக் கூடிய சூழமைவுகளுக்குப் பொதுவானதை அறிவதற்கானது.

விஞ்ஞானத்தின் "நோக்கு" இதற்கு "எதிரானது".

தத்துவம் அதிகளவு வெளிகளை ஆளுகிற 'நோக்குடைய' இயக்கம்.
விஞ்ஞானம் ஒவ்வொரு 'தத்துவத்தையும்' (கருதுகோள்) அதற்குப் பொருத்தமான வெளிகளுக்கு மட்டுப்படுத்துவதற்கான புறவய  இயக்கம். 

"நோக்கு" பற்றிய விபரணம் பிற்பாடு.

தத்துவம் விஞ்ஞானம் இரண்டையும் இணைத்தே என்னுடைய நியமத்தை ஆக்கியிருக்கிறேன். இரண்டையும் தனித்தனியாகவும் சேர்த்தும் தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியம்.

விஞ்ஞானம் பற்றிய ஆழமான பதிவுகளுக்கு.

இயங்கியலைக் கொண்டு விஞ்ஞானத்தை வரையறுத்தல் 

இயங்கியலில் இருந்து ஆரம்பித்தல்



இயங்கியலின் எல்லை 

எல்லையை மிக அகலமாகப் போட்டுக் கொள்ளுகிற விழைவு ஒரு அட்டகாசமான விசயத்தைக் கண்டறிகிறது.

எல்லையை நாம் ஏன் விலகி நகர்த்திப் பெருப்பிக்க வேண்டும், அதற்காகத் தலையை உடைக்க வேண்டும்? அந்தப் பொறுப்பை எல்லையிடமே உள்ளார்ந்ததாய், அதனியல்பாய் கையளித்துவிட்டால் என்ன? 

எல்லையே விலகி நகர்வதாக இருந்தால்?

இயக்க எல்லையாக இருந்தால்?





 

இயற்கை/அண்டத்தின் அனைத்துக் கூறுகளுக்கும் பொதுவான பண்பு இயக்கம் என எடுப்போம். 

இயக்கவெளியை ஆளுகிற தத்துவமாக எனி இதை வளர்த்தெடுப்போம். 

இயக்க வெளிக்கு வெளியில் என்ன இருக்கிறது? அதைப் 'படைத்தது' எது?

படைத்தது, தோற்றுவித்தது, உருளவிட்டது எல்லாமே இயக்கங்களாக (வினைச் சொற்களாக) இருப்பதை கவனிக்கிறோம்.

'படைக்கிற' செயற்பாடு என்று ஒன்றிருந்தால் அது இயக்கவெளிக்குள் வந்து விடுகிறது. அதாவது இயங்கியலின் இயக்க எல்லை "படைப்பாளியை" விரட்டியடித்துக் கொண்டே இருக்கிறது. 

'படைக்கிற' செயற்பாடும் இயக்கவெளிக்குள் வந்துவிடுவதால் அதையும் இயங்கியல் இந்த அடிக்கோளின் படி ஆளவேண்டும்.

இந்த அடிக்கோள் 'இயக்கவெளியாகிய  அண்டத்தின் படைப்பை' தர்க்கரீதியாக மறுத்து விடுகிறது. 

இயக்கம் இல்லாத ஏதேனும் ஒரு கூறைக் கண்டறிகையில் (பொருள், சிந்தனை அல்லது வேறு எதுவாயினும்) இந்தத் தத்துவம்/அடிக்கோள்  தோற்கும். 

இந்தக் 'கண்டறிகிற' செயற்பாடும் வினை/இயக்கம். 

இயக்கத்தினூடாக மட்டுமே அதை அடைய முடிவதால் அதை 'வந்தடைகிற'  வழிகள்/பயணத்தையும்  இயங்கியல் ஆளத் தொடங்குகிறது.

இயக்கவெளிக்கு அப்பால் என்ன இருந்தாலும் அது அண்டத்தில் தோன்றிய, தனித்த நோக்குள்ள ஒரு இயக்கக் கூறுக்கு தொடர்பற்றதாகவும், அந்த இயக்கக் கூறினால் எதையுமே அனுமானிக்க முடியாததாகவும், அடைய  முடியாததாகவும் (அடைவதும் அனுமானிப்பதுங் கூட வினையே) இருக்கிறது.

இயக்க எல்லை இவ்விதம் வளர்ந்து செல்கிறது.

இந்த எல்லையை சதுரம், வட்டம், நீள்வட்டம் என்று வரையாமல் உருவற்று வரைந்திருக்கிறேன். எதையும் இறுக்கிக் கொள்ள வேண்டாமென மறுபடி வலியுறுத்துகிறேன். 



இயக்க எல்லைகளுக்குள் இருப்பவை? 

இயக்க எல்லையை வகுத்து, அனைத்துக்கும் அடிப்படையாக இயக்கத்தைக் கொண்டவுடன் ஒரு உற்சாகம் வருகிறது. 

ஆகவும் பரந்த தத்துவம் உள்ளார்ந்த பண்புகளோடு உருவாவதை உணர முடிகிறது. 

இயக்க வெளிக்கு (இயக்க) எல்லை போட்டாயிற்று. இந்த எல்லைகள் அடைக்கும் வெளியை நிரப்புகின்ற உள்ளடக்கம் பற்றிச் சிந்திக்க ஆரம்பிப்போம்.

இயக்கத்தின் அடிப்படை அலகுகள் என்ன? 


இயக்கத்தின் தோற்றுக் கண் என்ன?

பூச்சிய விதியின் தவிர்க்க முடியாத இயக்கத்தில் - சூழலில் மாற்றத்தைத் தொடர்ந்து அவதானிக்கிறோம். நிலையாய் இருப்பது போலத் தோற்ற மயக்கந்த் தருகிறவையும் அதற்கான முடிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையும் உய்த்தறிகிறோம். மிக இயல்பான செயற்பாடாக விளங்கியோ, விளங்காமலோ இதைச் செய்து வருகிறோம். 

நாம் அறிகிற அனைத்தும் 'இயங்குவதை' அவதானிக்கிறோம்.

விஞ்ஞானத்தோடு ஒப்பிடுகையில் தத்துவத்துக்கு பலமும் பலவீனங்களும் உண்டு. ஒரு உதாரணம் தொகுத்தறிவு முறை. 

தொகுத்தறிவு முறை விஞ்ஞான முறை அல்ல. ஆனால் தத்துவத்தின் பொதுப்பண்பு கண்டறிதலுக்குப் பொருத்தமானது. ஆழமாகச் சொன்னால் தத்துவம் என்பதே தொகுத்தறிவு முறைதான். 

பூச்சிய விதி/முரணின் படி தொகுத்தறிவே தனித்த தன்னுணர்வுள்ள கூறின் கீழிருந்து மேலான 'இயல்பான' 'அறிவு' இயக்கமாய் இருக்கிறது. 

சரி, இது வரை கண்டறியப்பட்ட (தொகுத்தறியப்பட்ட) எல்லாமுமே இயங்குகின்றன. மாறுதல்கள் 'புலனாவதைக்' கொண்டும் தொகுத்தறிவு முறையில் உய்த்தறிந்தும் இதைச் சொல்லுகிறோம்.   

இந்த மாற்றங்களுக்கான அடிப்படைக் கூறு என்ன? 

ஏற்கனவே சொன்ன விதிகளின் சார்பாக பொதுப்பண்புகளை எடுப்பது சிறப்பு. 

இயங்கியலின் எல்லையும் இயங்குவதாக இருக்கிறது. அது எவ்விதம் இயங்குகிறது எனவும் பார்த்தோம்.

படைப்பாளி "படைத்தார்" என்று படைப்பு எல்லை 'நிலைப்பாடு' முன்வைக்கப்படுகிற பொழுது, இல்லை, படைப்பதுவும் இயக்கம் அதுவும் இயக்க எல்லைக்குள் வந்து விடும் என்று மறுத்தே எல்லை வளர்கிறது. 

நிலையை மறுத்தே இயக்கம் நடக்கிறது. 

நிலைமறுப்பே இயக்கம். 

இயக்கமென்பது நிலைமறுப்புப் படிநிலைகளின் தொடரோட்டம். 

தொடரோட்டமாக இருக்கிறது ஆகையால் நிலைமறுத்து வருகிற புதிய நிலையும் மறுக்கப்படுகிறது.

எல்லாவித இயக்கங்களும் நிலைமறுப்பின் நிலைமறுப்புக்களாக இருக்கின்றன. 


இது தொடர்ச்சியாக நடப்பதால் நிரந்தர நிலை என்கிற ஒன்று கிடையாது.

எமது மேம்போக்கான பார்வைக்கு, புலன்களுக்கு நிலைகளாக (states) தெரிகிறவை எல்லாமும் ஏதோ ஒரு இயக்கத்தின் படிநிலைகளே (part of a process) என்பதை உணரத் தலைப்படுகிறோம். 

இயக்கத்தின் படிநிலைகளே எல்லாவித பொருளும் (சக்தி அடங்கலாக), சிந்தனையும் (கருத்தும்). 

அதேவழியில் சிறிய இயக்கங்களைப் பேரியக்கங்களின் பகுதியாக புரிந்து கொள்ளத் தலைப்படுகிறோம்.

முடிவாக இயக்கம் என்கிற பொதுப் பண்போடு ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இயக்கவெளிக்  கூறுகளாக அண்டத்தை அடையாளப்படுத்துகிறோம்.

எல்லாமும்  தொடர்புபட்டவை என்பதற்காக வழமையான 'ஆன்மீகத்தோடு', அத்வைதத்தோடு குழப்பிக் கொள்ள வேண்டாம். இவற்றை உடைப்பது குறித்து பிற்பாடு. 

நாம் அனைத்துக்கும் பொதுப்பண்பு இருப்பதை எடுகோளாகவே கொண்டோம். பூச்சிய விதியின் படி தவிர்க்க முடியாத கட்டாயம் இது.

இப்போது இயக்கம் பொதுப்பண்பு, அதானால் எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்பு உடையவை என்பது சுழல் ஏரணமாகத் (circular reasoning)  தோற்றலாம்.

அல்ல. இயங்கியல் வட்டத்தில் இயங்குவதில்லை. அது சுருளிவிற்களாகவே திசைப்பட்ட இயக்கத்தைக் கொள்கிறது. Could do self-referencing (please challenge if not). 

உதாரணத்துக்கு, 

நிலைமறுப்பின் நிலைமறுப்பு வழியில் முடிந்த முடிபென்று எதுவும் இல்லை.

ஆனால் முடிந்த முடிபென்று எதுவுமில்லை என்பது முடிந்த முடிபாகிறது.

ஒரு செயல், கருத்து அதற்கு எதிரான செயல், கருத்தையும் உள்ளார்ந்தே தோற்றுவிக்கிறது. 

ஒன்றைச் செய்கிற பொழுதே இன்னொன்றையும் (பலவற்றையும்) சேர்த்தே செய்கிறீர்கள். 

"முடிந்த முடிபென்று எதுவுமில்லை என்பது முடிந்த முடிபாகிறது"  என்பது ஒரு படியேற்றக் கருத்து.

தன்னைத்தானே படியேற்றிக் கொள்கிற இயக்கங்கள் பற்றிக் கீழே பார்க்கவிருக்கிறோம்.

இது வெறும் கிடைவட்டமல்ல. வட்டவடிவாகத் திரும்புகிற பொழுதே மேல் நோக்கிப் படியேறுகிறது. 

சுருளிவில் இயக்கத்தைப் பெறுகிறது.

வட்ட இயக்கத்தை அடிப்படையிலேயே  மறுத்து  சுழல் ஏரணங்களை (circular reasoning) இயங்கியல் உள்ளார்ந்து வென்று விடுகிறது.

சுழல் ஏரணங்களில் (circular reasoning) சிக்கி மாண்டு போன வழமையான தர்க்கத்தைக் (formal logic) கேலி செய்தே நாம் இயங்கியல் தர்க்கத்தைக் (dialectical logic) கொண்டு வருகிறோம். 

இவ்விதமான படியேற்றக் கருவிகளை நாம் விளங்கிப் பயன்படுத்தத் தொடங்குவது எமது சிந்தனைத் திறனில் பாய்ச்சலைக் கொண்டுவரும். 

இந்தச் சங்கிலித் தொடரைப் பிடித்துக் கொண்டு இயக்கங்களின் மூலத்தை, ஆக்கக்கூறை, ஆகவும் அடிப்படையான கூறை ஆராய்ந்தால் அதுவும் நிலையற்றதாக, முழுத் துல்லியமாக அறியப்பட முடியாததாகவே இருக்கமுடியும். 

இயங்கியலிலிருந்து பருப்பொருளை வரையறுத்தல் 

தத்துவ மொழியில் பொருள் என நான் இப் பதிவில் எழுதுவது பருப்பொருளே.

பொருள்முதல்வாதத்தை இணைப்பதில் நானறிந்தவரையில் எல்லாவித இயங்கியல் கோட்பாட்டாளர்களிடமிருந்தும் நான்  நேரடியாக வேறுபடுகிறேன். இந்தப் பகுதியை மிக அவதானத்துடன் கடக்கவும். 


இயக்கவெளிக்கு அப்பால் நமக்கு அறியமுடியாதிருக்கிறது. இயக்க எல்லை நாம் 'அப்பால்' நகரமுடியாதவாறு எமது சிந்தனை, செயலை எப்பொழுதும் முந்தி நகர்கிறது.  

இயங்கியல் அறிவைக் கொண்டு இந்த இயக்கத்தை முந்தியோட முடியுமா என்பதே எனது தேடல். இயங்கியலை வளர்த்தெடுப்பதென்பது இயங்கியலை உடைப்பதற்கான செயற்பாடே. 

இயக்கவெளிக்குள் இயக்கத்தின் தோற்றுவாயாக முரணையே நாம் கொள்ளுகிறோம். 

முரண் என்பது உள்ளார்ந்தமாக ஒன்றல்லாத நிலையைச் சுட்டுகிறது.

ஒன்று இன்னொன்றாவதன் அடிப்படையாக இருக்கிறது.

முரண் என்பது ஒன்று இன்னொன்றாகிற (நிலை மறுக்கிற) இயக்கப் பண்பு. 

ஒன்று இன்னொன்றாய் மாறுவதில் பொதுப்பண்பு முரண். அது ஒன்றையும் இன்னொன்றையும் வேறுபடுத்துவதில்லை. 

அதனால் ஒன்றையும் இன்னொன்றையும் வேறுபடுத்த குறைந்த பட்சம் இன்னொரு பண்பு இருந்தாக வேண்டுமே? 

அந்தப் பண்பு தனக்கான பண்புகளைக் கொள்ளத்தக்கதாய் இருக்க வேண்டும்.

பண்பேற்றம் பெறத்தக்க பண்பு அது. இதுவும் ஒரு படியேற்றக் கருத்தியல்.

அந்தப் பண்பு 'பொருள்'.

பண்பேற்றம் பெறத்தக்க அடிப்படையான இயக்கப் பண்பை 'பொருளாக' நாம் வரையறுக்கிறோம்.

எல்லாவற்றையும் இயங்கியலிலிருந்து நான் வரையறுப்பதால் என்னுடையது இயங்கியல் பொருள்முதல்வாதம் அல்ல. 


இயங்கியலிலிருந்து அனைத்தையும் (பொருள், சிந்தனை) வரையறுக்கத் தவறின் என்னுடைய இயங்கியல் தோற்கும். 

ஆன்மீகம், பின்னவீனத்துவம், அமைப்பியல், இறையியல் என எதுவாயினும் , அது விளக்குவதை இயங்கியலிலிருந்து விளக்க முடிய வேண்டும். அவை உருவாக்கிய அத்தனை கருத்தியலையும் இயங்கியல் கொண்டும் உருவாக்க முடிய வேண்டும். அல்லது இந்தத் தத்துவத்தின் போதாமை வெளிப்படும். புதிய அடிக்கோள்கள், தத்துவத்தை ஆக்க வேண்டும். அல்லது விதிவிலக்குகளை ஆவணப்படுத்தி அடுத்தவர் செய்ய உதவுவேண்டும். 


பொருள்முதல்வாதம் பற்றிய தவறான புரிதல்

பொருள்முதல்வாதத்திலிருந்து இயங்கியலை (இயக்கத்தை) அணுகுவது மிகப் பின்னடவைவான பிரயோக அறிவற்ற சிந்தனையையே கொண்டு ஏற்படுத்தி வருகிறது.

இது வரைகாலமும் பொருளும் இயக்கமும் சேர்ந்திருப்பதாக, பொருளில் இருந்து இயக்கத்தை அணுகுவதாக மார்க்சியர்கள் தவறான அடிப்படையில் இருந்திருக்கிறார்கள். இருந்து வருகிறார்கள். 

இயக்கத்திலிருந்து பொருளை அணுகுவது பிரயோக திறனில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்துகிறது.

முதலில் தோன்றியது கருத்தா, பருப்பொருளா எனில் இரண்டுமில்லை. முரணற்ற இயக்கமே முதலில் தோன்றியது.

ஒரு தத்துவத்தை வெல்ல அதைப் பொருத்தமான பிரயோக வெளிக்குள் மட்டறுக்கவேண்டும் என்றேனில்லையா?

கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் இரண்டையும் அவ்விதம் மட்டறுத்து இயங்கியலைப் பழக ஆரம்பிப்போம்.

பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்பவை  கருத்தா, பொருளா முதலில் 'தோன்றியது' என்பது பற்றியதல்ல. 

அவை ஒவ்வொரு கருத்தையும் 'புடம்' போட்டு வேறுபடுத்துவதற்கானது. அவை இயங்கியலின் சிறு கருவிகள். 

இவற்றின் வெளி கருத்து வெளி. செயல் இயக்கத்தைப் பகுத்தல். அவ்வளவுதான்..

குறித்த கருத்தின் இயக்கம், 

பொருள்==> கருத்து.....கருத்து==>பொருளாக இருந்தால் அது பொருள்முதல்வாதச் சிந்தனை.

கருத்து ===> பொருள்.....................பொருள்==> கருத்தாக இருப்பது கருத்துமுதல்வாதச் சிந்தனை. 


அதாவது எங்களது சிந்தனையிலான ஒவ்வொரு கருத்துச் சுழலும் புற அவதானங்களில் ஆரம்பித்து புற ஆதாரங்களால் பொய்ப்பிக்கப்படத்தக்க நிபந்தனைகளில் முடிவடைந்தால் அது பொருள்முதல்வாதச் சிந்தனை.

இடையில் எத்தனை கருத்துநிலைப்படிகளும் இருக்கலாம். சிந்தனை வளர்ச்சியுடன் இவை அதிகரிக்கும். கருத்து பொருளை விட வலிமை பெறும். கருத்து பொருளை முழுவதும் ஆளத் தலைப்பட்டுக் கொண்டே இருக்கும். அத்திசையிலேயே இயங்கும்.  

அப்படி அல்லாதவை கருத்துமுதல்வாதச் சிந்தனைகளும் குழப்ப சிந்தனைகளுமே.

அதாவது வெறுமனே தட்டையாக இருந்து சுழல் ஏரணத்தினுள் மாட்டிக் கொள்ளாமல்  சுருளிவில் இயக்கமாக இருக்க வேண்டும்.

அது மட்டும் போதாது அந்தச் சுருளிவில்லின் அடிப்படை புறநிபந்தனை (பொருள் சார்ந்து) இருக்க வேண்டும். 



பொய்ப்பிக்கப்பட்ட கருத்தைக் காவுவது அறியாமை.

புற நிபந்தனைகள் எதுவும் பொய்ப்பிக்க முடியாத 'நம்பிக்கைகளை' காவுவது அடிப்படைவாதம்/மதவாதம்.

கருத்தை மாற்றாது பொய்ப்பிக்கத் தகுந்த புறநிபந்தனைகளை மாற்றி வருவது பிழைப்புவாதம்.

பொய்ப்பிக்கப் படுகிற புறநிபந்தனைகளை எப்போதும், எதற்கும் வைத்திருந்து கருத்தை அதற்கேற்ப மாற்றுவது அறிவு இயக்கம்.


இயங்கியலில் விஞ்ஞானக் குறியீடுகள் 


விஞ்ஞான மொழியில் சொன்னால், அண்டத்தில் இருக்கிற எல்லாவற்றையும்  குறைந்த பட்சம் இரண்டு விசைகள் தாக்க வேண்டும். 

நிற்க,

'விசைகள்' என்று சொன்னேன். 

விஞ்ஞான வெளியிலிருந்து எண்ணக்கருக்களைத் தத்துவத்துக்கு எடுத்து ஆள்வது எவ்வளவு பொருத்தம்? அதற்கான சரியான முறை இருக்கிறதா? இருந்தால் அது என்ன? 

விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. 

பொருத்தமானவற்றை, பொருத்தம் கருதிப் பயன்படுத்தவேண்டும். 

விஞ்ஞான வெளியிலிருந்து ஒரு எண்ணக்கருவை தத்துவ வெளியில் பாவிக்கிற பொழுது அது தத்துவ வெளிக்குரிய பரும்படி விளக்கத்தையே கொள்ளும். பரும்படியாக இருப்பது அதன் குறைபாடாக இருக்கும். அதே சமயம் பரந்ததாகவும் இருந்து பலம் சேர்க்கும்.

விஞ்ஞான தத்துவ தொடர்பைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல்,

'ஐம்புலன்களால்' அறியத்தக்கது பொருள் என்றெல்லாம் தத்துவ வரையறைகளை அபத்தமாக முன்வைக்கக் கூடாது. 

அண்டத்தில் எழுபது புலனுள்ள தனித்த கூறு எங்கேனும், எப்போதாவது தோன்றினாலும்,  எதிர்காலத்தில் நூற்று இருபதாவது மனிதப் புலனை விஞ்ஞானம் கண்டறிந்தாலும்  தான் தோற்காதிருக்கவே தத்துவம் முயலும். 

வரைவுகள் பரந்த பொருளில் (அர்த்தத்தில்) இருக்க வேண்டும்.

நல்ல தத்துவ உருவாக்கம் அப்படித்தான் இருக்க வேண்டும். 

'இயங்கியல் விஞ்ஞானம்' என்பதில் குழம்பி, இன்றிருக்கிற விஞ்ஞானத் தகவல்களைக் கொண்டு தத்துவ வரையறைகளை ஆக்கக் கூடாது. 

விஞ்ஞான 'முடிவுகள்' (அவை எதுவும் முடிந்த முடிவுகள் அல்ல, நிறுவப்பட்டவையும் அல்ல) தத்துவ வரையறைகளைப் பாதிக்கக் கூடாது

வழிப்படுத்தலாம். தத்துவச் சிந்தனைக்கு உதவலாம். வரைவில் இருக்காது.

'' ஐம்புலன்களால்' அறியத்தக்கது பொருள் ''

பல மனப்பாட மார்க்சிய ஆசான்கள் இவ்விதம் 'கற்பித்துக்' கொண்டிருக்கிறார்கள்.

மார்க்சியத்தை, இயங்கியலைக் 'கற்பிக்க' முடியாது. 

தனக்கான சிந்தனைச் சட்டகத்தை ஆக்கிக் கொண்டு தொடர்ந்து சீர்தூக்கி பார்க்கிற ஒருவரே தன்னுடைய சட்டகத்தையும் மேம்படுத்தி, தத்துவத்தையும் அத் தத்துவத்தை எழுதியவரைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்து கொள்வார். 

விஞ்ஞானத்தின் கருதுகோள், அவதானிப்பு பகுதிகளை வலிமைப்படுத்துவதாகவே தத்துவம் விஞ்ஞான முறையோடு உறவாட வேண்டும். 





தத்துவத்தை விஞ்ஞானத்தோடு இவ்விதம் இணைப்பதன் மூலம் தத்துவம் இரண்டு பண்புகளைப் பெறும்
- விஞ்ஞான முறையை ஆளும்
- விஞ்ஞான முறையினூடு தன்னையும் விஞ்ஞானமாக்கிக் கொள்ளும் (புறநிபந்தனைகளினூடு பொய்ப்பிக்க அனுமதிக்கும்)

விஞ்ஞானத்தைக் கொண்டே விஞ்ஞான பூர்வமாகிற கீழிருந்து மேலான இயக்கம் அத் தத்துவத்தை விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாகப் படியேற்றம் செய்கிறது

விஞ்ஞானங்களின் விஞ்ஞானமான இயங்கியலில் இருந்து மேலிருந்து கீழாக விஞ்ஞானத்தை 'திட்டமாக' ஆளுகிற தன்மை விஞ்ஞான வளர்ச்சியுடன் சேர்ந்தே வளரும். விஞ்ஞானத்தை விடவும் வேகமாகத் தத்துவம் வளரும்.


இயக்கவெளியின் ஆக்கக்கூறுகள் 

ஒன்றுக்குமேற்பட்ட விசைகள் தொழிற்படுகிற (முரண்களைக் கொண்ட)  பண்பேற்றம் பெறக் கூடிய பண்பே ( இதை எனி பொருள் என்று குறிப்போம்) இயங்கியலின் அடிப்படைக் கூறு.


இயக்கத்தின் அடிப்படை.





இது வரைக்கும் ஆக்கக் கூறுபற்றி எழுதி வந்ததே வரிப்படமாக இருக்கிறது. 

புள்ளிக் கோடுகளால் இருப்பது சமனும் எதிருமான முரண்கள். அவை அழியும். 

'சமம்', 'நேரெதிர்' என்பன நிலைப்பற்றவை.  

அதாவது ஒன்று அதற்கே சமமானதல்ல. அ=அ என்பது தவறு. அ சமனல்ல அ என்பது இயங்கியல் தர்க்க அடிப்படை.

 வழமையான தர்க்கம் அ=அ ஐ அடிக்கோளாகக் கொண்டது. அதனால் அது சுழல் ஏரணத்தில் மாட்டிக் கொள்கிறது. 

தொடர்ந்து நிலைமாறுகிறவையே எல்லாமுமும். 



மீட்டல், பின்னூட்டல், படியேற்றல் 


இந்த விளக்கத்துடன் நாங்கள் இதுவரைக்கும் சொல்லிவந்தவற்றைஅதிகமாக விளங்குவோம்.

இவ்விதம் மீட்டிப் பார்க்கிற பொழுது எங்களுடைய தத்துவ உருவாக்கம் இந்தத் தத்துவ உருவாக்க செயன்முறையையே (தன்னைத்தானே) வலிமைப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் உணர முடியும். 

தன்னைத்தானே படியேற்றிக் கொள்கிற இயக்கங்களைப் பற்றி மிக ஆழமாக பார்ப்போம். 

தத்துவ உருவாக்கத்தின் தத்துவம், விஞ்ஞானங்களின் விஞ்ஞானம், சாத்தியக் கூறுகளின் சாத்தியம், வரலாற்றின் வரலாறு, அறிவு பற்றிய அறிவு, சிந்தனை பற்றிய சிந்தனை, ஆய்வு பற்றிய ஆய்வு  என்பதாக எண்ணற்ற படியேற்ற இயக்கங்களை ஆராய்ந்து மிக வலிமையான எண்ணக் கூறுகளை ஆக்கிக் கொள்ளப் போகிறோம். 



நேர்ப்பின்னூட்டங்களை, தன்னைத்தானே உந்தி முன்னேறுகிற கருத்துக்களை ஆக்க முடியும். 

முடிவில்லாது வளருகிற ஒரு இயக்கத்தை எவ்விதம் மறைப்பின்னூட்டம் கட்டுப்படுத்தி 'மறைப்' படி ஏற்றுகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

உதாரணம் - முடிந்த முடிபு என்று எதுவும் இல்லை (முடிவில்லாத வளர்ச்சியை) - என்பது ஒரு முடிந்த முடிபு (கட்டுப்படுத்துகிற படியேற்றம்).

இரண்டுவிதமான படியேற்றங்களும் 'அறிவை' வளர்ப்பதாகவே இருக்கும். 

இயங்கியல் அறிவுக்குத் தோல்வி என்பது இல்லை. 

இயங்கியலைச் சரியாக உள்ளெடுத்த இயங்கியலாளருக்கும் கருத்து வெளியில் தோல்வி என்பதில்லை. 

இந்தப் பதிவில்  இயங்கியல் விதிகள் என்று சொல்லுவதை விட, முரண்கள் என்று சொல்லுவோம்.

பூச்சியவிதியை, அடிக்கோள் முரண் என்றும் சொல்லலாம். இயங்கியலின் எல்லை என்பதை விட இயங்கியலின் எல்லை முரண் என்பது பொருத்தம். 

முரண்பாடுகளற்ற உள்ளிணக்கமான தத்துவத்தை வரைவுபடுத்து பலர் முயன்று தோற்றிருக்கிறார்கள்.

அந்தத் தோல்வியைத் தவிர்க்க நாம் முரண்பாடுகளையே அடிப்படையாக்கி நம் தத்துவத்தை அமைக்கிறோம்.

இயக்கத்தின் அடிப்படை அலகு சுயமுரண் என்று உள்ளார்ந்தமாக ஏற்படுகிற பொழுது மிக வீரியமான சிந்தனைச் சட்டகமும் அணுகுமுறையும் (தத்துவம்) உருவாகி வருவதை உணர்ந்து மேலும் உற்சாகமடைகிறோம். 

மேலும் வலிமைப்படுத்த தொடர்கிறோம். 

இப்போது  பூச்சியவிதியை  சுயமுரண் அலகுகளால் ஆன,  'தமக்காகத் தாமே' இருக்கிற, வேறு 'நோக்கில்லாத' அண்டத்தை தமது 'நோக்குகளுக்காக' வளைக்கிற செயற்பாடாகப் புரிந்து கொள்ளலாம். 

எனின் 'நோக்கு' எவ்விதம் இயக்கவெளிக்குள் தோன்றியது?


சாத்தியக்கூறுகளின் சாத்தியம்


இயக்கவெளியின் அடிப்படைகள் சுயமுரண்கூறுகள். முழுத் துல்லியம் என்பது சாத்தியமற்றது. 

விதிவசவாதம் (fatalism), நியதிவாதம்/துணிபுவாதம் (determinism)...
இந்தமாதிரியான வாதங்களை இயங்கியல் மிக எளிதாக அடித்து விடுகிறது. 

இயக்கவெளியில் எல்லாமுமே சாத்தியக் கூறுகள்தான். 

சுயமுரண்பாடுகளான ஆக்கக் கூறுகள் தொடர்ந்து இயங்கி, வெவ்வேறு சேர்மானங்கள், இணைப்புக்களை ஆக்கிக் கொண்டே இருக்கின்றன. 

ஒன்றைச் செய்கையில் அதற்கு எதிரானதும் (எதிரானவையும்) நடந்தேறும் என்று பார்த்தோம்.

இயக்கமும் அதனளவில் விதிவிலக்கல்ல. 

இயக்கம் அதாவது நிலைமறுப்பின் நிலைமறுப்பே நிலைகளையும் ஏற்படுத்துகிறது. 

இயங்குகிற பண்பு இயங்காதிருக்கிற பண்பையும் தோற்றுவிக்கிறது. 

இயக்கத்தை எதிர்த்து இயக்கக் கூறுகள் சண்டித்தனம் செய்கின்றன. அது இயக்கத்தின் உள்ளார்ந்த பண்பே அன்றி 'நோக்கு' அல்ல. 

இயக்க அலகுகள் பல்வேறு சேர்மானங்களில் இயக்கத்தை எதிர்க்கிறவையாக தேக்கங்களாக மாறுகின்றன. 

திண்மம், திரவம், வாயு, சக்தி, சடம்  என்றெல்லாம் நாம் பகுத்துக் காண்கிற எல்லாவித நிலைகளையும் இயக்கம் எடுக்கிறது.

இயக்கம் தனது பண்புகளுக்கான எதிர்ப்பண்புகளையும் தோற்றுவிப்பதால்,

எதுவும் சமம் அல்ல என்றாலும், 'சமம்' போன்ற தோற்றப்பாடுகள் ஏற்படுவதைப் பார்கிறோம். எதுவும் துல்லியமாகச் சமமல்ல. இருந்தாலும் 'போதுமான' சமநிலைகளைப் பார்க்கிறோம்.

சுயமுரண்பாட்டு ஆக்கக் கூறுகள் எழுமாற்றாக இயங்கிக் கொண்டிருப்பதாகப் பார்த்தோம். ஆனால் வேண்டிய அளவுக்கு பல 'ஒழுங்கான' விசயங்களையும் நாம் சூழலில் காண்கிறோம். 

எழுமாற்றிலிருந்து ஒழுங்கு வருவதையும் பூச்சிய விதியின் இயக்கத்தில் கண்டிருக்கிறோம். ஒழுங்கைக் கொண்டுதான் நாம் கோட்பாடு, விதிகளை ஆக்குகிறோம். 

முரண் என்பது ஒன்று இன்னொன்றாகிற (நிலை மறுக்கிற) இயக்கப் பண்பு. 

பொருள் என்பது பண்பேற்றம் பெறுகிற இயக்கப் பண்பு என்று நான் வரைவு செய்து கொண்டேன்.

பொருள் இயக்கத்துடன் பண்பை மாற்றிக் கொண்டே வருகிறதை 'முதலில்' அவதானிக்கிறோம்.

அரதப் பழைய உதாரணம் - வெப்பநிலையுடன் பனிக்கட்டி உருகி, திரவமாகி, கொதித்து ஆவியாகுவது. 

வெப்பம் (சக்தி - பொருளின் ஒரு நிலை) உடன் வெப்பநிலை (பொருளின் ஒரு பண்பை அளவிடுகிற அலகு) அதிகரித்து, அதாவது இயக்கம் அதிகரித்து நீர் (பொருளின் ஒரு நிலை) புதிய பண்புகளை எடுத்துக் கொள்கிறது. 

ஒரு பண்பு 'அதிகரித்து' இன்னொரு பண்பாக மாறுகிறது. 

அளவு மாற்றம் ====> பண்பு மாற்றம்.

ஒரு பண்பின் அளவு மாற்றம் ====>  இன்னொரு பண்பு 

அதிகரிப்பதை அளக்க அலகுகள் வைத்திருக்கிறோம்.

பொருளின் பண்புமாற்றம் என்பது அதன் எல்லாப் பண்புகளும் மாறுவதல்ல. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பண்புகள் மாறும். பொதுப்பண்புகளும் இருக்கும். உதாரணத்துக்கு பனிக்கட்டிக்கும், நீராவிக்கும் வெப்ப உள்ளுறை உண்டு. ஒரே அலகினால் (வெப்பநிலை) அளக்க முடியும். 

இயக்கத்திலிருந்தே நாம் அனைத்தையும் வரைவு செய்தோம்.

இயக்கத்தின் அதி உள்ளார்ந்த பண்பு சுயமுன்னேற்றம். அது இந்தபதிவில் நான் கொஞ்சம் இலகுபடுத்தி எழுதிக் கொண்டிருப்பது போல சுயமுரண் அல்ல. மற்றைய பதிவை வாசித்து அறியலாம்.

இயக்கத்திலிருந்து உருவான அனைத்திலும் எல்லாவித பண்புமாற்றங்களிலும் மாறாத பண்பாக இயக்கமும், பண்புமாற்றப் பண்பும் இருக்கின்றன. 

எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்புபட்டதாக இருக்கின்றன (நியதிவாதமல்ல). தொடர்பு சாத்தியப்பாடுகளின் வழியிலானது. 

ஒன்றை வரைவுபடுத்துவது அது தவிர்ந்த ஏனையவற்றையும் வரைவுபடுத்துகிறது. முரண்களாக இருந்தாலும் ஒன்றையொன்று அடையாளப்படுத்துவதில் இணக்கம் காணுவனவாக இருக்கின்றன. 

ஒரு இயக்கம் அதற்கு எதிரானவற்றையும் தோற்றுவிக்கிறது.  முரண் கூறுகளின் எதிர்நிலை, ஒத்த நிலைகளையும் ஏற்படுத்துகிறது. 

கூறுகள் இணைகிற பொழுது அதன் வடிவமும் (மேற்பரப்பும்) உள்ளடக்கமும் முரண்பாடுகளாக இருக்கின்றன. 

சுருங்கச் சொன்னால் எல்லாவித உறவுகளும் முரண்பாடுகளாக, முரண்பாடுகளின் அடிப்படையில் இணக்கமடைகின்றனவாக இருக்கின்றன. 

நோக்கு 

காலம் என்பது இயக்கம் சார்ந்தது. இயக்கத்திலிருந்தே காலம் என்கிற எண்ணக்கரு பிறக்கிறது.

இவ்விதம் வெவ்வேறு சாத்தியங்களில் 'நெடுங்காலம்' இயக்கங்கள் உருவாக்கிய 'நிலைத்த' பண்புகள், பண்புமாற்றங்களைச் சந்தித்து ஒரு கட்டத்தில் இயக்கத்தை எதிர்க்கிற புதியதொரு பொருளாக மாறுகின்றன.

உயிர். 

உயிர் என்பது தமக்குத் தாமே என்று அடைபட்டு 'நோக்கற்றதாக' இருந்த பண்பு (நோக்கு) வெளியே வந்த விபத்து.

உயிர் இயக்கங்களும் ஏனைய நோக்கற்ற இயக்கங்களும் நெடுங்காலம் பல சேர்மானங்களில் உறவாடி, புதிய பண்பேற்றம் நடக்கிறது.

நோக்கை நோக்கத்தக்க சுயபடியேற்றக் கூறு.

தன்னுணர்வுள்ள, தன்னுடைய நோக்கை உணர்ந்து கொண்டு ஆராய்கிற கூறு.

மனிதர்கள்.

இந்தத் தன்னுணர்வுள்ள கூறுகள் தம்மையும், இயற்கையையும் ஆராய ஆரம்பிக்கிறார்கள். 


நிலைப்பின் நிலைப்பு (உறுதியின் உறுதி, assertion of assertion )

ஒழுங்கீன எழுமாற்று இயக்கம் பண்புமாற்றங்களினூடு படியேறி ஒழுங்கைத் தருவது போல, 

சமமற்ற அடிப்படைகளிலிருந்து பண்புமாற்றங்களினூடு படியேறி சமம், சமச்சீர் இவையெல்லாம் வளர்வது போல, 

எதிர்ச்சக்திகள் ஒன்றை ஒன்று அடையாளப்படுத்திக் கூட்டாவது போல,

தனக்குத்தானே இருக்கிற நோக்கற்ற இயக்கம் இடைவிடாத பண்புமாற்றங்களின் விபத்தினூடு நோக்கைத் தருகிறது. 

அதைப் போல நிலைமறுப்பின் நிலைமறுப்பு இயக்கத்தின் தொடர்ந்த பண்புமாற்றம் நிலைப்பின் நிலைப்புக்கான வெளியையும் உருவாக்கிக் கொள்கிறது.

உழைப்புவெளியே மேம்பாடே ஓய்வு வெளியை மேம்படுத்துவது போல,

நிலைமறுப்பின் நிலைமறுப்பினூடுதான் (negation of negation) நிலைப்பின் நிலைப்பைப் (assertion of asseration) புரிந்து கொள்ளவும் செயலாற்றவும் வேண்டும்.

நிலைப்பின் நிலைப்பினூடு பல சீர்திருத்தங்கள் செய்ய முடியும். இவ்விதம் செய்து வருகையில் நிலைப்பின் நிலைப்பு வெளியும் அதிகரித்து வரும்.

நிலைப்பின் நிலைப்பு வெளி அதிகரிக்க வேகத்தைக் காட்டிலும் அதிக மாற்றம் கட்டாயமாகிற பொழுது பெரும் பண்பு மாற்றம் (சமூகப் புரட்சி) நடந்தேறும். 

நிலைமறுப்பின் நிலைமறுப்பு அடிப்படைகளின் மீது கட்டமைந்ததே நிலைப்பின் நிலைப்பு. 

போராட்டங்களால் எதுவும் கிடைக்காது என்கிறகருத்துமுதல்வாதக் கூறை  (assertion of assertion)  முழுவதுமாக இவ்விதம் தோலுரிக்க முடியும். 

ஆனால் அதை ஆழமாகப் புரிந்து செய்ய வேண்டும்.

நிலைப்பின் நிலைப்பின் மீதுதான் நிலைமறுப்பின் நிலைமறுப்புக்கான வெளியும் கட்டமைகிறது. இந்த அவத்தை மறுபடி மறுதலையாக மாறுகிறது. 


- தொடரும் 





முதற்கட்டப் பயிற்சி 


இது வரைக்கும் நாம் பார்த்த தத்துவ அடிப்படைகளைச் சுயபரிசோதனை செய்து கொள்வோம்.

முதற்கட்டமாக சிந்தனைத் தளத்தில் ஆரம்பிக்க வேண்டுகிறேன்.

எங்களுடைய சிந்தனை முறையும் புறநிலையும் முரண்படுகிற பொழுது முரண்மைப் போலிகள் (Paradoxes) தோன்றுகின்றன. 

முரண்பாடுகளை அடிப்படையாக்கிய எங்களது சிந்தனையைக் கொண்டு எல்லாவித முரண்மைப் \ போலிகளையும் உள்ளிணக்கத்தோடு  தீர்க்க முடிய வேண்டும்.

அல்லது தத்துவத்தில் குறை, போதாமை உண்டு. புதுப்பிக்கப்பட வேண்டும். 

தீர்க்கப்பட முடியாத ஒன்றை இனங்காணின் தெரியப்படுத்துங்கள். 



அறிவு வளர்ச்சியை இயங்கியல் கண்ணோட்டத்தில் வரிப்படங்களாக உருவாக்குங்கள்.

கற்றல் செயற்பாடு. சமூகத்திலான அறிவுப் பாய்ச்சலும் அதன் விளைவான பரம்பலும்.

மனித வரலாற்று இயங்கியலில் (வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது தவறான பதம்)  இரண்டு பதிவுகளிலும் இருந்து பெற்ற அறிவை உபயோகித்து இயக்கங்களை இனங்காணுங்கள்.

எல்லாவித மனித அறிவுத் துறை, அறிவின் அறிவு, ஏனைய தத்துவங்களை மட்டுக் கட்டி அவற்றின் வளர்ச்சிக்கும் அதனூடு மனித சமூகத்துக்கும் உதவுங்கள்.

பல மணித்துளி தனிப்பட்ட நேரத்தை நான் இயங்கியலைத் திருத்தியமைப்பதிலும் புறவயப்படுத்துவதிலும் செலவளித்துவிட்டேன்.

சில வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறேன்.

இயங்கியலைப் புரிந்து கொண்டு மிகக் காத்திரமான விமர்சனங்களை வைத்து, கருத்து வெளி உழைப்புச் சுரண்டலைக் குறைத்து, கருத்து இயக்க வினைத்திறனை அதிகரிக்க வேண்டுகிறேன்.

Nila
01/03/2018